Friday, 31 August 2012

தீராக் காதல் 14“உங்களை நாலு நாள் கஸ்டடியில விசாரிக்கறதுக்கு கோர்ட் பர்மிஷன் குடுத்துருக்கு வெங்கட்.” என்றார் ஷ்யாம் சுந்தர். 

‘வழக்கே பொய்.. இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது ? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம்   வளைக்கிறார்கள் ? நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் ?  அல்லது இவர்கள் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நம்புவார்களா ?   நான் தவறு செய்யவில்லை என்று சொல்வதற்கு இருந்த முக்கியமான சாட்சியைக் கொன்று விட்டார்கள்.  பாலகிருஷ்ணன் இறக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? இந்நேரம் உண்மையைச் சொல்லியிருப்பாரே.. எவ்வளவு வசதியாக பாலகிருஷ்ணனைக் கொன்று விட்டு என்னை கொஞ்ச கொஞ்சமாக கொல்கிறார்கள்…   ’

வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, வண்டியில் ஏற்றி சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.  

ஏற்கனவே இருந்த அறையில் அடைக்காமல் வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.   அது ஒரு சிறிய அறை. அங்கே இரண்டு நாற்காலிகளும் ஒரு டேபிளும் இருந்தன.   நாற்காலியில் அமரச் சொன்னார்கள்.   இரண்டு மணி நேரம் கழித்து இரவு உணவு வந்தது.  இரண்டு மணி நேரமாக தனியாக அமர்ந்திருந்தேன்.   எந்த விசாரணையும் நடக்கவில்லை.   பிறகு ஷ்யாம் சுந்தர் வந்தார். 

“சார்.. என்னை இந்த கேசுல இருந்து மாத்திட்டாங்க..  இனிமே நான் உங்கள பாக்க மாட்டேன்.    எனக்கு எல்லா உண்மையும் தெரியும்.  யாரு சொல்லி இது நடக்குதுன்னும் எனக்குத் தெரியும். இப்பக் கூட உங்களை இங்கே அழைச்சுட்டு வந்துருக்கறது டார்ச்சர் பண்றதுக்காகத்தான்.  என்னால டார்ச்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன்.   நான் உங்களை நடத்துன மாதிரி இனிமே நடத்த மாட்டாங்க.   டார்ச்சர் பண்றதுக்காக லோக்கல் போலீஸ்லேர்ந்து ஆட்களை கூட்டிட்டு வந்தாலும் வருவாங்க.   நான் வெளியில போயி உங்க அட்வகேட்டுக்கு தகவல் சொல்லிட்றேன்.    என்னால அவ்வளவுதான் சார் பண்ண முடியும்.    ஐ யம் ரியல்லி சாரி.“

அவருக்கு பதில் சொல்லக்கூடத் தோன்றவில்லை.  டார்ச்சர் என்றதும், சினிமாவில் போலீஸ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.  நான் பேங்க் மேனேஜர் அல்லவா… அப்படியா அடிப்பார்கள்… பேங்க் மேனேஜரென்பதால் அல்லவா இது வரை என்னை மரியாதையாக நடத்தினார்கள் என்று நினைத்து வந்தேன்.  இந்த ஆள் போய் விட்டால் நம்மை என்ன பாடு படுத்துவார்கள் ?   பயம் உடல் முழுக்க பரவியது.   யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாததால் ஒருவரிடமும் இதைச் சொல்லி புலம்பக் கூட முடியாதே..

ஷ்யாம் சுந்தர் கிளம்பிப் போய் விட்டார்.    அவர் போன அறை மணி நேரத்தில், அந்த அறையில் இருந்த இரண்டு ஏசிக்களும் இயங்கத் தொடங்கின.    இந்த நேரத்தில் எதற்கு ஏ.சி.. ?

சிறிது நேரத்தில் பெரிய மீசை வைத்த ஒருவர் உள்ளே வந்தார். 

“நீதான் வெங்கட்டா ?“
“ஆமாம் சார்.. “

சாலரி லோன் வேணும் சார் என்று என்னிடம் கெஞ்சிய காவல்துறையினரின் நினைவு வந்தது.   அப்போது நான் கொடுப்பவன்.  இப்போது பெறுபவன்.

“பேன்ட் சட்டையெல்லாம் கழட்டு.. “

டார்ச்சர் என்று ஷ்யாம் சுந்தர் சொன்னது நினைவுக்கு வரவும், மறு பேச்சு பேசாமல் கழற்றினேன்.  நான் ஜட்டியோடு நிற்பதை உறுதி செய்ததும்,  என் பேன்ட் சட்டையை கையில் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் அந்த மீசை.

பத்து நிமிடத்தில் குளிர் தாக்கத் தொடங்கியது.  விளக்கும் அணைக்கப்பட்டது.    விளக்கு அணைத்ததும் குளிர் அதிகமானது போல இருந்தது.   டேபிளுக்கு அடியில் சென்றேன்.   அங்கேயும் அதிகமாக குளிர்ந்தது.  தரை முழுவதும் சில்லென்று மாறியது.  அந்த சிறிய அறையில் இரண்டு ஸ்ப்ளிட் ஏசிக்களை பொறுத்தியது இதற்காகத் தானோ… ?    உடல் நடுங்கியது.   ஏ.சிக்கு நேர் கீழே உட்கார்ந்தால் எதிர்ப்பக்கத்திலிருந்த ஏசி காற்றை நேராக வீசியது.  எந்தப்பக்கம் நகர்ந்தாலும் குளிர் அதிகமாகிக்கொண்டே போயிற்று.   

அறை முழுவதும் நகர்ந்துகொண்டே இருந்தேன்.    உடல் நடுக்கம் நிற்காமல் அதிகமாகிக் கொண்டே இருந்தது.  ஏசியை கட்டுப்படுத்தலாம் என்று பார்த்தால் எட்ட முடியாத உயரத்தில் இருந்தது.  கை விரல்கள் விரைத்துப் போனது போல மடக்குவதே சிரமமாக இருந்தது.  மேசையை இழுத்து அதை எட்டலாம் என்றால் மேசையை நகர்த்த முடியாத அளவுக்கு குளிர் நடுக்கியது.   மேசையின் கால்களை கையால் பிடிக்க முடியவில்லை.  அதைப் பிடிக்க முயற்சி செய்யும்போதே கை நடங்கியது.  குளிர் அதிகமாக அதிகமாக சிந்தனையே மரத்துப் போனது போல இருந்தது.   சிந்தனை செய்ய மூளை நிறைய சிரமப்படுவது போல இருந்தது.  எவ்வளவு நேரம் நகர்ந்து கொண்டே இருந்தேன் என்பது தெரியவில்லை.   நகர முடியாமல் சோர்ந்து ஒரு மூலையில் சாய்ந்தேன். 
வெளிச்சம் வந்தது போல இருந்தது.  கதவைத் திறந்து கொண்டு இன்னொருவர் வந்தார்.  

“ரஞ்சித்….“ என்று யாரையோ அழைத்தார்.  “யாருய்யா இப்படிப் பண்ணது.. ட்ரெஸ்ஸைக் குடுய்யா…“ என்றார்.  அவசர அவசரமாக ட்ரெஸ் என் மேல் வீசப்பட்டது.  “போட்டுக்கங்க சார். டாய்லெட் போயிட்டு வாங்க.  ப்ரஷ் பண்ணிக்கங்க.  ப்ரேக் பாஸ்ட் கொண்டு வரச் சொல்றேன்“ என்றார்.   அவன் பேசியதிலேயே போலித்தனம் தெரிந்தது. அவன் உண்மையாகப் பேசவில்லை என்பதும் தெரிந்தது. 

ட்ரெஸ்ஸை மாட்டிக் கொண்டு உணவும் அருந்தி முடித்த ஒரு மணி நேரத்தில் வழக்கறிஞர் வந்தார்.  வழக்கறிஞர் வந்தபோது வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர்.   நடந்தது அத்தனையையும் சொன்னேன்.  

“நான் இம்மீடியட்டா உங்களுக்கு கஸ்டடி கொடுத்த ஜட்ஜுகிட்ட பெட்டிஷன் போட்றேன். அங்க ரெஸ்பான்ஸ் இல்லன்னா, ஹைகோர்ட்டுல ஹேபியஸ் கார்ப்பஸ் மூவ் பண்றேன்.  இன்னும் மூணு நாள்தான்.  அதுக்குள்ள ஏதாவது ஆர்டர்ஸ் கிடைக்குதான்னு பாக்கறேன். நான் கௌம்பணும்“ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்தபோது, எனக்கு காலை உணவு வழங்குகிறேன் என்று சொல்லிய நபர் வந்தார்.  வக்கீல் அவரைப்பார்த்து கோபமாக, “என்ன சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க… யார் குடுத்தா உங்களுக்கு இந்த அதிகாரத்தை… கஸ்டடியில துன்புறுத்த மாட்டோம்னு சொல்லித்தானே ஆர்டர்ஸ் வாங்கனீங்க…  நான் இதை சும்மா விட மாட்டேன் சார்.  இது பெரிய ஹ்யூமன் ரைட்ஸ் வயலேஷன்…  யு வில் ஃபேஸ் தி கான்சிக்வென்சஸ்* என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

வக்கீல் அப்படிப் பேசியது தெம்பாக இருந்தது.   அவர் போனதும் மீண்டும் பழைய அறையிலேயே அடைத்தனர்.  ஆடைகளை களையச் சொல்லவில்லை.  வக்கீல் பேசியது வேலை செய்திருக்கிறது என்று நினைத்து சற்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.   ஒரு மணி நேரம் கழித்து அதே நபர் திரும்ப வந்தார்.   “சார் ட்ரெஸ்ஸைக் கழட்டி குடுக்கறீங்களா“ என்று கேட்டார்.

“வக்கீல் டார்ச்சர் பண்ணக்கூடாதுன்னு சொன்னாருல்ல சார்.. “ என்று சன்னமான குரலில் சொன்னேன்.

“கழட்டறீங்களா… இல்லை வேற ஆளை வரச் சொல்லவா ?“

எதுவும் பேசாமல் கழற்றினேன்.  இரவு முழுவதும் குளிர் நடுக்கத்தோடு கழிந்தது.   நேரம் என்ன ஆகிறது என்பதே தெரியிவில்லை. முதல் நாள் நடந்த அதே சடங்குகள் காலையிலும் நடந்தன.  

விடிந்த ஒரு மணி நேரம் கழித்து, பரபரப்பு தொற்றிக் கொண்டது போல அதிகாரிகள் என் அறைக்குள் நுழைந்தார்கள்.  ஏய், வா போ என்ற பேசிக்கொண்டிருந்த அதே அதிகாரி “சார் கொஞ்சம் ட்ரெஸ் பண்ணிக்கங்க சார்” என்றது வித்தியாசமாக இருந்தது.  நேற்று வக்கீல் வந்தபோது இந்த மரியாதை இல்லையே… சீனியர் வக்கீல் யாராவது வருகிறார்களா ? எதற்காக இந்த திடீர் மரியாதை ?

சற்று நேரத்தில் வேனில் ஏற்றினார்கள்.  வாகனம் நேரே உயர்நீதிமன்றம் சென்றது.  வண்டியை உயர்நீதிமன்றத்தின் உள்ளே இருந்த பழைய காவல்நிலையம் அருகில் நின்றது.   வெளியே கருப்பு கவுன் அணிந்த வழக்கறிஞர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.  அருகே மற்றொரு போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது.   அதில் இருந்த கைதிகளிடம் உறவினர்கள் போலத் தோற்றமளித்தவர்கள் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் வந்திருக்கிறேன்.   ஒரு நண்பர் அழைத்தார் என்பதற்காக.    அப்போதெல்லாம், இதே நீதிமன்ற வளாகத்தில் ஒரு கைதியாக வருவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை.  ஒரு மணி நேரம் கழிந்தது.  

திடீரென்று என்னை வாகனத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார்கள்.   என்னை ஆடைகளை அவிழ்க்கச் சொன்ன அதிகாரி என் அருகே வந்தார்.   “சார் உங்களுக்காக கல்யாண சுந்தரம்னு ஒருத்தர் ஹேபியஸ் கார்ப்பஸ் தாக்கல் பண்ணிருக்கார்.  அதுக்காகத்தான் உங்களை ப்ரொட்யூஸ் பண்ணச் சொல்லிருக்காங்க.   உங்களை டார்ச்சர் பண்றோம்னு அலிஜ் பண்ணிருக்காங்க.  எதையும் மனசுல வச்சுக்காதீங்க சார்.” என்றார்.

'இரவு முழுவதும் ஜட்டியோடு குளிரில் நடுநடுங்க படுக்க வைத்து விட்டு … ….. ….. எப்படி மனசு வருகிறது ?'

அந்த ஆளுக்கு பதில் சொல்லாமல் முறைத்தேன்.   அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.    சிவப்பு நிறக் கட்டிடங்களாக இருந்தன.    என்னைச் சுற்றி நான்கு பேர் நடக்க நான் நடுவில் அழைத்துச் செல்லப்படுவதை அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர்.   இரண்டு மாடிகள் ஏற்றி 4 என்று எண்ணிட்ட நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினார்கள்.  
என்னை நேற்று சந்தித்த வழக்கறிஞர் அருண் வெளியே வந்து என்னைப் பார்த்தார்.   “சார்.  ஜட்ஜ் வீட்டில போயி மென்ஷன் பண்ணினோம்.  உடனே இன்னைக்கு மேட்டரை எடுத்துக்கிட்டாங்க.  இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். ஒரு வேளை ஜட்ஜஸ் உங்களை கூப்பிட்டுக் கேட்டாங்கன்னா, என்ன நடந்ததோ அதை பயம் இல்லாமல் சொல்லுங்கள்.“ 

“சார் இன்னும் ரெண்டு நாள் கஸ்டடி இருக்கு சார்.  நான் அவங்க கூடத்தான் போகணும்.“

“பயப்படாதீங்க சார்.  அதுக்குத்தானே இந்த பெட்டிஷனே… டோன்ட் ஒர்ரி.  நம்ப சீனியர் பாத்துக்குவார்.  இந்த ஜட்ஜும் நல்ல ஆளு.  ஹ்யூமன் ரைட்ஸ் வையலேஷனை ரொம்ப சீரியஸா பாக்கிறவர்.  இந்த மாதிரி டார்ச்சர் பண்ண பல பேர் மேல ஆக்ஷன் எடுக்க உத்தரவு போட்டுருக்கார்.   உங்களை பண்ண டார்ச்சரை கண்டிப்பா சீரியஸா எடுத்துக்குவார்.  நிச்சயம் ரிலீஃப் கிடைக்கும்“ என்று அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது. 
ஐந்து நிமிடத்தில் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.    அந்த பெரிய ஹால் இரண்டாக தடுக்கப்பட்டிருந்தது.  பின்புறத்தில் பார்வையாளர்களுக்காக பென்ச் போடப்பட்டிருந்தது.   முன்பக்கத்தில் குதிரை லாட வடிவில் மேசை இருந்தது.  அதைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் வழக்கறிஞர்கள் அமர்ந்து இருந்தார்கள்.  

வழக்கறிஞர் அருண். நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக இருந்த நாற்காலியில் தலை நரைத்த வயதான ஒருவர் இருந்தார்.  என்னை ஓரமாக நிற்க வைத்தார்கள்.   என்னோடு மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்த போலீஸ் காரர்கள் தள்ளி நின்றனர்.  வழக்கறிஞர்கள் பேசுவது மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.  துல்லியமான நிசப்தம்.  

“ஐடெம் நம்பர் 25.   ராஜராஜன்“ என்று ஒரு பெண் அழைத்தார்.   அவர் அழைத்ததும், அருண் முன்பாக உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் எழுந்தார்.   ஒருவர் கூட தமிழில் பேசவில்லை.  ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய ஒரு தேசத்தில் வந்திறங்கியது போல இருந்தது. 

“மை லார்ட்… திஸ் ஈஸ் ய கேஸ் ஆப் ப்ரூட்டல் டார்ச்சர்“ என்று கணீரென்ற குரலில் தொடங்கினார்.   என் கட்சிக்காரரின் நண்பர் ஒரு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.   அவர் மீது சிபிஐ பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து விசாரணை என்ற பெயரில், மனிதத்தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்து வருகிறார்கள்.  அவரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.“ என்றார்.

கண்ணாடி அணிந்து தலை வழுக்கையாக இருந்த ஒரு நீதிபதி, “வாட் ஈஸ் தி அலிகேஷன் அகெய்ன்ஸ்ட் ஹிம் ? “ என்று கேட்டார். 

“அவர் பணியாற்றிய வங்கியில் இருந்த ஒரு லாக்கரில் இருந்து 12 லட்ச ரூபாயை கையாடல் செய்து விட்டார் என்று குற்றச்சாட்டு“ என்றார்.
இதைக் கேட்டதும், நீதிபதி முகத்தில் எரிச்சல் தெரிந்தது. 

“இது போன்ற நபர்களை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?  வங்கியில் பணம் பத்திரமாக இருக்கும் என்று நினைத்து மக்கள் பணத்தைப் போடுகிறார்கள்.  இது போன்ற நபர்கள் பணத்தை கையாடல் செய்து விட்டு, சித்திரவதை செய்கிறார்கள் என்று நாடகமாடி நீதிமன்றத்தை ஏமாற்றுவார்கள் …. அதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா ?  நீங்கள் இது போன்ற வழக்குகளை எடுத்து வந்து, எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா ?  இது போன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டாமா ?“

என் வக்கீல் அருணின் முகம் இருண்டது.  

நம்பிக்கையோடு வந்த எனக்கு உள்ளுக்குள் ஏதோ தகர்ந்தது.

தொடரும்

Wednesday, 29 August 2012

தீராத காதல் 13
‘சிங்காரவேலு சார்பில் பேசிய அந்த ஆர்.கே.என்டர்பிரைசஸ் காரனின் போன் நம்பர் வீட்டில் இருக்கிறது. வெளியில் போனதும் அவனிடம் பேசி நான் உங்கள் வழிக்கே வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடலாமா ?’

ச்சே… என்ன நினைப்பு இது.. ?  இதற்காகவா இப்படி ஒரு போராட்டம் ?  சிங்காரவேலு காலிலேயே விழுந்திருக்கலாமே… நான் படித்த மார்க்சும் சே குவாராவும் இதையா சொல்லிக்   கொடுத்தார்கள் ? பாரதி கோழையாகவா கற்றுக் கொடுத்தான் ?  இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்தாலும் அஞ்சக் கூடாது என்றல்லவா சொல்லியிருக்கிறான் ?  சிங்காரவேலுதான் உலகமா என்ன ?  ச்சீ.. அந்த நினைவு வந்தது அருவறுப்பாக இருந்தது.

பூகம்பத்தில் சிக்கிய பூச்செடி போல ஆகிவிட்டது என் வாழ்க்கை.  இதோ என்னோடு படுத்திருக்கும் அத்தனை பேரும் என்னை சந்தேகத்தோடு அல்லவா பார்க்கிறார்கள் ? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்து விட்டு சிறைக்கு வருகையில், வரும் அத்தனை பேரும் குற்றம் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்று நினைப்பது இயல்புதானே ?

இங்கே என்னோடு படுத்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் இச்சிறைக்கு வந்திருக்கிறார்கள்.   ஆனால் நான் ….. ? ஒரு உயரிய நோக்கத்துக்காக அல்லவா வந்திருக்கிறேன்… ..  … நான் செய்யாவிட்டால் சிங்காரவேலு பதவியை ராஜினாமா செய்திருப்பாரா …   வேறு யாராவது சிங்காரவேலுவை எதிர்த்து இப்படிச் செய்யத்தான் துணிந்திருப்பார்களா… இதனால் ஏற்பட்ட விளைவுகள் நான் எதிர்பாராதது என்றாலும், இதற்காக வருத்தப்பட என்ன இருக்கிறது ?  பெண்ணைச் சீரழித்தேனா… தாலியறுத்தேனா… அல்லது இவர்கள் சொல்வது போல வங்கிப் பணத்தைக் கையாடினேனா ?  அல்லது சிங்காரவேலு போல  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தேனா….  சிங்காரவேலுவே வெட்கப்படாதபோது நான் எதற்காக வெட்கப்பட வேண்டும் ?    வெட்கப்பட்டு புழுங்கும் அளவுக்கு என்ன செய்து விட்டேன்…’

ஓரளவுக்கு தெளிவு பிறந்தது போல இருந்தபோது மணி என்ன என்று பழைய ஞாபகத்தில் தலைமாட்டில் கைகள் செல்போனைத் தேடின…  தலையணைக்குப் பதிலாக தரையில் கை பட்டவுடன் இது சிறை என்பது உறைத்தது…  எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் ஆறு மணிக்கு எனது அறையில் இருந்தவர்கள் ஒவ்வொருவர் பெயராக அழைத்தான் ஒரு சக கைதி. எனக்கு முன்னால் இருந்தவர்கள் அவர்கள் பெயரை அழைத்ததும் கையை உயர்த்தினார்கள். நானும் என் பெயர் அழைக்கப்பட்டபோது கையை உயர்த்தினேன்.  பெயர் அழைத்தவனை ஆல்ட்டி என்று அழைத்தார்கள். ஒவ்வொரு ப்ளாக்குக்கும் ஒரு ஆல்ட்டி இருப்பானாம்.  அவன் ஏறக்குறைய பள்ளியில் உள்ள வகுப்பு லீடர் போல.   ஆசிரியருக்கு உதவி செய்யும் வகுப்பு லீடர் போல, அந்த ஆல்ட்டி சிறைக் காவலர்களுக்கு உதவி செய்தான்.  இது என்ன ஆல்ட்டி என்பது புரியவில்லை ?  எப்படி வந்திருக்கும் இந்தப்  பெயர் ?

சிறிது நேரத்தில் கதவைத் திறந்து விட்டார்கள். நானும் துண்டை எடுத்துக் கொண்டு, பேஸ்டையும் ப்ரஷையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.  வாயிலில் நின்றிருந்த காவலர், “என்ன கேசு“ என்றார்.  அதே பதிலைச் சொன்னேன். இவர் பணியில் மூத்தவர் போலிருக்கிறது.  வயதானவராக இருந்தார். இவர் மற்றவர்களைப் போல கருத்து சொல்லவில்லை.  என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். அவரைக் கடந்து வெளியே சென்றேன்.  பெரும்பாலானோர் இடது பக்கமாகச் சென்றதால் நானும் அந்தப் பக்கம் சென்றேன்.   வரிசையாக கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தன.   பேருந்து நிலையங்களில் குமட்டல் வரவைக்கும் கழிப்பறைகளை மனதில் வைத்துக்கொண்டே கழிப்பறையை அணுகினேன்.  ஆச்சர்யமாக சுத்தமாக இருந்தது. 

காலையில் பொங்கல் உணவு என்றார்கள்.  ஒரு பெரிய ட்ராலியில் பிணத்தைப் படுக்க வைப்பது போன்று துணி போர்த்தப்பட்டிருந்தது.   எனக்கு ஒரு தட்டு கொடுத்தார்கள்.   அதை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.  அந்த ஆல்ட்டி அந்த ட்ராலி அருகே நின்று மற்றொரு கைதிக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.  துணியைத் திறந்தபோது கவிழ்த்து வைத்த கிண்ணத்தைப் போல பொங்கல் இருந்தது.  அதன் மேலே ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு ஆரஞ்சு வண்ணத்தில் ஏதோ இருந்தது.  அது என்ன என்று கேட்க பயமாக இருந்தது. 

என் தட்டில் வைக்கப்பட்டதும் எடுத்து மோந்து பார்த்தேன்.  சட்னி.  இவ்வளவு பொங்கலுக்கு ஒரு ஸ்பூனில் சட்னி வைத்தால் எப்படிச் சாப்பிட முடியும் ?  கைதிக்கு கல்யாணச் சாப்பாடா போடுவார்கள்..? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ஒரு வாய் எடுத்துவைத்ததும் அப்படியே துப்பினேன்..  தாங்க முடியாத அளவுக்கு உப்பு…  என்னைச் சுற்றி பார்த்தேன்.  சிலர் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.. சிலர் அதில் தண்ணீரை ஊற்றி கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.. அப்படியே நானும் கொட்டினேன்.   பசித்தது.  நேற்று இரவு கொடுக்கப்பட்ட ப்ரெட்டை எடுத்து சாப்பிட்டேன்.   எனக்கு அருகில் இருந்தவர் இதை தொட்டுக்கங்க என்று ஜாம் கொடுத்தார்.  

“என்ன கேஸ் சார் ? “ என்று ஆரம்பித்தார்.   விபரத்தைச் சொன்னேன்.  எனக்காக பரிதாபப்படவில்லை.     “நீங்க மேனேஜர்.. நான் ப்ரொபசர்“ என்றதும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தேன்…  நான் கேட்பதற்கு முன் அவரே சொன்னார்.

“டௌரி கேஸ் சார்.“

“என் பையன் விருப்பத்தை மீறி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்..  அவன் ஒரு நாள் கூட வாழலை.. ரெண்டு பேரும் தனித்தனியாக இருந்தாங்க.

ஒரு மாசம் பொறுத்தா என் மருமக… மொத்த குடும்பத்து மேலயும் டௌரி கேஸ் குடுத்துட்டா…  என் பையனும் வொய்ஃபும் ஊருக்குப் போயிருந்தாங்க… என்னை காலேஜுலையே வெச்சு… ஸ்டூடன்ட்ஸ் முன்னாடியே அரெஸ்ட் பண்ணிட்டாங்க..“

நானே பரவாயில்லைப் போலிருக்கிறதே…  தான் பாடம் சொல்லிக் கொடுக்கும் மாணவர்கள் முன்பாகக் கைதாவதை விட வேறு என்ன கொடுமை இருக்கிறது… ?

பேராசிரியர் என்பதால் அவரையும் மரியாதையாக நடத்தியிருப்பார்கள். “ஸ்டேஷன்ல மரியாதையா நடத்தினாங்களா சார்… ?“

“அதை ஏன்பா கேக்குற.. பொம்பளைங்களா அவளுங்க…  பொம்பளைகளுக்காகன்னு ஆல் வுமன்  போலீஸ் ஸ்டேஷன் உருவாக்குனாலும் உருவாக்குனாங்க…  என்ன பேச்சு பேசறாளுங்கப்பா…  என் பையன் பண்ணதுக்கெல்லாம் சேத்து என்னை பேசறாளுங்கப்பா….  கூனிக் குறுகி உக்காந்துருந்தேன்…  இந்த ஜெயில் எவ்வளவோ பரவால்லப்பா…“

‘உடனே நம்மை அது போல யாரும் பேசவில்லை என்று ஆறுதலாக இருந்தது.   பேசினால் மட்டும் என்ன செய்து விட முடியும் ?  அவரைப்போல கேட்டு விட்டு இங்கே வந்து புலம்பியிருக்க முடியும்… வேறு என்ன  செய்து விட முடியும் ?’

அன்று மாலை க்வாரன்டைன் ப்ளாக்கிலிருந்து வேறு ப்ளாக்குக்கு குற்றத்தின் தன்மைக்கு ஏற்றார்ப்போல மாற்றினார்கள்.   என்னை ஐந்தாம் ப்ளாக்குக்கு மாற்றினார்கள்.  அந்தப் பேராசிரியர் என்னோடு வருவார் என்று பார்த்தேன்.  அவரை நான்காம் ப்ளாக்குக்கு மாற்றியிருந்தார்கள். எல்லோரையும் ஆடு மாடுகள் போல விரட்டியதால் அவரிடம் சொல்லிக் கொண்டு கூட வரமுடியவில்லை.

ஐந்தாம் ப்ளாக்கில் தரைத்தளமும் மேல்த்தளமும் இருந்தது.   என்னை தரைத்தளத்தில் அடைத்தார்கள்.   ஒரு கட்டில் இருந்தது. என்னோடு அறையில் வேறு யாரும் இல்லை.  சற்று நிம்மதியாக இருந்தது.    இரண்டு நாட்கள் கவலையோடு கழிந்தது.  மூன்று வேளையும் உணவு கொடுத்தாலும் நேரத்தைக் கழிப்பது மிக மிக சிரமமாக இருந்தது.  யாரிடமும் அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து என் அறையில் ஒரு இருபத்து ஐந்து வயது இளைஞனைப் போட்டார்கள்.   மூன்று கொலைகள் செய்தவனாம்.   அவன் என்னிடம் அதிகம் பேசவில்லை.   நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள் என்றான்.  நான் எனக்கு கட்டில் வேண்டாம் என்று சொல்லி விட்டு தரையில் படுத்துக் கொண்டேன். என்ன கேஸ் என்பதை மட்டும் விசாரித்து விட்டு அமைதியாக படுத்து விட்டான். 

காலை பதினோரு மணிக்கு ஜெயிலர் அழைப்பதாகச் சொன்னார்கள். என் அறையில் இருந்தவனிடம், “ஜெயலிர் எதற்காக கூப்பிடுகிறார்“ என்று கேட்டேன்.  ஜெயிலர் ரூம்னா குண்டாஸ் ஆக்ட்ல ஒரு வருஷம் போடுவாங்க…  அதுவும் ரெண்டு மூணு கேஸ் இருந்தாத்தான் போடுவாங்க… உனக்கு ஒரு கேஸ்தானே சார்..   போயிட்டு வா… பாத்துக்கலாம் என்று அந்த சிறைக்கே அவன்தான் அதிகாரி போலப் பேசினான்.

ஜெயிலர் ரூம் எங்கே இருக்கிறது என்று விசாரித்து விட்டுச் சென்றால், உள்ளே கல்யாண சுந்தரம் அமர்ந்திருந்தார்.  அவரைப் பார்த்ததும் என்னையறியாமல் மகிழ்ச்சி ஏற்பட்டது.  நான் குற்றமற்றவன் என்பதை அறிந்த ஒருவரைப் பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே… அதை விவரிக்கவே முடியாது..

“வணக்கம் தோழர்“ என்றேன்.  ஜெயிலர் எதிரிலேயே இருந்ததால் முக்கியமான விஷயங்கள் பேச முடியாதே என்ற கவலை ஏற்பட்டது.  ஆனால் கல்யாண சுந்தரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆரம்பித்தார்.   “பார்ட்டிலேர்ந்து விலகிட்டேன்பா…“

அதிர்ச்சியாக இருந்தது.  கட்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர், கட்சிக்காக திருமணம் செய்து கொள்ளாமல், கம்யூனிசமே என் வாழ்வு என்று வாழ்ந்தவரா இப்படிப் பேசுவது ?

நடந்ததை விவரித்தார்.

நான் கைது செய்யப்பட்ட அன்று கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், ரயில்வே சங்கம் போன்ற எல்லா சங்கங்களையும் இயக்குவது இடது வலது என்று பிரிந்து கிடக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளே..  வெளிப்பார்வைக்கு தொழிற்சங்கம் என்று நடந்தாலும், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, போராட்டங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாமே கட்சியே..  கட்சியை மீறி தொழிற்சங்கம் எந்த முக்கியமான முடிவையும் எடுக்க முடியாது.

“வெங்கட் தோழரை எல்லாருக்கும் தெரியும்.  கட்சி உறுப்பினர்.  தொழிற்சங்கத்துல ஆக்டீவான ஆளு“ என்று தொடங்கி நடந்த அனைத்தையும் விவரித்துள்ளார்.  எந்த ஆதாரமாக இருந்தாலும் அதை கட்சி மூலமாக வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் வெளியிட்டது தவறு. தனிப்பட்ட முறையில் செயல்பட்ட நபர்களுக்கெல்லாம் கட்சி சப்போர்ட் செய்ய முடியாது என்று பல்வேறு பேர் பேசியுள்ளனர். 

“வெங்கட் எவ்வளவு வேலைகள் கட்சிக்காக செஞ்சுருக்காருன்னு எல்லாருக்கும் தெரியும்.  நான் சொல்ல வேண்டியதில்லை.  அப்படிப்பட்ட தோழருக்கு ஒரு நெருக்கடின்னா நம்ப தலையிடலன்னா வேற யாரு உதவி பண்ணுவா ? அது தவிரவும், நம்ப தோழர் சிங்காரவேலு ராஜினாமா பண்ணதுக்கு காரணமா இருந்தாருன்னா அது கட்சிக்குத்தானே பெருமை ?“
“எல்லாரும்தான் கட்சிக்காக உழைக்கறோம்… அதுக்காக பேங்க் பணத்தை கையாடல் பண்ணதுக்கெல்லாம் கட்சி சப்போர்ட் பண்ண முடியுமா ? “ என்று ஒரு குரல்.

“நான் என் வாழ்க்கையையே கட்சிக்காக குடுத்தவன்.  கட்சியும் சங்கமும்தான் என் வாழ்க்கை.   நான் பொய்யா சொல்லுவேன்…?  நடந்தது எல்லாத்தையும் நான் சொன்ன பிறகும் கையாடல் பண்ணான்னு பேசறது ஒரு கம்யூனிஸ்டுக்கு அழகா ?  எனக்கு என்ன மரியாதை இருக்கு ?“

“நீங்க மூத்த தோழர்தான்.  ஒத்துக்கறோம்.  அதுக்காக நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆட முடியாது தோழர். நம்ப கட்சிக்குன்னு ஒரு பேரு இருக்கு.. அதை கெடுக்கற மாதிரி வேலையிலயெல்லாம் கட்சி இறங்க முடியாது“ என்றார் அதே நபர்.  மற்றவர்கள் அவரை ஆமோதிப்பது போலவே பேசியிருக்கிறார்கள்.

“கட்சிக்குன்னு என்ன பேரு இருக்கு ?   ட்ரேட் யூனியன் நடத்திக்கிட்டு முதலாளிகிட்ட பொறுக்கித் தின்றதா ?   தொழிலாளி முதுகுல குத்திட்டு முதலாளிகிட்ட வாங்கித் தின்ற தோழர்கள் பேரைச் சொல்லவா ?  எனக்குத் தெரியாதா ?  கட்சியில எல்லாரும் யோக்கியமா ?   ஆனா வெங்கட் யோக்கியன்.  எனக்குத் தெரியும்.  உங்க எல்லாரையும் விட அவன் யோக்கியன். அவனை சப்போர்ட் பண்ணாத இந்தக் கட்சி என் மயிறுக்கு சமானம்.  இன்னைக்கே ராஜினாமா பண்றேன்.“ என்று கத்திவிட்டு வெளியேறியிருக்கிறார்.

சங்க அலுவலகத்தை காலி செய்து விட்டு, திருவெல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்.

அவர் செய்த காரியத்தை நினைத்து பெருமையாகவும் இருந்தது.  வருத்தமாகவும் இருந்தது.  தான் உயிருக்கு உயிராக நேசித்த கட்சியை எனக்காக தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறாரே…  அப்படி என்ன செய்து விட்டேன் இவருக்காக ?  

“அவசரப்பட்டு முடிவெடுத்துட்டீங்களா தோழர் ? “

“அவசரமெல்லாம் படலைப்பா… இவனுங்க பண்ற எத்தனையோ அயோக்கியத்தனத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தேன்.   எத்தனையோ தகவல்கள் என் காதுக்கு வந்துருக்கு.   போனஸ் பேச்சுவார்த்தையில எத்தனை பேர் போயி முதலாளிக்கிட்ட காசு வாங்கிருக்கான் தெரியுமா ?  எத்தனை பேர் ஸ்டேட் கவர்மென்ட் மினிஸ்டர்ஸ்கிட்ட ட்ரான்ஸ்பர்க்கு ரெக்கமன்ட் பண்ணி காசு பண்ணியிருக்கான் தெரியுமா ? இந்தக் கட்சியை விட்டா வேற பெட்டர் ஆப்ஷன் இல்லையேன்னுதான் பொறுமையா இருந்தேன்.  உன் விஷயத்துல எனக்கு பொறுமை சுத்தமா போயிடுச்சுப்பா…  நான் ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லிடலாம்னு இருக்கேன்.  இனிமே வேற வழியில்லை.

நீ கவலைப்படாதே.  தைரியமா இரு.  சமாளிக்கலாம்.   காலை விட்டாச்சு… இனிமே போராடினாத்தான் வெளிய வர முடியும்.  இனிமே என்ன ஆனாலும் பின் வாங்கக் கூடாது.“

“நானும் அந்த முடிவுலதான் இருக்கேன் தோழர்.  அம்மா வந்தாங்களா தோழர் ?“

“நீ அரெஸ்ட் ஆன மறுநாள் காலையில ஆறு மணிக்கே வந்தாங்கப்பா… அவங்கள அட்வகேட் ஆபீசுக்கு அனுப்பினேன். பாத்துட்டு வந்து மறுபடியும் என்னைப் பாத்தாங்க.   அட்வகேட் பெயில் கிடைக்க எப்படியும் ஒரு வாரம் ஆயிடும்னு சொல்லிருக்கார். நானும் அட்வகேட் கிட்ட பேசுனேன். அம்மாவ நான் பாத்துக்கறேன்.“ என்று சொல்லி விட்டு அவர் எடுத்து வந்திருந்த புத்தகங்களை கொடுத்தார்.

அவர் புத்தகங்களைக் கொடுத்தவுடன் ஜெயிலர் கையை நீட்டி அந்தப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தார்.    மக்சீம் கார்க்கியின் தாய்.   அலெக்சாந்தர் குப்ரினின் செம்மணி வளையல்.

“சார் ஒண்ணும் அப்ஜெக்ஷனா இல்லையே“ என்றார் ஜெயிலர்.  

“உலக இலக்கியம் சார்.  சந்தேகமா இருந்த படிச்சுட்டு குடுங்க“ என்றார் கல்யாண சுந்தரம்.

“ச்சே ச்சே.. இது ப்ரொசிஜர் சார்.“

“தோழர் அம்மாவை பாக்க வரவேண்டாம்னு சொல்லுங்க தோழர்.   எனக்கும் கஷ்டமா இருக்கும்.  அம்மாவுக்கும் கஷ்டமா இருக்கும்.“

“நான் சொல்லிட்டேன்பா… ஆனா அவங்க பாக்கனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.  நானே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்கேன்… நான் வரேன்பா..“

“சரி தோழர்“ என்று விடைபெற்று என் அறைக்குத் திரும்பினேன்.   வழியில் ஐந்து இடங்களில் உடல் முழுவதும் தடவி சோதனையிட்ட பிறகு, புத்தகங்களை பிரித்து, உதறி, உலுக்கி சோதனையிட்டார்கள். 

அடுத்த ப்ளாக்கின் வாசலில் ஒரு கைதியை மூன்று காவலர்கள் சேர்ந்து லத்தியால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.   “அய்யோ… சார் விட்டுடுங்க சார்… வலிக்குது அய்யா” என்று அவன் கதறினான்.  பூட்ஸ் காலால் அவன் கால் முட்டிக்குக் கீழே உதைத்தார் ஒரு காவலர்..  சுருண்டு விழுந்தான். 
 
“என்கிட்டயே திமிரா பேசறியா நாயே…“  என்று சொல்லி விட்டு மீண்டும் அடித்தார். இவனைப் போயி சாலிட்டரில போடு என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மீதம் இருந்த இரண்டு காவலர்களும் அவனை தர தரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள். 

அறைக்குத் திரும்பியதும், அந்த இளைஞனிடம் கேட்டேன்.  “சாலிட்டரின்னா என்னப்பா”

“ஏன் சார் கேக்கறீங்க… ?“

“இல்ல… மூணு காவலருங்க சேந்து ஒருத்தனை போட்டு மாடு அடிக்கற மாதிரி அடிச்சாங்க… அடிச்சுட்டு அவனை சாலிட்டரில போடுன்னு சொன்னாங்க.  அதான்…“

“இது ஜெயில் சார்.. இங்க அவங்க வைக்கறதுதான் சட்டம்.  வாயை மூடிக்கிட்டு இருந்தா ஜெயில்ல காலத்த ஓட்டலாம்.  அப்படித்தான் அடிப்பானுங்க… இங்க நடக்கறது வெளியில யாருக்குத் தெரியும்.. அடி வாங்குனவன் அவங்க வக்கீல் கிட்ட சொல்லலாம்னு நெனைக்கக் கூட கூடாது.  அதுக்குத்தான் சாலிட்டரி.  சாலிட்டரின்னா யாரையுமே பாக்க முடியாதபடி தனியா அடச்சிடுவாங்க.  படி மட்டும் வரும். “

“படி ன்னா என்றேன். “

“படின்னா சோறு சார்“

“யாரையுமே பாக்க முடியாம ரெண்டு நாள்ளயே ஆளு கதறிடுவான்.  ஜெயில் நிர்வாகத்துக்கு அடிமையாயிடுவான்.. சாலிட்டரின்னா இங்க எல்லாருமே அலறுவாங்க“ என்று கூறிவிட்டு, அவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

‘இது வேறு உலகம்.   இங்கே கைதிகள் விலங்குகள்.  இந்த விலங்குகளை அடைத்து வைத்துப் பழக்கப்படுத்துபவர்கள் சிறைக் காவலர்கள்.   படியாத மிருகத்துக்கு நேரும் கதிதான் இங்கே நேருகிறது.  மிருகத்தை வதை செய்தால் யார் குரல் கொடுப்பார்கள்…? அல்லது அந்த மிருகம்தான் வாய் திறந்து   பேசுமா ?’

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஜெயிலர் அழைக்கிறார் என்றார்கள்.  கல்யாண சுந்தரத்தைப் பார்க்கும் மகிழ்ச்சியோடு கிளம்பினேன்.  
 
‘ப்ரெஸ் மீட் வைக்கிறேன் என்று சொன்னாரே.. அதில் ஏதாவது சிக்கலா… இல்லை என்னிடம் கூடுதல் விபரங்களை கேட்பதற்காக வந்திருக்கிறாரா… எனக்குத் தெரிந்த அத்தனை விபரங்களும் அவருக்கும் தெரியுமே…’

ஜெயிலர் அறையில் அந்த சிபிஐ அதிகாரி ஷ்யாம் சுந்தர் உட்கார்ந்திருந்தார்.

தொடரும்.

Tuesday, 28 August 2012

தீராக் காதல் 12
திடீரென்று தலையில் இடி இறங்கியது போலிருந்தது.  என்னதான் தொழிற்சங்கம், போராட்டம் என்ற பழக்கம் இருந்தாலும் கூட்டமாக போலீசைச் சந்திப்பதற்கும், தனியாக சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு.   யாருக்குத் தகவல் சொல்வது, தகவல் சொல்ல விடுவார்களா… வீட்டில் வேறு ஏதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறோமா…  அம்மா இச்செய்தியை எப்படித் தாங்கப்போகிறார்கள் என்று ரிமோட்டில் சேனலை மாற்றுவது போல எண்ணங்கள் மாறி மாறி வந்தன.

”என்ன விஷயமா சார் அரெஸ்ட் பண்றீங்க. ?”

”பாலகிருஷ்ணன்ற பேங்க் மேனேஜரோட பர்சனல் லாக்கரைத் திறந்து 12 லட்ச ரூபாயை நீங்க கையாடல் பண்ணிட்டதா புகார் வந்துருக்கு.  அதுலதான் உங்களைக் கைது பண்றோம். நான் சிபிஐ டிஎஸ்பி ஷ்யாம் சுந்தர்.  இது என்னோட டீம்” என்று இந்திய கிரிக்கெட் டீமை அறிமுகம் செய்வது போலச் செய்தார்.

”ட்ரெஸ் மாத்திட்டு வந்துட்றேன் சார். ”

”நான் கூட வர்றேன்” என்று ஒரு சபாரி அனுமதி இல்லாமலேயே உள்ளே நுழைந்தார்.

விளக்கைப் போட்டேன்.  ‘அடிப்பார்களோ….  விலங்கு போடுவார்களோ…’

சபாரி ஷுவைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே நுழைந்தார். நேராக படுக்கையறைக்குள் என்னோடு நுழைந்தார்.  நான் உள்ளாடை மாட்டும்போது தயங்கியதைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.   உடைகளை மாற்றினேன்.  

”சார். பேஸ்ட் ப்ரஷ், லுங்கியெல்லாம் எடுத்து வச்சுக்கங்க.  செல்போன் பர்ஸ் எல்லாம் வச்சுட்டு வந்துடுங்க”

”சார் நம்ப மட்டும் போயிடலாம.. இல்ல அம்மாவை எழுப்பணுமா ?  அம்மாவை எழுப்புங்க தம்பி.   அவங்ககிட்ட கையெழுத்து வாங்கனும்.  
அது ஒரு ஃபார்மாலிட்டி.”

அம்மாவை எழுப்பினேன். தூக்க கலக்கத்தில் ”என்னடா இந்த நேரத்துல, தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றவாறே எழுந்து வந்தாள்.

நான் பேசுவதற்கு முன்பாகவே சபாரி பேசினார்.   ”அம்மா நாங்க சிபிஐ அதிகாரிங்க.  உங்க பையன ஒரு விசாரணைக்காக அழைச்சுட்டுப் போறோம்.  நாளைக்கு கோர்ட்டுல வந்து பாருங்கமா.   இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று அவர் முடிப்பதற்குள்ளாகவே அம்மா அலறத் தொடங்கினாள்..

”அய்யய்யோ.. என்னடா ஆச்சு… ஏன்டா போலீஸ் கூட்டிட்டுப் போறாங்க… அய்யா என் பையன் நல்லவங்கையா..  அவன ஒண்ணும் பண்ணிடாதீங்கய்யா.. ” என்று அழத்தொடங்கினாள்.

அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.  ”ஒண்ணும் இல்லம்மா… அழாத.  வந்துட்றேன்.  நாளைக்கு காலையில தோழர் கல்யாண சுந்தரத்தைப் போயிப் பாரு. விவரம் சொல்லுவாரு.  கவலைப் படாதே” என்று நான் பேசிக்கொண்டிருந்தாலும் அவள் அழுகை நிற்கவில்லை.  அழுதுகொண்டே அவர்கள் நீட்டிய படிவத்தில் கையெழுத்துப் போட்டாள்.

ஒரு பையில் துணிகளை எடுத்துக் கொண்டு அவர்களோடு கிளம்பினேன்.  வெள்ளை நிற இன்னோவா கார் நின்று கொண்டிருந்தது. அதில் என்னை ஏற்றி என் இரண்டு புறமும் இருவர் அமர்ந்து கொண்டனர்.  கார் நேராக சாஸ்திரி பவனுக்குச் சென்றது.  இரண்டாவது தளத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர்.  செல்லும்போது என்  கைகளை இருவரும் பிடித்துக் கொண்டனர்.

ஒரு அறைக்குள்ளே என்னை அழைத்துச் சென்று என் பேன்ட் சட்டையில் இருந்தவற்றை எடுத்து தனியே வைக்கச் சொல்லினர்.  நான் பேனாவைத் தவிர எதையும் எடுத்து வரவில்லை.  பேனாவை மட்டும் எடுத்து டேபிளில் வைத்தேன்.

சற்று நேரத்தில் டிஎஸ்பி ஷ்யாம் சுந்தர் உள்ளே வந்தார்.   அருகில் இருந்தவரிடம் ஒரு பெட்ஷீட் எடுத்துட்டு வாப்பா என்றார்.  சற்று நேரத்தில் அவர் பெட்ஷீட்டை எடுத்து வந்தார். 

”சார் இங்க படுத்துக்கங்க.   நானும் இங்கதான் படுக்கப்போறேன்.   நாளைக்கு காலையில ரிமாண்ட் பண்ணிடுவோம்.”

”சார். யாரு சார் கம்ப்ளெய்ன்ட் குடுத்துருக்கா…  நான் அந்த மாதிரி பணத்தையெல்லாம் எடுக்கலை சார். ”

”உங்க கூட வேலை பாக்கற அசிஸ்டன்ட் மேனேஜர் சம்பத் தான் கம்ப்ளெயின்ட் குடுத்துருக்கார். உங்க ஆர்க்யூமென்ட்சையெல்லாம் கோர்ட்டுல சொல்லுங்க.” 

லுங்கி மாற்றிக் கொள்ளவா என்று கேட்க நினைத்து கேட்காமலேயே படுத்தேன்.   அந்த அறையில் ஏசி ஓடிக் கொண்டிருந்தது.   ஒரு அரை மணி நேரம் கழித்து குளிரத் தொடங்கியது. 

”சார் குளுருது சார்” என்றேன்.

எழுந்து ஏசியை அணைத்து விட்டு பேனைப் போட்டு விட்டு படுத்தார்.
‘நடப்பவை எல்லாம் கனவில் நடப்பது போலவே இருந்தது.   தூக்கத்தில் இருந்தவனை திடீரென்று எங்கோ வாக்கிங் அழைத்துச் செல்வது போல இருந்தது.   நடப்பவற்றை நம்ப முடியாவிட்டாலும், படுத்திருக்கும் இடம் இது உண்மைதான் என்பதை உணர்த்தியது.    அம்மாவின் நினைவு அழுத்தியது.  இந்நேரம் தூங்காமல் அழுது கொண்டிருப்பாள்.  அவளை நினைத்தால் எனக்கும் அழுகை முட்டியது.  அதே நேரத்தில் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்துதானே இறங்கினோம் என்பதும் உறுத்தியது.  

சம்பத்தைப் போல பேசாமல் நமக்கென்ன என்று இருந்திருக்கலாமோ ?  அவசரப்பட்டு விட்டோமோ.. இந்த அவமானம் தேவையா ?   எவ்வளவு வசதியான வங்கி மேனேஜர் வேலை.. யாருக்காவது கிடைக்குமா…  நானே கெடுத்துக் கொண்டேனோ.. ‘

காலையில் அவர்களாகவே கேட்டு டாய்லெட் போக அனுமதித்தார்கள்.   டாய்லெட் கதவை திறந்து வைக்கச் சொன்னார்கள்.   பல் விளக்கிய பிறகு, இட்லி வாங்கிக் கொடுத்தார்கள்.

மதியம் உணவுக்குப் பின், இரண்டரை மணிக்கு ஒரு வழக்கறிஞர் வந்தார். 
”தோழர் என் பேர்  ராஜன்.   ஹை கோர்ட்டுல அட்வகேட்டா இருக்கேன்.   தோழர் கல்யாண சுந்தரம் அனுப்பினார்.   எல்லா விபரத்தையும் சொன்னார். சாப்பாடு குடுத்தாங்களா ? ”

ம் என்று தலையாட்டினேன்.

”ஏதும் டார்ச்சர் பண்ணாங்களா ?  தேர்ட் டிகிரி ? ”

”இல்லை தோழர். மரியாதையா நடத்துனாங்க. ”

”இன்னைக்கே பெயில் போட்டுட்றேன்.  பட் லோயர் கோர்ட்டுல கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.  ஹைகோர்ட்ல தான் கிடைக்கும்.  ஐ வில் ட்ரை மை பெஸ்ட்.” என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

மாலை நாலு மணிக்கு எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள்.  பெண் நீதிபதி. சிபிஐ கொடுத்த அறிக்கைகளைப் பார்த்து விட்டு, என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் ”எனி  கம்ப்ளெயின்ட்ஸ் ? ” என்று கேட்டார்.

இல்லை என்றதும், ”உங்களை அடுத்த 15 நாளைக்கு காவல்ல வைக்க உத்தரவு போட்றேன்.” என்று கூறினார்.  

மீண்டும் அதே இன்னோவா. வண்டி எழும்பூரிலிருந்து புழல் சிறை நோக்கிச் சென்றது.  செல்லும் வழியில் வண்டியை நிறுத்தி ப்ரெட் பாக்கெட்டும், வாழைப்பழமும் வாங்கினார்கள். 

”இந்தாங்க சார்.   இன்னைக்கு நைட் உங்களுக்கு சிறையில சாப்பாடு இருக்காது.   நாளைலேர்ந்துதான் குடுப்பாங்க. ” என்று கொடுத்தார்.

புழல் சிறைக்குள் வண்டி நுழைந்ததும், இறக்கி நடத்திக் கூட்டிச் சென்றார்கள்.  இருபது அடிக்கும் மேலான உயரத்தில் பெரிய இரும்பு கேட் இருந்தது.    ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, சார் ”சிபிஐ கேஸ் எது” என்று கேட்டார் ஒருவர். என்னை அந்த பெரிய கேட்டின் கீழே இருந்த ஒரு சிறிய கேட்டின் உள்ளே அழைத்துச் சென்றனர்.

அங்கே இருந்த பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சிபிஐயிலிருந்து வந்தவர்கள், ”சார்.. நாங்க வர்றோம்” என்று கிளம்பினர்.
எனக்கு முன்னால் வரிசையாக கைதிகள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த பை தலைகீழாகக் கொட்டப்பட்டு, கலைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.  ”சட்டையை கழட்டிட்டு நில்லுங்க” என்று ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.  எனக்கு முன்னால் நின்றிருந்தவர் சட்டையைக் கழற்றியவுடன் நானும் கழற்றினேன்.   ”பனியனையும் கழட்டுங்க” என்ற குரல் வந்தவுடன் பனியனையும் கழற்றினேன். 

பேன்ட்டையும் கழற்றச் சொல்வார்களோ… ?

வரிசையில் நின்று கொண்டிருந்த கைதிகளில் ஒருவன், நீளமாக தலை முடிவைத்திருந்தான். அவன் போட்டிருந்த லுங்கியை அவழ்க்கச் சொன்னார் காவலர்.  அவன் லுங்கியை அவிழ்த்து எறிந்தான்.  “ஜட்டியை இழுடா“ என்றார். அவன் சட்டென்று ஜட்டியையும் அவிழ்த்தான்.   அனைவரும் சிரித்தனர். எனக்கு சிரிப்பு வரவில்லை.  என் பயம் கூடியது.   “டேய் ஜட்டியப் போட்றா… வெக்கங்கெட்டவனே” என்றார். அவனும் சிரித்துக் கொண்டே ஜட்டியைப் போட்டான். அவன்  வாயைத் திறக்கச் சொன்னார். தலைமுடிக்குள் கையை விட்டு கலைக்கச் சொன்னார்.  இரண்டு காதுகளையும் முன்னோக்கி மடக்கிப் பார்த்தார்.  செருப்பை கழற்றச் சொன்னார்.  ”துணியை எடுத்துட்டுப் போயி ஓரமா நில்லு” என்றார். அவன் அகன்றான்.

அடுத்து வந்தவனுக்கும் அதே போல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.  அவன் பேன்ட் அணிந்திருந்தான்.  ஜட்டியை விலக்கச் சொன்னதும் அவன் தயங்கினான்.  அந்தக் காவலர் “டேய் சொன்னாக் கேக்க மாட்டியா “ என்று அடிக்கக் கையை ஓங்கினார். அவர் அடியிலிருந்து விலகி அவன் உடனே ஜட்டியை விலக்கினார்.  

“கழட்டுடான்னா பெரிய இவன்மாதிரி பண்ற…  என்ன கேசு..? என்று கேட்டார்.  அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை.  “சத்தமா சொல்றா“ என்று மறுபடியும் அடிக்கக் கையை ஓங்கினார்.   அவன் போர்ஜரி கேஸ் என்றான்.   போர்ஜரி பண்ணிட்டு வந்து திமிரப்பாரு என்று கூறி விட்டு அவன் முதுகில் கை வைத்துத் தள்ளிவிட்டார்.
அடுத்து நான்.   ”என்னா கேசு.. ”

”பேங்க்..”

”பேங்க கொள்ளையடிச்சியா ” என்று கேட்டுவிட்டு சிரித்தார். 
”இல்லை இன்னொருத்தர் லாக்கரத் தொறந்து பணத்தை  எடுத்துட்டேன்னு.. ”

”அப்படிப்போடு.. நீ பேங்குல என்னவா இருக்க ?”

”நான் மேனேஜர். ”

”உங்களையெல்லாம் நம்பி பேங்குல பணத்தைப் போட்டா வௌங்கின மாதிரிதான். உன் பேங்குலையே திருடுனியா… சரியான ஆளுதான் நீ…” என்று சொல்லி விட்டு எனக்கு முன்னால் சென்றவனிடம் நடந்த சோதனைப் போலவே என்னையும் சோதனையிட்டான்.  

இவனுக்கெல்லாம் எப்படிச் சொல்லி புரிய வைப்பேன் ?   நான் திருடனில்லை என்று உறக்கக் கத்த வேண்டும் போல இருந்தது. சிறைக்கு வருபவர்கள் அத்தனை பேரும் உண்மையிலேயே குற்றம் செய்தவர்கள்தான் என்று எப்படி முடிவு செய்கிறார்கள் ? அவன் முடிவு செய்வதிலும் என்ன தவறு ?  மக்கள் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சிங்காரவேலு போன்ற முதலைகளிடம் மோதி வாழ்க்கையை இழப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர் ?  லட்சத்தில் ஒருவர் ? கோடிகளில் ஒருவர் ?  என்னைப்போன்ற பைத்தியக்காரன்தானே இந்த வேலையைச் செய்வான் ?  அவன் நினைப்பதில் என்ன தவறு ?  

எனக்கு என்ன தலையெழுத்தா ?   1200 கோடி ஊழலைப் பற்றித் தெரிந்த பேங்க்கின் விஜிலென்ஸ் ஆபீசர், மவுனமாக சிங்காரவேலுவோடு கூட்டணி சேர்ந்து கொள்ளவில்லையா ?  அவரா இப்படிச் சிறையில் அவமானப்படுகிறார் ?  ஏ.சி அறையில் அவர் இந்நேரம் மகிழ்ச்சியாக இருப்பார்.  இப்படிக் கஷ்டப்படுவதால் சரிந்து விழும் இந்தியாவை முட்டுக் கொடுத்து நிறுத்திவிட்டேனா ?  பாராட்டுவார்கள்.   நீ பெரிய சாதனை செய்துவிட்டாய் என்று சொல்லுவார்கள்.   சிங்காரவேலுவை வீழ்த்திவிட்டாய் என்று வாழ்த்தவார்கள்.  அழும் என் தாயை எப்படித் தேற்ற முடியும் ? இந்தப் பாராட்டுக்கள் அவள் கண்ணீரைத் துடைத்து விடுமா ?  அவளுக்கு நான்தானே உலகம்.    1200 கோடிகள் என்ன….. பத்தாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டாலும், அவளுக்கு அவள் மகன்தானே பெரிது ?    பாசமாக வளர்த்து வங்கியில் மேனேஜராக இருக்கும் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தவளின் வாழ்வே தகர்ந்து விட்டதே…..
சோதனை முடிந்தவுடன் மற்றவர்களோடு கூட்டமாகச் சென்று நின்றேன். அனைவரையும் வரிசையாக ஆட்டு மந்தை போல அழைத்துச் சென்றனர்.
ஆங்கிலத்தில் ”க்வாரன்டைன்” என்றும் தமிழில் ”பிணி நீக்கும் பிரிவு” என்றும் எழுதியிருந்த ஒரு வளாகத்துக்குள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்.   ஒரு பெரிய ஹாலுக்குள் அனைவரையும் உள்ளே போகச் சொல்லி வெளியே கதவைப் பூட்டினர்.
அந்த ஹாலில் ஒரு ஐம்பது பேர் படுத்திருந்தனர்.  இரண்டு மூன்று இடங்களில் தலையில் கோடு கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.  உள்ளே இருந்தவர்கள் புதிதாக வந்தவர்களை பார்வையாலே அளந்தனர். அந்த அறையின் மூலையில் இடுப்பு உயரத்துக்கு தடுப்புச் சுவர் இருந்தது.   உள்ளேயிருந்து ஒரு ஆள் எழுந்து, லுங்கியால் பின்புறத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தபோது அது டாய்லெட் என்பது புரிந்தது. 
இத்தனை பேர் முன்பு எப்படி டாய்லெட் வரும் என்பதை நினைத்தால் குமட்டியது.  அவசரப்பட்டு விட்டோமோ.. தவறு செய்து விட்டோமோ….
புதிதாக வந்தவர்களில் சிலர் லுங்கி மாற்றினார்கள்.  நான் எதுவும் மாற்றவில்லை.  கொண்டு வந்த பையை தலைக்கு வைத்து படுத்தேன். விளக்கு எரிந்து கொண்டே இருந்தது.  
‘அம்மா என்ன செய்வாள்… இன்னும் அழுது கொண்டிருப்பாளோ… அவள் உடல்நிலை என்ன ஆகும் ?. அம்மாவை நினைத்ததும் கண்ணீர் வந்தது.  கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றவில்லை.  எப்படிச் சமாளிக்கப் போகிறாள் இந்த அதிர்ச்சியை… ?  இது இன்றோடு முடிகிற விஷயம் இல்லையே… எப்போது முடியும் என்பதற்கான அறிகுறியே இல்லையே… 
இந்த சம்பத்துக்கு அத்தனை விவகாரங்களும் தெரியுமே.. அந்த ஆள் எப்படி இது போன்ற ஒரு பொய்ப்புகாரை கொடுத்தார்.   பாலகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என்று மிரட்டினால் என்ன செய்வார் சம்பத் பாவம்… ..   சிபிஐ இப்படியா விசாரிக்காமல் கைது செய்வார்கள்… யாரிடம் விசாரித்திருந்தாலும் உண்மை என்ன என்பது தெரிந்திருக்குமே..
ஜனனிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாள்..அவளும் இந்தக் கதையை நம்புவாளோ… அவள் நம்பமாட்டாள்.   நல்லவேளை இவனிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொள்வாளோ..  அவன் மீண்டும் மீண்டும் பேச முயற்சித்தும் தவிர்த்தது நல்லதாகப் போய் விட்டது.. நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைப்பாளோ..
எல்லோரையும் போல நானும் ஏன் என் வேலையை மட்டும் பார்க்கவில்லை ?  திமிரா… ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசையா… இந்நேரம் வீட்டில் அம்மா கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே.. அவசியமா எனக்கு இது ? எனக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை… என்னைச் சுற்றி இருப்பவர்கள் அத்தனை பேரும் இதே தேசத்தில்தானே வாழ்கிறார்கள்…..  1200 கோடியைப் பற்றி யாருமே கவலைப்படாதபோது நான் ஏன் கவலைப்பட்டேன்… எனது அந்தக்கவலை என்னை இப்படி புழல் சிறையின் தரையில் படுக்க வைத்திருக்கிறதே…. செயின் அறுத்தவர்கள், கொலை செய்தவர்கள், வீட்டை உடைத்துத் திருடுபவர்கள், கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள், பொறுக்கிகள், இவர்களோடு படுத்து உறங்க வேண்டியவனா நான் ?  இவர்களோடு வாழ வேண்டியவனா நான் ? 
ஒரு முடிவுக்கு வந்தேன்.
தொடரும்.


Monday, 27 August 2012

தீராக் காதல் 11
‘அதிர்ச்சி… பயம்… இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது.  ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது.   எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை இவ்வளவு எளிதாக காலிபண்ண முடிகிறதென்றால், சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் நான் எவ்வளவு எளிதான இலக்கு…

சிங்காரவேலு மோசமானவன்தான். ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவுக்கு இறங்குவான் என்பது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மனது பதைபதைத்தது.  என்ன பாவம் செய்தார் அவர்..  எப்படித் தாங்கிக்கொள்வார்கள் அவர் குடும்பத்தினர்..  இது சிங்காரவேலு வேலைதான் என்பதை எப்படி நிரூபிப்பது ?    யார் நம்புவார்கள் ?   அடுத்து அவன் என்னென்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறானோ…’

உதவி மேலாளரை அழைத்து, நான் தஞ்சாவூர் செல்வதால் விடுப்பில் செல்கிறேன் என்று தகவல் தெரிவித்து விட்டு, லீவ் லெட்டர் எழுதி, ஹெட் ஆபிசுக்கு அனுப்பி விட்டு கிளம்பினேன்.  அம்மாவிடம், நண்பர் ஊரில் இறந்து விட்டார் என்ற தகவலைச் சொல்லிவிட்டு போக வேண்டும் என்று சொன்னேன். அம்மா பல நாள் பாலகிருஷ்ணனோடு பழகியவள் போலவே சோகமானாள்.  “என்ன வயசுடா அவருக்கு… எத்தனை பசங்க…  ஹார்ட்    அட்டாக்கா ? ரொம்ப நாள் சீக்கா இருந்தாரா ? ” என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டு விட்டு, சிகரெட்ட நிறுத்துடா… நெறய்ய பேருக்கு சிகரெட்டாலதான் ஹார்ட் அட்டாக் வருதாம்.   உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்.. ” என்று அவள் பங்குக்கு வருத்தப்பட்டாள்.

”சரிம்மா” என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு, கோயம்பேட்டுக்குக் சென்று தஞ்சாவூர் வண்டி பிடித்தேன். இரவு ஏழரை மணிக்கு தஞ்சாவூர் சென்றேன். அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து, பூதலூர் சென்றடைந்தேன்.

வாசலில் பந்தல் போடப்பட்டிருந்தது.  உடல் வீட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் வாங்கிய மாலையை அவர் உடலுக்கு போட்டு விட்டு வெளியே வந்தேன். நான் பார்த்தேபோது இருந்தது போலவேதான் இருந்தார். வாயோடு சேர்த்து தலையில் கட்டு கட்டியிருந்தது.  தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.   அவர் உடலருகே பெண்கள் அமர்ந்து மவுனமாக அழுது கொண்டிருந்தனர்.  பாலகிருஷ்ணனின் மனைவி தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.   அவர் தோள் மேல் சாய்ந்து அழுது கொண்டிருந்தது அவர் மகள்களாகத்தான் இருக்க வேண்டும்.   தலை கலைந்து முகத்தில் கண்ணீர் ஓடிய தடத்தோடு இருந்தனர். 

‘இதில் இளைய மகள் யார்…? போனில் பேசி மாட்டியது யார்’ ச்சே… என்ன புத்தி எனக்கு… சாவு வீட்டில் வந்து இப்படி ஒரு எண்ணம்…. என்று என் மீதே எனக்கு எரிச்சல் வந்தது.  யாராக இருந்தால் என்ன.. தெரிந்து என்ன செய்யப்போகிறேன்… ?

வீட்டை விட்டு வெளியே வந்து பந்தலில் அமர்ந்தேன்.   மவுனமாக விதியை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்ததும் நாற்காலியை அருகே போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தார்.  
“நீங்க மாமாவோட வேலை பாக்கறீங்களா சார் ? “  மருமகனாக இருக்க வேண்டும்.

“ஆமாம் சார்… நீங்க ?“ அவரோட பெரிய மருமகன் சார்.“

“எப்படி சார் இறந்தார் ?“ 

“ஆக்சிடென்டாத்தான் சார் இருக்கணும்.  காலையில வாக்கிங் போனவர் காலையில 9 மணி வரை திரும்பவேயில்லை. போனையும் எடுக்கலை. அத்தை பயந்து போயி  என் வைஃப்புக்கு போன் பண்ணிருக்காங்க.  அவளும் நானும் தொடர்ந்து மாமா போனுக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தோம். காலையில பத்தரை மணிக்கு யாரோ ஒருத்தர் எடுத்தார்…  யாரு சார் இது… இது எங்க மாமா போனாச்சேன்னு கேட்டப்போ, நான் போலீஸ் இன்ஸ்பெக்டர்னு சொன்னவர், எங்களை தஞ்சாவூர் ஜி.ஹெச்சுக்கு வரச்சொன்னார்.  என்ன ஆச்சு சார்னு கேட்டோம்.  ஆக்சிடென்ட்டுல மாமா இறந்துட்டதைச் சொன்னார்.   ஹிட் அன்ட் ரன்னுன்னு சொன்னார்.

அப்புறம் மார்ச்சுவரிக்கு போயி பாடியை வாங்கிக்கிட்டு வந்தோம்.“

“எந்த வண்டி இடிச்சுச்சுன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா சார் ?“ என்று எனக்கே நம்பிக்கை இல்லாமல்தான் கேட்டேன்.  அந்த ரோட்டுல நெறய்ய ஹிட் அன்ட் ரன் ஆக்சிடென்ட் நடக்கும்னு சொன்னார் இன்ஸ்பெக்டர்.  அதிகாலையில ஏகப்பட்ட ஸ்பீட்ல வருவாங்களாம் லாரிக்காரனுங்க.  கண்டு பிடிக்கறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டார்.“

“எங்க அடிபட்டிருந்துச்சு சார் ?“

“தலையில மட்டும்தான் சார் காயம்.. வேற எங்கயும் இல்ல. இன்ஸ்கெக்டர் என்ன சொன்னாருன்னா, லாரில ஏதாவது நீட்டிக்கிட்டு இருந்து தலையில அடிச்சுருக்கும்னு சொல்றார்.  லாரிகாரன் போன ஸ்பீடுல ஆளு அடிபட்டது கூட அவனுக்கு தெரிஞ்சுருக்காதுன்னு சொன்னார்.

அவர் விதி அவ்வளவுதான் சார்.   போய்ச் சேந்துட்டார்.  வாக்கிங் போகும்போதெல்லாம் ஆக்சிடென்ட் நடக்கப் போகுதுன்னு யாருக்குத் தெரியும் ?  மேல இருக்கறவனோட விளையாட்டு அப்படி சார்.   அவனுக்கு ரொம்ப புடிச்சவங்கள சீக்கிரமா கூப்பிட்டுக்குவான்.“

அவர் பேசியது எரிச்சலை ஏற்படுத்தியது.  இந்த ஆள் தற்கொலை செய்து கொண்டு ஏன் கடவுளுக்கு பிடித்தவனாக மாறக் கூடாது… பேசுகிறான் பார் வெட்டியான் நியாயம்.   அவரைச் சொல்லி என்ன பயன்.  கடவுள் என்ற ஒன்று இருப்பதால்தானே வசதியாக அவன் பேரில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டு நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்… அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் மனிதன் காலம் தள்ளுவது கடினமோ…

பாலகிருஷ்ணன் இந்த விவகாரத்தை அவர் மனைவி உட்பட யாரிடமும் விவாதிக்கவில்லை என்பது தெரிந்தது.  என்ன வேலையைச் செய்திருந்தார், அவருக்கு எவ்வளவு ஆபத்து இருந்தது என்பதன் சிறு அறிகுறி கூட அவர் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.  தெரியாததும் ஒரு வகையில் நல்லதுதானே.  விபத்தில் இறந்தார் என்பதால், தங்களுக்குத் தாங்களே அவர் விதி முடிந்து விட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.  இது கொலை என்று அறிவதால் ஏற்படும் தேவையற்ற சஞ்சலம் அவர்களுக்கு எதற்கு ?

காலை 10 மணிக்கு உடலை எடுப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரம் அந்த நாற்காலியிலேயே அமர்ந்தபடி உறங்கினேன்.  காலையில் உடலை எடுப்பதற்கு முன்பாகவே கிளம்பினேன்.   இவர்கள் யாருக்கும் பாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவர்களுக்கு என்ன விபரம்  தெரியும் ?  பஸ்ஸில் சென்னை திரும்பும்போது பல்வேறு  எண்ணங்கள். அதிர்ச்சி, குழப்பம், பயம் மாறி மாறி வந்து மனதைக் கலைத்த வண்ணம் இருந்தன.

சென்னை திரும்பியதும் நேராக கல்யாண சுந்தரத்தைச் சந்தித்தேன்.  விபரத்தைச் சொன்னதும்

“இது நிச்சயமா சிங்காரவேலு வேலைதாம்ப்பா.. எனக்குச் சந்தேகமே இல்லை.  அவன் கொலைக்கு அஞ்சமாட்டாம்ப்பா.  போன வாரம் ஒரு க்ரூப் சிங்காரவேலு மேல விசாரணை நடத்தனும்னு கேஸ் போட்றதுக்காக லிங்கேஸ்வரனைப் பாத்து எவிடென்சையெல்லாம் வாங்கிட்டுப் போயிருக்காங்க.  அதுல சிங்காரவேலு மேல விசாரணை நடத்தனும்னு ஆர்டர் ஆயிடுச்சுன்னா பாலகிருஷ்ணன் முக்கியமான விட்னெஸ் இல்லையா ?

அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு பாலகிருஷ்ணன் ஞாபகம் வரலை.  உன் ஞாபகம்தான் வந்துச்சு.  உன்னை ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்லனும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பாலகிருஷ்ணனை காலி பண்ணிட்டான்.”

”எனக்கும் ஏதாவது பிரச்சினை வருமா தோழர் ?”

”நீ இதுல இன்வால்வ்டுன்னு யாருக்குத் தெரியும் ? லிங்கேஸ்வரன் சொல்ல மாட்டாரு.”

”தோழர் பேங்க் விஜிலென்ஸ்ல போயி டாக்குமென்ட்ஸை நான்தானே குடுத்துட்டு வந்தேன்.”

”சிங்காரவேலுவுக்கு இருக்கற தொடர்புகளுக்கு அந்த விஷயத்தைக் கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லைப்பா. சாதாரணமான கண்டுபிடிச்சுடுவான். அவன் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணாலும், பார்ட்டியில நல்ல போஸ்டிங்க்லதானே இருக்கான்.  இந்த விஷயத்தை பார்ட்டி கையில எடுத்தா இஷ்யூ இன்னும் பொலிட்டிக்கலா ஆகும்.  நான் சென்ட்ரல் கமிட்டியில பேசறேன்.   ஆனா, நம்ப பார்ட்டியிலயே பல பேர், திரை மறைவுல பல பேரங்கள் பண்றவங்க… பட் நான் ட்ரை பண்றேன்.”

”ஆமாம் தோழர்.  நானும் சிங்காரவேலு மேல விசாரணை நடக்கும்னு எதிர்ப்பார்த்தேன்.   ஆனா அந்த ஆளு ராஜினாமா பண்ணதுக்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கலை.  எதிர்க்கட்சிகளும் இதை அப்படியே கண்டுக்காம விட்டுட்டாங்க.”

”எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமாப்பா… அவங்களும் இதே மாதிரி பண்றவங்கதானே.. அவங்களுக்கு அப்பப்போ ஒரு இஷ்யூ வேணும்.  சிங்காரவேலு ராஜினாமா பண்ணதும் மறந்துட்டாங்க.”

”இனிமே நாம டிஃபென்சீவா இருக்க முடியாது வெங்கட்.  கொலை பண்றதுக்குக் கூட அவன் துணிஞ்ச பிறகு, எது வேணாலும் பண்ணுவான்.    சிங்காரவேலு மேல வழக்கு பதிவு பண்ணனும்னு நானே பிஐஎல் போட்றேன்.   திருப்பி அடிச்சாத்தான் அவன் அடங்குவான்.   லிங்கேஸ்வரனையும் தொடர்ந்து எழுதச் சொல்றேன்.  நம்பக் கிட்ட இருக்கற டாக்குமென்ட்ஸை வைச்சு கேஸ் போட்றேன்.    நீ இதுல இன்வால்வ் ஆகாத.”

”சரி தோழர்.  நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா தோழர் ?”

”நான் போன் பண்ணி பேசிட்றேன்.   நீ நம்ப பார்ட்டி அட்வகேட் வைகறைச் செல்வன் ஆபீசுக்குப் போயி, டாக்குமென்ட்ஸை குடுத்துட்டு வந்துடு. அந்த ஆடியோ சிடியையும் குடுத்துடு. காலையில 11.30 மணிக்குப் போ. அதுக்குள்ள நான் அவர் கிட்ட பேசிட்றேன்.”

”சரி தோழர்”

அவர் சொன்னபடியே காலை பதினொன்றரை மணிக்கு வழக்கறிஞர் அலுவலகம் சென்றேன்.  புரசைவாக்கத்தில் இருந்தது அவர் அலுவலகம்.   பெரிய அலுவலகமாக இருந்தது.   இடது புறமும், வலது புறமுமாக இரண்டு அலுவலகங்கள் இருந்தன.  இடது புறம் இருந்த அலுவலகத்தில் ஜுனியர் வழக்கறிஞர்கள் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வலது புறம் இருந்த அறையில் வைகறைச் செல்வன் என்று பெரிய போர்டு வைக்கப்பட்டிருந்தது.  

இடது புறம் உள்ள அறையில் நுழைந்து ”சாரைப் பாக்கணும்.  பார்ட்யிலேர்ந்து கல்யாணசுந்தரம் அனுப்பிச்சார்.”

”உக்காருங்க சார்.   சார்கிட்ட கேட்டுட்டு வந்துட்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். அவரும் ஜுனியராகத்தான் இருக்க வேண்டும். இரண்டு பெண்கள் கருப்பு வெள்ளையில் சுடிதார் போட்டுக் கொண்டு அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு பெண்களும் என் குரல் கேட்டதும் தலையை நிமிர்த்தி என்னை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தனர்.  சுருட்டையான கேசம், முகத்துக்கேற்றார்ப் போன்ற கண்ணாடி, காதில் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும்படியான காதணி. மெலிதாக ஒரு செயின்.   மாநிறத்துக்கும் கம்மியான நிறம்.  கருப்பு என்றே சொல்லலாம்.   இன்னொருத்தி, சிகப்பாக வெளிர் நிறத்தில் இருந்தாள்.  படிக்கும்போது கண்களை அடிக்கடி சுருக்கிக் கொண்டாள்.  

இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாலும் இருவரும் என்னைச் சட்டை கூட செய்யாதது வருத்தமாக இருந்தது.  உள்ளே சென்ற அந்த ஜுனியர் வெளியே வந்து, வசந்தி மேடம் உங்களை சார் கூப்பிட்றார் என்று பொத்தாம் பொதுவாக சொன்னார்.

இதில் யார் வசந்தியாக இருக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.   கண்ணாடி அணிந்திருந்தவள் எழுந்து உள்ளே சென்றாள். 

சற்று நேரத்தில் வெளியே வந்தவள், ”சார் உங்களை கூப்பிட்றார்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

வைகறைச் செல்வனுக்கு அறுபது வயது இருக்கும்.  

”உக்காருங்க” என்றார்.

”தேங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

”பேப்பர்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா ?”

ஆதாரங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தவர், ”நீங்க கௌம்புங்க. ஆபீஸ்ல உங்க நம்பர் குடுத்துட்டுப் போங்க. தேவைப்பட்டா நான் கூப்புட்றேன்” என்று சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டு அந்த ஆவணங்களை பார்வையிடத் தொடங்கினார்.

வெளியே வந்து பார்த்தபோது வசந்தி இல்லை.   ‘எங்கே போயிருப்பாள்.’ என்று யோசித்துக் கொண்டே என் மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

அந்த வசந்தியிடம் ஒரு வசீகரம் இருந்தது.  பார்த்தவுடன் திமிர் பிடித்தவள் என்று தோன்ற வைக்கும் தன்மை கொண்டிருந்தது அவள் முகம்.  அந்த திமிரே அவளுக்கு அழகு  சேர்ப்பது போலவும் இருந்தது.   உலகில் என்னை விடப் பெரிய ஆள் யாரும் இல்லை என்றும் எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என்ற உணர்வை அவளைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும்படியாக அவள்  நடவடிக்கைகள் இருந்தன. 

‘அதிகம் படித்திருப்பாளோ… அதனால் இந்தத் திமிர் வந்திருக்குமோ…   நம்மைச் சட்டைகூட செய்யவில்லையே..  நாம் பார்ப்பதற்கு அழகாக இல்லையோ… அவ்வளவு மோசமும் இல்லையே.. திரும்பித் திரும்பி பார்க்க வைக்காவிட்டாலும், முகத்தைச் சுளிக்கவைக்கும் அளவுக்கு நம் தோற்றம் இல்லையே.. அவள் வேறு யாரையாவது காதலித்துக் கொண்டிருப்பாளோ…’

‘என்ன எண்ணம் இது.  எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம். இதில் ரொமான்ஸ் வேறு…’ ச்சை என்று என்னை நானே திட்டிக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன்.  என்னதான் ஒரு நெருக்கடியில் ஒரு மனிதன் இருந்தாலும் பெண் ஏற்படுத்தும் ஈர்ப்பு நீரூற்று போலல்லவா கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது ?

வைகறைச் செல்வன் அலுவலகத்தில் ஆவணங்களை கொடுத்து விட்டு வந்து ஒரு வாரம் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை.  என்னையும் அவர்கள் அழைக்கவில்லை.   வழக்கு தயார் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ரவு 12 மணி இருக்கும்.  வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார்கள் யாரோ.   லுங்கியோடு எழுந்து கதவைத் திறந்தேன்.   சபாரி அணிந்து இரண்டுபேரும், சாதாரண பேன்ட் சட்டையோடு ஐந்தாறு பேரும் இருந்தார்கள்.  வீடு மாறி வந்திருப்பார்கள்.

”யார் சார் வேணும் ?”

”மிஸ்டர் கோட்டைச்சாமி வெங்கட்.  பேங்க் மேனேஜர்.”  வந்தவர்கள் காவல்துறையினர் என்பது அவர்கள் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

”நான்தான் சார்.. என்ன விஷயம்”

”உங்களை அரெஸ்ட் பண்றோம்.”

தொடரும்.