Thursday, 27 September 2012

தீராக் காதல் 29ஹாஸ்டல் உள்ளேயும் போக முடியாது.  போன் அடித்தாலும் எடுக்க மாட்டேன்கிறாள்.  “வசந்தி கால் பேக். அர்ஜன்ட்“ என்று மெசேஜ் அனுப்பினேன். அனுப்பிய பிறகு  எனக்கே கிறுக்குத்தனமாக இருந்தது.  கால் செய்தால் அட்டென்ட் செய்யாதவள், மெசேஜுக்கு மட்டும் அனுப்பும் நிலையிலா இருப்பாள். 

‘கன்ஃபர்ம் ஆகியிருக்குமா.. ?  பயந்திருப்பாளா… மயங்கி விழுந்திருப்பாளா…  டென்ஷன் ஆகியிருப்பாளா…’

செல்போனில் அழைத்தாள்.   “எங்க இருக்க ?“ என்றாள்.

“வாசல்லயேதான் நிக்கறேன் வசந்தி… என்ன ஆச்சு வசந்தி.. டெஸ்ட் பண்ணியா… ?  என்ன ரிசல்ட்.. ? “

“வர்றேன்… அங்கயே இரு.. “

“என்னன்னு போன்ல சொன்னா என்னடி… எவ்ளோ நேரம் வெயிட் பண்றது… ?“

“டூ மினிட்ஸ் டா… ப்ளீஸ்…“ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் கட் பண்ணினாள்.

ஒவ்வொரு வினாடியும் மரண அவஸ்தையாக இருந்தது. அவள் மீது எரிச்சல் வந்தது… ‘ஏன் இப்படிச் செய்கிறாள்… ? இப்படியா பொறுப்பில்லாமல் நடந்து கொள்வாள்.  போனில் சொல்லித் தொலைத்தால் என்ன.. உயிரை எடுக்கிறாளே..’  ச்சே… பயந்து போயிருப்பாள்..  நாமாக டக்கென்று கோபப்படக் கூடாது. 

நேராக நடந்து வருவது தெரிந்தது. உடை மாற்றியிருந்தாள்.  முகத்தில் அழுததற்கான சுவடு இருக்கிறதா என்று தேடினேன்.  சுத்தமாக இல்லை.  அருகே வந்தாள்.

“நீ இன்னும் போகலையா….  போயிருப்பன்னு நெனச்சேன்.. “

“என்ன வசந்தி… என்ன ஆச்சு சொல்லு…“ எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டேன்.

“என்ன ஆச்சு… ஒண்ணும் ஆகல.. உனக்கு சமத்துப் பத்தாது மாமா.. கன்ஃபர்ம் ஆகல…  பயப்படாத.. “

“இத போன்லயே சொன்னா என்னடி கேடு உனக்கு…“ கோபத்தோடு சொன்னேன்.

“நீ இருக்கியா.. பயந்துகிட்டு ஓடிட்டியான்னு பாத்தேன் மாமா.. பரவாயில்ல தைரியமான ஆளுதான் நீ..  நான் அப்பவே வந்துட்டேன்.   அந்த மரத்துக்குப் பின்னாடி நின்னு நீ என்ன பண்றன்னு பாத்தேன்.   குட்டி போட்ட பூனை மாதிரி இங்குட்டும் அங்குட்டும் நடந்துக்கிட்டு இருக்க… ? “

எங்கிருந்துதான் எனக்கு அப்படிக் கோபம் வந்தது என்றே தெரியவில்லை.   “என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க… இடியட் மாதிரி பிஹேவ் பண்ற… எதுல விளையாடறதுன்னு உனக்கு அறிவே இல்லையா… எவ்ளோ டென்ஷனா நின்னுக்கிட்டு இருக்கேன்.. மயிரு மாதிரி பேசற… கை வெச்சதும் விட்டுட்டு ஓட்றவன்னு நெனச்சியா… என்னைப் பாத்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா ?“ பட படவென்று கொட்டித் தீர்த்து விட்டு, அவள் பதிலுக்கு காத்திராமல் வண்டியை எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.

படபடப்பும் எரிச்சலும் அடங்கவேயில்லை.   நேராக வீட்டுக்குச் சென்றேன்.   வயிறு நிறைய தண்ணீர் குடித்து விட்டுப் படுக்கையில் சாய்ந்தேன்.  கதிரொளி சீஃப் ரிப்போர்டருக்கு உடல் நிலை சரியில்லை என்று மெசேஜ் அனுப்பி விட்டு படுத்தேன்.  அவள் மீது மீண்டும் மீண்டும் எரிச்சலும் கோபமும் வந்தது.   அப்படியே படுத்து தூங்கிப் போனேன்.  மணியைப் பார்த்தேன்.   மூன்று ஆகியிருந்தது.  செல்போனை எடுத்துப் பார்த்தேன்.  இயல்பாக எடுத்துப் பார்ப்பது போலப் பார்த்தாலும், அவளிடம் இருந்து “சாரி“ என்று மெசேஜ் வந்திருக்கும் என்று கண்கள் தேடின.

எந்த மெசேஜும் வரவில்லை. திமிர் பிடித்தவள்.   என்ன ஆனாலும் சரி.  நாம் கால் பண்ணவும் கூடாது. பேசவும் கூடாது என்று தீர்மானம் செய்து விட்டு, வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றால், அவள் ஏன் இன்னும் எதுவுமே பேசவில்லை என்பதே மீண்டும் மீண்டும் உறுத்திக் கொண்டிருந்தது.

அலுவலகத்திற்குச் சென்றேன்.  எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையை பல முறை திருத்த வேண்டியதாக இருந்தது.  கவனம் செலுத்துவது கஷ்டமாக இருந்தது.  ஃபேஸ் புக்கில் லாகின் செய்தேன்.  ஆன் லைனில்தான் இருந்தாள்.  நானும் ஆன்லைன் வந்தேன்.  ஆனால் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கவேயில்லை.  அவளுக்கு மேசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்து விட்டு, அனுப்பவில்லை. 

‘என்ன பெண் இவள்… என் கோபத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள மறுக்கிறாளே…  எல்லா விஷயங்களிலும் விளையாடுவதைப் போல, இதிலும் விளையாடியதால்தானே கோபம் வந்தது.  ஒரு வார்த்தை சாரி என்று சொன்னால் என்ன குறைந்து போகும்… ?’

நானாக தொடர்பு கொள்வதில்லை என்று முடிவு செய்தேன். தினந்தோறும் மாலையில் காபி ஷாப் சென்று பழக்கப்பட்டு, அன்று மாலை அவள் இல்லாமல் இருந்தது பெரிய வெறுமையாக இருந்தது.  அவள் சென்னையில் இருந்தும், அவளைப் பார்க்காமல் இருப்பது பெரிய அழுத்தத்தை எற்படுத்தியது.  ஆனாலும், அவள் விளையாடிய விளையாட்டு ஏற்படுத்திய எரிச்சல் இன்னும் அடங்காமல் இருந்தது.

மாலை கடந்து இரவு வந்த பின்னும்,  அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.   படுக்கையில் உறக்கம் பிடிக்காமல், புரண்டு புரண்டு படுத்தும், அவள் நினைவு மட்டுமே உறுத்திக் கொண்டிருந்தது.   ஒரு வேளை நாம்தான் தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டோமோ.. சின்னப் பெண். ஏதோ விளையாட்டுத்தனமாக செய்து விட்டாள் அதற்குப் போய் அதிகமாக திட்டி விட்டோமோ…’ அப்படியே உறங்கி விட்டேன்.

காலையில் எழுந்ததும், அவள் இன்னும் பேசவில்லை என்பதே முதலில் உறைத்தது.  எதுவுமே யோசிக்காமல் “குட் மார்னிங்” என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.  பதிலுக்கு அவளும் குட் மார்னிங் என்று அனுப்பினாள்.  மாலையில் காபி ஷாப்புக்கு போகலாமா என்று அனுப்பினேன்.  யெஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அனுப்பினாள்.

அலுவலகம் கிளம்பி எடிட்டர் திருத்தித் தரச் சொல்லி அனுப்பியிருந்த கட்டுரையை மீண்டும் சரி பார்த்து எழுதி முடித்தேன்.  மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளையும் பார்த்து அனுப்புமாறு மெயிலில் அனுப்பியிருந்தார். அனைத்தையும் பார்த்து முடிக்கையில் மாலை ஆகியிருந்தது.  நான் இப்போது வந்து உன்னை பிக்கப் செய்து கொள்ளட்டா என்று செய்தி அனுப்பியதும், கம் டு ஹாஸ்டல் என்று பதில் அனுப்பியிருந்தாள்.

வேலைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டு, ஹாஸ்டல் கிளம்பினேன். வந்து விட்டேன் என்று தகவல் அனுப்பியதும் வருகிறேன் என்று சொல்லி விட்டு, வழக்கம் போல 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாள். எதுவும் பேசாமலேயே காபி ஷாப் சென்றோம்.   உம்மென்று உட்கார்ந்திருந்தாள்.
“நீ அப்படி பண்ணது சரியா வசந்தி… இப்டி வெளையாடலாமா ?“

“அதுக்காக… அப்பிடி திட்டுவியா… ?  கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்ற… ?  எங்க அப்பா என்ன ஒரு நாள் கூட அப்பிடியெல்லாம் திட்னதேயில்ல தெரியுமா ?“

“வசந்தி… எவ்ளோ டென்ஷனோடு வெளியில நின்னுக்கிட்டு இருந்தேன்.  போன் பண்ணா எடுக்கல… எஸ்எம்எஸ் பண்ணா ரிப்ளை பண்ணல… அரை மணி நேரம் கழிச்சு வந்து, சும்மா வெளையாட்டுக்கு அப்டி பண்ணேன்னு சொன்னா கோவம் வருமா வராதா… உன்னைத் திட்டாம என்ன பண்றது ?“

“நான் ஒத்தப் பொண்ணு… செல்லமா வளந்தேன்.   நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்…  ஒரு சின்ன விஷயத்துக்கே இப்டி திட்ற… நாளைக்கு என்னை எப்படி சந்தோஷமா வச்சுக்கப் போற….“

இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று சற்று மலைப்பு வந்தது.   செய்த தப்பை ஒத்துக் கொள்ளாமல் நியாயப்படுத்தியே பேசிக் கொண்டிருக்கிறாளே…

“நீ பண்ற தப்ப ஒத்துக்கவே மாட்டியாடி….“

“வெங்கட்… வயிறு வலிக்கற மாதிரி இருக்கு வெங்கட்…  இன்னைக்கு நைட் ஸ்டார்ட் ஆயிடும்னு நெனைக்கிறேன்…“

எனது அனைத்துக் கோபமும் மனதை விட்டு தும்மலைப் போல வெளியேறியது.

“ரொம்ப வலிக்குதா வசந்தி…?”

“வலிக்குது. பட் இன்னும் ஸ்டார்ட் ஆகல..   ஸ்வீட் சாப்பிட்டா சீக்கிரம் வந்துடும். கேக் ஆர்டர் பண்ணு.”

சர்வரை அழைத்து கேக் எடுத்து வரச் சொன்னேன்.

“நாளன்னைக்கு  ஊருக்குப் போகணும்.  எங்க அப்பாக்கு பர்த்டே.  பகல் ட்ரெயின்லதான் போலாம்னு இருக்கேன்.  நீயும் வர்றியா… ?“

“நான் மதுரைக்கு வந்து எங்கடி தங்கறது…  நீ பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடுவ.. நான் மட்டும் என்ன பண்றது.. “

“எங்க வீட்டுக்கு வா… எங்க அப்பா அம்மாவைப் பாத்துட்டுப் போ.. “

“டிக்கெட்ஸ் போட்டாச்சா….“

“இன்னும் இல்ல.. டட்கல்ல புக் பண்ணு. “

லுவலகத்துக்கு என்ன பொய் சொல்லி லீவ் எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவசரமாக ஒரு ட்ராவல் ஏஜென்ட்டைப் பிடித்து, வைகையில் ஏசியில் இரண்டு சீட்கள் புக் செய்தது 1200 ரூபாய் ஆனது.  அவள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் பத்திரமாக அவளை மதுரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருந்தது.  அவள் ஹாஸ்டலுக்கு அருகிலேயே ரயில் நிலையம் இருந்ததால் நேராக ஹாஸ்டல் சென்றேன்.  செல்லும்போதே, அவள் உடல் நிலை கருதி, ஜுஸ் வாங்கி வைத்துக் கொண்டேன்.

ரொம்ப சோர்வாக இருந்தாள்.   கண்களில் களைப்பு தெரிந்தது. ரயிலில் ஏறியதும், என் மேல் சாய்ந்து கொண்டாள்.   சற்று நேரத்தில் மடியில் படுத்து உறங்கி விட்டாள்.  உறங்குகிறாள் என்று நினைத்துப் பார்த்தேன், அழுது கொண்டிருந்தாள். 

“என்ன வசந்தி… ஏன் அழுவுற…“

“வயிறு வலிக்குது வெங்கட்…“  இந்த நேரத்தில் அவள் வலியில் பங்கு கொள்ள முடியாத கையறு நிலை விரக்தியை ஏற்படுத்தியது.   அப்படியே உறங்கி விட்டாள். மதுரையில் இறங்கியதும், அவள் வீட்டுக்கு 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றாள்.  நான் இங்கேயே ரூம் எடுத்துத் தங்கி விடுகிறேன் என்று சொன்னாலும், என் வீட்டு வரை வந்து என்னை விட்டு விட்டு வா என்று பிடிவாதமாகச் சொன்னாள்.

டவுன் பஸ் பிடித்து அவள் வீடு வரை சென்று இறக்கி விட்டு விட்டு, மீண்டும் மதுரை டவுனுக்கு வந்தேன்.  நாளை என்னை வீட்டுக்கு அழைப்பதாகச் சொல்லியிருந்தாள்.

பார்ப்பதற்கு சுமாராக இருந்த ஒரு லாட்ஜில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வாடகை சொன்னார்கள்.  அதே அறையில் தங்கினேன்.   சென்னையைப் போலவே மதுரையும் பரபரப்பாகத்தான் இருந்தது.   எங்கு பார்த்தாலும் உணவகங்கள். எளிமையான மனிதர்களாக தோன்றினார்கள்.  

காலை 10 மணிக்கே அழைத்தாள்.  “வெங்கட்..  நேரா பஸ்டான்ட் உள்ள போயி, பறவை போற பஸ் எங்க நிக்கும்னு கேட்டுக்க.  அந்த பஸ்ல ஏறி, காய்கறி மார்க்கெட்னு கேட்டா எறக்கி விடுவாங்க.  வந்து எறங்கிட்டு போன் பண்ணு.  நானே வந்துட்றேன். “

இறங்கி விட்டு போன் செய்ததும், துள்ளிக் கொண்டு ஐந்தே நிமிடங்களில் வந்தாள்.  அங்கிருந்து ஐந்து நிமிடங்களில் அவள் வீடு வந்தது. 

“அப்பா நான் சொன்னேன்ல… கோட்டைச்சாமி.. இவருதாம்பா….“

“வாங்க தம்பி.. உக்காருங்க. “ என்றவர் ஒடிசலான தேகத்தோடு இருந்தார்.   எளிமையான கிராமத்து முகம்.   சற்று நேரத்தில் அவள் அம்மா வந்து, “வாங்க தம்பி“ என்ற தண்ணீர் கொடுத்தார்.

“தம்பிக்கு சொந்த ஊரு எது.. ? “ என்று அவள் அப்பா ஆரம்பித்தார்.

சொன்னேன்.  “என் பேரு மீனாட்சி சுந்தரம் தம்பி.  மதுரை மீனாட்சி பேரை வச்சாங்க.   பாப்பா உங்களப் பத்தி நெறய்ய சொல்லியிருக்கு.  நல்லா எழுதுவீங்கன்னு.  நான் கதிரொளி தவறாம படிக்கறவன் தம்பி.  நெறய்ய எழுதியிருக்கீங்க.  படிச்சுருக்கேன்.  கூடப்பொறந்தவங்க எத்தனை பேரு…“

சொன்னேன்.

“நான் நெனைவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து பார்ட்டியிலதான் இருக்கேன் தம்பி.   மீனாட்சி சுந்தரம்னா மதுரையில தெரியாத ஆளே இருக்க முடியாது. “

மவுனமாக சிரித்து விட்டு அமர்ந்திருந்தேன்.  பதற்றமாகத்தான் இருந்தது.  என்னை அளவெடுப்பதற்காக இந்த ஆள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறாரோ என்று தோன்றியது.   ஏதாவது சொல்லியிருப்பாளா ?

“நான் இந்த ஜாதி கீதியெல்லாம் பாக்கறதில்ல தம்பி.   நம்ப வீட்டுக்கு எல்லாரும் வந்து சாப்பிடுவாங்க.  பொண்ணையும் அப்படித்தான் வளத்துருக்கேன்.  ரொம்ப சுதந்திரமான பொண்ணு. “

அந்தக் கணம் முதல் அவரைப் பிடிக்காமல் போனது.   ‘எல்லோரும் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள் என்று என்னிடம் எதற்காகச் சொல்ல வேண்டும் ?  நீ என் வீட்டில் வந்து சாப்பிடுவதை நான் பெரிய மனது பண்ணி அனுமதிக்கிறேன் என்பதற்காகவா ?   ஒரு தாழ்த்தப்பட்டவனை வீட்டுக்குள் அழைத்து சோறு போடுவதை ஏதோ ஒரு புரவலரின் செயலாக நினைக்கும் இவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான்… இவன் மனதில் எப்படி ஒரு சாதி வன்மம் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை வெளிப்படும் ?‘

என் முகம் மாறியதை வசந்தி கவனித்து விட்டாள். அவளைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.

மீனாட்சி சுந்தரம் தொடர்ந்தார்.  “இந்தப் பிள்ளைக்குத்தான் ஒரு மாப்பிள்ளை பாக்க தேடிக்கிட்டே இருக்கேன்… ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்கது தம்பி..  நீங்கதான் மெட்றாஸ்ல இருக்கீங்களே… ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்களேன்..  நான் இந்த சாதி கீதியெல்லாம் பெருசா பாக்கறதில்ல தம்பி..  பையன் நல்ல பையனா இருக்கணும்.  இவளை நல்லா வச்சுக் காப்பாத்தணும்.  அவ்வளவுதான். “

“சொல்றேன் சார். “ என்றேன்.

“அப்பா சாப்பாடு போடட்டா.. நேரமாகுது.. சாப்ட்ருங்க.. “ என்றாள். 

“கையைக் கழுவிட்டு வாங்க தம்பி.

எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. “இல்ல சார்.  இன்னொரு ஃப்ரென்ட் வீட்டுக்கு லன்ச்சுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தேன்.  போகனும்.“

“வீட்டுக்கு மொத மொத வந்துருக்கீங்க.. சாப்பிடாமப் போனா எப்படி   தம்பி ? “

அவள் கண்ணாலேயே கெஞ்சினாள்.   எனக்கு அவளிடம் கண்ணில் பேசிக் கொண்டிருப்பதைப் அவள் அப்பா பார்த்து விடப் போகிறாரோ என்ற பயமாக இருந்தது.   அதற்குள் எஸ்எம்எஸ் அனுப்பினாள்.  “வெங்கட் ப்ளீஸ்.  உனக்காக நானே சமைச்ச வச்சுருக்கேன்.   ப்ளீஸ். “

கோபத்தையெல்லாம், துடைத்து ஓரமாக வைத்து விட்டு, அவள் தந்தையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தது போல சரி சார் என்று தலையாட்டினேன்.

பிரியாணி செய்திருந்தார்கள்.  இரவு உணவு சாப்பிட முடியாத அளவுக்கு சாப்பிட்டேன்.  அவள் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி.  “தேங்க்யூ மாமா…“ என்று எஸ்எம்எஸ் அனுப்பினாள்.

கிளம்பி நேராக ஹோட்டலுக்கு வந்தேன்.  மாலை 4 மணிக்கு வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தாள்.  நாலு மணிக்கு தயாராகி, கீழே இறங்கி வந்து நின்றேன்.  

“வா உனக்கு எங்க ஊர் ஜிகர்தண்டா வாங்கித் தர்றேன்.  இது மாதிரி சாப்ட்ருக்கவே மாட்ட. “ திருமலை நாயக்கர் மஹாலைத் தாண்டி ஒரு கடைக்கு அழைத்துச் சென்றாள். 

“அப்பா என்னடி சொன்னாரு ?“

“ம் ம்… ஒண்ணும் சொல்லல. “ என்று அவள் சொல்லும் போதே ஏதோ விவாதித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. 

“சொல்லு வசந்தி..  என்ன சொன்னாரு…“

“நீ ஜர்னலிஸ்டா இருக்கறதுனால ஒனக்கு நெறய்ய பேரைத் தெரியுமாம்.  அதுனால நீ கண்டிப்பா ஒரு மாப்பிள்ளை பாத்து சொல்லுவியாம்.“  

தப்பித் தவறி இவனைக் காதலிக்கிறேன் என்று சொல்லி விடாதே என்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு இது.  

“உங்க அப்பா இன்டைரெக்டா என்னை வேண்டாம்னு சொல்றாருன்ன அர்த்தம்“

“அப்படியெல்லாம் இல்லை வெங்கட்.  நம்ம மேட்டர் இன்னும் அவங்களுக்குத் தெரியாதுல்ல.. அதுக்குள்ள எப்படி இந்த முடிவுக்கு   வர்ற.. “

“பொண்ணைப் பெத்தவங்கள கொறச்சு எடை போட்றாத வசந்தி.  ஒரு பையனை நீ வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அளவுக்கு பழகறன்னா அவன் உனக்கு எந்த அளவுக்கு க்ளோஸ்னு அவங்களுக்கு தெரியும். தெரியாமையா உங்க அப்பா இப்படி பேசுறாரு.. “

“இல்லை வெங்கட். எங்க அப்பா ரொம்ப லிபரல்.  அப்பிடியெல்லாம் நெனைக்காத…இதப்பத்தி அப்புறமா பேசலாமா வெங்கட்..  நல்ல மூட்ல இருக்கோம்.  ஸ்பாயில் பண்ணிக்க வேணாமே.. “

“இதப் பத்திப் பேசாம வேற எதப் பத்தி பேசறது வசந்தி..  இப்டியே ஊரைச் சுத்திக்கிட்டு இருப்போம்..  நீ வேற யாரயாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிடுவ… ஐ யம் சாரி வெங்கட். எனக்கு வேற வழி தெரியலன்னு சொல்லுவ.. அதான் நடக்கப் போகுது.“ 

“அப்படியெல்லாம் இல்ல வெங்கட்.   மெட்றாஸ் போயிப் பேசிக்கலாம் பா.. ப்ளீஸ் டா.. என் கண்ணுல்ல…“

‘இதற்கு மேல் இவளிடம் என்ன பேசுவது…’

அதற்குப் பிறகு அவளிடம் பேசியிருந்து விட்டு அன்று இரவே சென்னைக்குக் கிளம்பினேன்.

அடுத்த நான்கு நாட்களுக்கு வேலை சரியாக இருந்தது.   ஆனால் காபி ஷாப் போவது தவறாமல் நடந்தது. அந்த சனிக்கிழமை காலை சினிமா பார்த்து விட்டு, வரும்போது தன்னை மீண்டும் பெண் பார்க்க அடுத்த வாரம் வர இருப்பதாக சொன்னாள்.

“இப்படியே ஒவ்வொருத்தன் முன்னாடி போயி எத்தனை நாள் நின்னக்கிட்டு இருக்கறதா உத்தேசம் வசந்தி… ?  வீட்ல பேசறதா ஐடியா இருக்கா இல்லையா… ?“

“என்னை என்ன வெங்கட் பண்ணச் சொல்ற.. பயமா இருக்கு வெங்கட்.  அம்மா ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்கு… தாங்கவாங்களான்னு சந்தேகமா இருக்கு.. “

“அப்போ உங்க அம்மா ஹெல்த் சரியாகறதுக்கு ஒரு 10 வருஷம் ஆச்சுன்னா அது வரைக்கும் வெயிட் பண்ணலாமா ?“

“என்ன வெங்கட் இப்டி எதுக்கெடுத்தாலும் கோவப்பட்ற ?.  கொஞ்ச நாள் போகட்டும் வெங்கட்.“

“வசந்தி.. என்னால காலா காலத்துக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது.   எப்போ பேசற உங்க வீட்லன்னு சொல்லு.  இல்லன்னா சொல்லு நான் பேசறேன்.“

“அவ்ளோ தைரியமா நீ பேசிடுவியா… பேசு பாப்போம்.  இந்தா எங்க அப்பா நம்பர்.. “ என்று கொடுத்தாள்.

நம்பரை வாங்கி என் மொபைலில் டயல் செய்தேன்.  நான் விளையாடுகிறேன் என்று நினைத்துக் கொண்டு நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

ரிங் போனது… 

“ஹலோ என்றார்.. “

“மிஸ்டர் மீனாட்சி சுந்தரம்… ? “

அவள் முகத்தைப் பொத்திக் கொண்டு வேணாம் என்று துடித்தாள்.

“ஆமாங்க…“

“சார் வணக்கம்.   நான் கோட்டைச்சாமி பேசறேன்.   போன வாரம் உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே….“

“சொல்லுங்க தம்பி.  நல்லா இருக்கீங்களா ? “

“நல்லா இருக்கேன் சார்.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. “

“சொல்லுங்க தம்பி…“

“உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்பட்றேன்.  நான் பேசறது உங்க பொண்ணுக்குத் தெரியாது.  நேரா உங்ககிட்ட கேக்கலாம்னு தோணுச்சு. “

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

“நாங்க எங்க பொண்ணுக்கிட்ட பேசிட்டு தகவல் சொல்றோம் தம்பி. “ என்று லைனைக் கட் செய்தார்.

“வைத்தவுடன், என்ன வெங்கட் இப்படிப் பண்ணிட்ட…  விளையாட்டா சொன்னதுக்கு இப்படியா பேசுவ….. அய்யோ…. என்ன நடக்கப் போகுதோ“ என்று அவள் புலம்பிக்கொண்டேயிருந்த போது அவள் செல்போன் அடித்தது.

அவள் அம்மா.

தொடரும்.

Tuesday, 25 September 2012

தீராக் காதல் 28இதயம் வேகமாகத் துடித்தது.    அந்தத் தியேட்டரின் குளிரையும் மீறி வேர்ப்பது போலிருந்தது.   அவள் பதில் சொல்லாமல் தயங்கிய அந்த ஒவ்வொரு நொடியும் மூச்சுத் திணறல் ஏற்படுவது போலிருந்தது.  

‘அவசரப்பட்டு விட்டோமோ… அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையோ..   இத்தோடு நம்மிடம் பேசுவதை நிறுத்தி விடுவாளோ..’ என்று பல்வேறு எண்ணங்கள் படபடப்பாக கடந்தன.

“ம்.. போலாம்….” என்று அவள் சொல்லிய போது உற்சாகம் ஏற்படுவதற்கு பதிலாக அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது.  அவள் சொன்ன பதிலின் தாக்கம் சற்று தாமதமாக உறைத்தது. 

”இப்போவே போலாமா… ? ” என்றேன்.

”ம்” என்று மட்டும் பதில் சொன்னாள்.  பதற்றம் வந்தது போலிருந்தது.  உடனே எழுந்திருப்பதா… இல்லை படம் ஆரம்பித்ததும் கிளம்பலாமா..  சட்டென்று எழுந்தேன்.   அவளும் எழுந்தாள்.

தியேட்டரில் படம் தொடங்குவதற்காக காத்திருந்தவர்கள், ஏதோ எமர்ஜென்ஸி போலிருக்கிறது என்று நாற்காலியில் இருந்து பின்னால் நகர்ந்து அவசரமாக வழி விட்டார்கள்.  தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், வண்டியை ரொம்ப தூரத்தில் நிறுத்தியிருப்பது நினைவுக்கு வந்தது.  ‘ச்சே… பார்க்கிங்குக்கு ஒரு நூறு ரூபாய் கேட்பான்.. இதற்குப் போய் கஞ்சத்தனம் பார்த்துக் கொண்டு…. என்று என் மீதே அலுப்பாக இருந்தது.  சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.   சிகரெட் பிடித்தால் திட்டுவாள்.  பேசமாட்டாள்.  அதுவும் வீட்டுக்குப் போகும் இந்த நேரத்தில் சிகரெட் பிடித்தால் அவ்வளவுதான்.’

இருவரும் எதுவும் பேசாமல் நடந்தோம்.   ஏதாவது பேசி நிலைமையை இயல்பாக்க வேண்டுமென்று முயற்சி செய்தால் என்ன பேசுவதென்று எதுவுமே பேசுவதற்கு இல்லாதது போலிருந்தது. 

அவசர அவசரமாக நடந்து வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றோம்.   ஏதாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்தேன்.  எதுவுமே பேசத் தோன்றவில்லை.  கண்ணாடி வழியாக அவள் முகத்தைப் பார்த்தேன்.  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.   “வசந்தி… “ என்று அழைத்தேன்.  “ம்“ என்றாள். “சாப்பிட வீட்ல எதுவும் இருக்காது.  உனக்கு சாப்ட ஏதாவது வாங்கிக்கலாமா ?“

“ம்“ என்றாள்.  “என்ன வேணும் ?“

“பிஸ்கட் வாங்கு.. “

நல்ல பேக்கரியாகப் பார்த்து வண்டியை நிறுத்தி என்ன பிஸ்கட் வேண்டும் என்று கேட்டேன்.   லிட்டில் ஹார்ட்ஸ் வாங்கிக் கொண்டாள்.  இந்தப் பெண்கள், சாப்பிடும் விஷயத்தில் கூட நளினமாகத்தான் இருக்கிறார்கள்.    காபியில் இதயம் வரைந்தால் ரசிக்கிறார்கள்.  இதய வடிவில் அமைந்துள்ள பிஸ்கட்டை விரும்புகிறார்கள்.  

வண்டி வீட்டை நெருங்க நெருங்க பக்கத்து வீட்டில் யாராவது இருப்பார்களோ என்ற பயம்  வந்தது.  டக்கென்று அவளும் கேட்டாள். 

“உங்க பக்கத்து வீட்டுல யாராவது இருப்பாங்களா வெங்கட் ?“

“அதெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க“

உள்ளுக்குள் யாரும் இருக்கக் கூடாதே என்று இருந்தது. இன்று சனிக்கிழமை.  காலை 10 மணிக்கு வீட்டை அடைந்தால் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அப்போதுதான் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு, வீட்டுக்குள் வேலையாக இருப்பார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டடேன். 

வண்டியை நிறுத்திய உடனேயே வசந்தியிடம், நான் முன்னால் போனதும், என் பின்னாலேயே வேகமாக வர வேண்டும் என்று.  வேக வேகமாக இரண்டாவது மாடியை அடைந்தோம். 

அன்றெக்கென்று பார்த்து, சொல்லி வைத்தார்ப் போல, ,இரண்டு பெண்கள் வாசலிலேயே உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்….  அவசர அவசரமாக பூட்டைத் திறந்து உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழ் போட்டேன்.  சோஃபாவில் அமர்ந்தாள்.

“வா உள்ளே வந்து வீட்டைப் பாரு.“ என்று அழைத்தேன்.

“கொஞ்சம் இரு. படபடப்பா இருக்கு… தண்ணி குடு.. “ என்றாள்.

ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தேன். எழுந்து உள்ளே வந்தாள்.  ஒவ்வொரு அறையாக காண்பித்தேன். 

“இதுதான் உன் ரூமா… ?“

“ம்ம். “ எனக்கு இருந்தது போலவே அவளுக்கும் பதற்றம் இருந்ததை உணர முடிந்தது.  ஐந்து நிமிடம் தொடர்ந்தாற்போல இடைவெளி விடாமல் சிரித்துக் கொண்டிருப்பவள், இன்டர்வ்யூவுக்குப் போவது போல சீரியசாக இருந்தாள். 

‘இப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதானா… ?   திரையரங்கில் இருட்டில் இருந்த தைரியம் இப்போது வர மாட்டேன்கிறதே…’ ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, லேப்டாப்பை ஆன் பண்ணட்டா ?  “ஃபேஸ் புக் பாக்கனுமா ? “ என்று கேட்டு விட்டு, அவள் பதிலுக்குக் காத்திராமல், லேப்டாப்பை ஆன் செய்தேன்.  நான் லேப்டாப்பை ஆன் செய்து கொண்டிருக்கும் போதே, என்னை பின்புறமாக வந்து கட்டி அணைத்து, காதருகே வந்து “நீ இருக்கும்போது ஃபேஸ் புக் எதுக்கு மாமா ? “ என்று கிசுகிசுத்தாள்…

திடீரென்று என்னுள் புகுந்த வெறி என்னை ஆட்கொண்டது. அடுத்த வினாடியே அவளைக் கட்டியணைத்து படுக்கையில் சாய்த்தேன்.  என்னால் ஆட்கொள்ளப்படக் காத்திருந்தவள் போல நெகிழ்ந்தாள். வாசனையாக இருந்தாள். அவள் வாசனை என்னை வெறி கொள்ளச் செய்தது.   வெறியோடு அவளை அள்ளினேன்.   அள்ள அள்ள அணுக்கமானாள்.  மூர்க்கமாக முத்தமிட்டேன்.   மூர்க்கத்தை முறியடித்தாள்.  நுகர்ந்தேன். மலரானாள்.  பருகினேன். அமுதமானாள்.  படர்ந்தேன்.  பரவினாள்.  மோசமான பட்ஜெட்டைப் பார்த்த பங்குச் சந்தை போல என் முத்தங்கள் சரிந்தன.  குடகுக் காவிரியாய் பொங்கினாள்.  “வெங்கட்…..“ என்று கத்தினாள்.     அவள் வாயைப் பொத்தினேன்.  ஏகாந்தவெளியில் சஞ்சரிக்கும் போது கூட, பக்கத்து வீட்டுக்கு தெரிந்து விடப்போகிறதே என்ற கவலையைத் தவிர்க்க முடியவில்லை. 

வியர்வையை துடைத்து விட்டுப் படுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.   இதைத்தான் சொன்னானா பாரதி, ‘காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும் என்று… ?’  புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் கிடைத்தது போலிருந்தது.   மனம் சலசலப்பு இல்லாமல் அமைதியாக இருப்பது போலிருந்தது.  ‘இப்போது சிங்காரவேலு பற்றிய ஆவணம் கிடைத்திருந்தால் இதை விட்டு விட்டு அதை வெளியிடும் வேலையைச் செய்திருப்பேனா’ என்று தோன்றியது..  சிங்காரவேலுவாவது புடலங்காயாவது…  இந்த நேரத்தில் அவன் எண்ணம் எதற்கு…

“வெங்கட்….“

“ம்“

“நாம எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கலாம் வெங்கட்…“

“பண்ணிக்கலாம்.. “

“என்ன நீ… சலிச்சுக்கிட்டு பதில் சொல்ற…“

“பண்ணிக்கலாம்மா.. கண்டிப்பா பண்ணிக்கலாம். “

“எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க வெங்கட். “

“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் வசந்தி.  உனக்கு வேற கல்யாணம் பண்ண ட்ரை பண்ணாங்கன்னா, ஹேபியஸ் கார்ப்பஸ் போட்டுட்றேன்.   என் பொண்டாட்டிய கடத்தி வெச்சுருக்காங்கன்னு… உங்க அப்பன் அலறிடுவான்.. “

“லூசு மாதிரி பேசாத வெங்கட்..  என்னால அப்படியெல்லாம் பண்ண முடியாது.  எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு.  ஏதாவது ஆச்சுன்னா அவங்க செத்துப் போயிடுவாங்க…“

‘இந்தப் பெண்களை என்னதான் செய்வது.. ?  என்னைக் காதலித்து விட்டு, நான் அவளுக்கு வேண்டுமென்றும் சொல்கிறாள்.   அப்பா அம்மாவும் முக்கியம் என்று சொல்கிறாள்.  அப்பா அம்மா செத்துப் போனால் பரவாயில்லை என்றா சொல்ல முடியும் ?’

பதிலேதும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக இருந்தேன். 

“சொல்லு வெங்கட்.   கம்முனு இருக்க.. “

“நாளைக்கேவா உனக்கு கல்யாணம் ஆகப்போகுது… ஆகும்போது பாத்துக்கலாம்.. “

உடனே எங்கேயோ அவளை விட்டு விட்டுப் போய் விடுவது போல, என்னை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.   

“இன்னைக்கு நைட் இங்கயே தங்கிடேன் வசந்தி… ஹாஸ்டல்ல சொன்னா போதுமா… லெட்டர் எழுதிக் கொடுக்கணுமா ? “

“அய்யய்யோ…  நான் தங்க மாட்டேம்பா…  என்னை ஒரு வழிப் பண்ணிடுவ… நாளைக்கு எனக்கு நெறய்ய வேலை இருக்கு.“

மதியம் சமைத்தாள்.  பறிமாறினாள். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல ஊட்டி விட்டாள்.  மனதுக்குப் பிடித்தவனை குழந்தையாகவே பார்க்கிறார்கள் பெண்கள்.  அவனைத் தாலாட்டுகிறார்கள்.  தாங்குகிறார்கள்.  அவன் மீது அன்பைப் பொழிகிறார்கள். பாசத்தால் திக்குமுக்காட வைக்கிறார்கள்.

மாலை அவள் கிளம்பும் நேரம் வந்ததும், வசந்தி.. டைம் ஆச்சு.. கௌம்பு என்றேன்..

“தங்க சொன்ன… இப்போ போன்னு சொல்ற…. நான் உனக்கு போர் அடிச்சுட்டேன்.. இல்ல ?“

“என்னம்மா… நீதானே தங்க முடியாது போகணும்னு சொன்ன. நீ சொன்னதும், தங்குனா ஹாஸ்டல்ல ஏதாவது ப்ராப்ளம்னு நெனச்சுட்டேன்.“

“நான் சொன்னா.. உடனே சரின்னுடுவியா… அப்போ உனக்கு நான் போனாப் போதும்.. “ என்று சொல்லி விட்டு சிரித்தாள்.  என்னை திணற வைப்பதில் அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு.

“…என்ன வசந்தி இப்டி பண்ற…  நான்தானே உன்னைத் தங்குன்னே சொன்னே..“

“சரி சரி…  அழாத செல்லம்…   நீ தங்குன்னு சொன்னதுமே, நான் லோக்கல் கார்டியன் வீட்ல தங்கிக்கறேன்னு மெசேஜ் அனுப்பிட்டேன்.  உண்மையிலேயே நான் தங்கணும்னு ஆசைப்பட்டியா.. இல்லை சும்மா சொன்னியான்னு டெஸ்ட் பண்ணேன்.“

“உனக்கு என்னை இப்படி வம்பு பண்றதுல என்னடி சந்தோஷம்..? “

“இதுலதான் எனக்கு சந்தோஷம்.. “. சிரிப்பு. “திரு திருன்னு முழிக்கற பாரு..  அதப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு“

மறுநாள் மாலை கிளம்பும் வரை என்னை ஒரு நிமிடம் கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடவில்லை.  சமைக்கும் போது கூட, என் பக்கத்திலேயே இரு என்று பக்கத்தில் வைத்துக் கொண்டாள்.  பேப்பர் படிக்கக் கூட விடவில்லை.  நான் இருக்கும் போது உலக செய்தி அவ்வளவு முக்கியமா என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள். 

கிளம்பும்போது அழுதாள்.  “என்ன வசந்தி இது… ஏன் இப்போ கண்ணைக் கசக்கற…“

“எனக்குப் போகவே மனசு இல்லை வெங்கட்…. உன் கூடவே இருக்கணும் போல இருக்கு.. “

“இன்னைக்கும் தங்கலாம் வசந்தி.. பட் உனக்கும் நாளைக்கு ஆபீஸ் இருக்கு.. எனக்கும் வேலை இருக்கு.  மார்னிங் கிளம்புனா டென்ஷன். எனக்கு மட்டும் உன்னைத் தங்க வைக்க ஆசையில்லையா… ?“

ஹாஸ்டலில் இறக்கி விட்டவுடன் மீண்டும் அழுதாள்.   என்ன இது இப்படி இருக்கிறாளே… இவள் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளா விட்டால் செத்துக் கித்து போய் விடுவாளோ என்று பயமாகக் கூட இருந்தது.  மறுநாள் உடம்பு வலி என்று லீவ் எடுத்தாள்.   உன்னால்தான் என்று செல்லமாகத் திட்டினாள்.

டுத்த பதினைந்து நாட்கள் கதிரொளி அலுவலகத்தில் நான் செலவிட்ட நேரம் குறைந்து போனது.  எப்போது ஸ்டோரியை அடித்து முடிப்போம், கிளம்புவோம் என்று பரபரப்பாக கிளம்பினேன்.  எடிட்டர் கூட ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்.

உல்லாசப் பறவைகளாக சென்னையைச் சுற்றினோம்.  சென்னை நகரில் உள்ள பணக்கார மால்கள் எனக்கு பூர்ஷ்வா கலாச்சாரமாகத் தெரியாமல் போயின.  சென்னை நகரில் உள்ள அத்தனை மால்களும் அத்துப்படியானது.  ஸ்பென்சர், சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு, ஸ்கை வாக் என்று ஒவ்வொரு இடமாக புனித யாத்திரை போவது போலச் சென்றோம்.  

ட்ரெஸ் வேண்டும் என்று கேட்டாள்.  ஸ்கை வாக்கில் உள்ள ஷோ ரூமுக்கு அழைத்துச் சென்றாள்.  தலையணை உறையை கையும் காலும் வைத்து சற்று நீளமாக தைத்தது போல இருந்த உடையை 1600 ரூபாய் விலை போட்டிருந்தார்கள்.   மறு பேச்சு பேசாமல் வாங்கினேன்.  ப்ளாஸ்டிக் பணம் இருக்கும் வரை என்ன கவலை ?  அந்த மாலிலேயே இருந்த பிபா, மேக்ஸ், மெலாஞ், இன் ஸ்டோர் என்று ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு நாள் உடை வாங்கினோம்.  டாப்ஸ், லெக்கிங்ஸ், பாட்டியாலா பாட்டம், டைட்ஸ், என்று பெண்கள் உடைகள் அத்துப்படியாகின.  உள்ளாடைகளின் அளவுகளின் தாத்பரியத்தை விளக்கினாள்.  ஒரு ட்ரெஸ் எடுக்க மூன்று மணி நேரம் செலவழித்தாள்.  பத்து முறை ட்ரயல் பார்த்தாள்.  ட்ரையல் ரூம் வாசலில் என்னைப் போலப் பரிதாபமாக நின்று கொண்டிருந்த ஆண்களோடு நானும் சேர்ந்து காத்திருந்து, ஒவ்வொரு ஆடையை உடுத்தி வெளியே வரும்போதும், சூப்பர், அட்டகாசம், என்று சொல்லப் பழகிக் கொண்டேன்.  ட்ரையல் ரூம் வாசலில் நின்று கொண்டு, மற்ற அறைகளில் இருந்து வெளியே வரும் மற்ற பெண்களையும் சேர்த்து ரசிப்பது வாடிக்கையாகிப் போனது.

லிப்க்ளாஸில் எத்தனை வகைகள், லிப்ஸ்டிக்கில் எத்தனை வகைகள், முகத்தில் ஃபவுன்டேஷன் போடுவதற்கு என்னென்ன வகைகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு ஃபேஸ் வாஷ், வகைவகையான நெயில் பாலீஷ் வகைகள் என்று என் பொது அறிவு விரிந்து கொண்டே போனது.

மால்கள் போரடித்தவுடன், தியாகராய நகரின் வீதிகளை அளவெடுத்தோம். நான் என் யதார்த்த உலகத்தை விட்டு வெகு தூரம் போயிருந்தேன். 
ஒரு நாள் காலை ஆறு மணிக்கு அவள் செய்த போன் அழைப்பு, நிம்மதியைக் கெடுத்தது. 

“வெங்கட்… டேட்ஸ் தள்ளிப் போயிடுச்சுடா….“.  அவள் குரலில் பதற்றம் மட்டுமே இருந்தது. 

“எத்தனை நாள் ஆச்சு.... “

“நாளு நாள் வெங்கட்… பயம்மா இருக்குடா…“ என்று அழத் தொடங்கினாள்.
அவளை விட எனக்குப் பதற்றம் அதிகரித்தது.  ‘எப்படிச் சமாளிப்பது… என்ன செய்வது.. யாரிடம் கேட்பது..  வெளியே தெரிந்தால் என்ன ஆகும்… சேஃப் பீரியட் ஒன்றும் ஆகாது என்று அவள்தானே சொன்னாள்..’

“நீ பதட்டப்படாமல் ஹாஸ்டல்லயே இரு… நான் வர்றேன்.. அழாத வசந்தி… அன்ட் டோன்ட் ஒர்ரி.. “

நாசர் நினைவுக்கு வந்தான்.   பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.   வேறு யாரிடமும் விவாதிக்க முடியாது.   வெளியே தெரிந்தால் என்ன ஆகும்… அழைத்தேன். விபரத்தைச் சொன்னேன்.

“என்னடா இது… இவ்வளவு நாளா போனே பண்ணலையேன்னு நெனைச்சேன்…  கங்கிராஜுலேஷன்ஸ்… அப்பா ஆகப்போற… ட்ரீட் குடுக்காம கவலையாப் பேசற….“

“நாசர் விளையாடாத… … ஐ யம் இன் ய மெஸ்….“

“திஸ் ஈஸ் நாட் ய மெஸ் வெங்கட்.. திஸ் ஈஸ் ப்ளிஸ்…“

“அய்யோ நாசர்… நெலமையப் புரிஞ்சுக்க நாசர்…“

“புரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்… நீங்க ரெண்டு பேரும் வேற வேற கம்யூனிட்டிதானே… கண்டிப்பா அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.  பொண்ணும் உன்னைக் கழட்டி விட்டுடும்.  அப்புறம் நீதான் லூசு மாதிரி சுத்துவ.. ஒரு கவிஞன் கூடச் சொல்லியிருக்கான்.  காதலிக்கும்போதே கருத்தரிக்க வைத்திருந்தால் பேதலிக்க விட்டுப் பிரிந்திருக்க மாட்டாளேன்னு…   கவிஞர் தீர்க்கதரிசி.. நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சுருக்கு… வேஸ்ட் பண்ணாத…“

“நாசர் ஐ யம் நாட் இன் ய மூட் ஃபார் ஜோக்ஸ்…“

“ஐ நெவர் செட் இட்ஸ் ய ஜோக்.. “

எனக்குக் கோபம் வந்தது.

“நாசர்…“ என்று கத்தினேன்.

“ஓ.கே.. ஓ.கே… இவ்ளோ நாள் என் ஞாபகமே வராம, கண்டுக்காம இருந்தல்ல.. அதான் கொஞ்ச நேரம் கலாய்க்கலாமேன்னு சொன்னேன்.  டோன்ட் ஒர்ரி.. ஃபர்ஸ்ட் நீங்க சந்தேகப்பட்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணு.  உண்மைன்னா அடுத்தது என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.  ஒரே தடவையில கர்ப்பம் ஆகறது, தமிழ் சினிமாவுல மட்டும்தான் சாத்தியம். அதனால நிச்சயம் பயப்பட்ற மாதிரி எதுவும் இருக்காது. நேரா மெடிக்கல் ஷாப் போ… ப்ரெக்னன்சி கார்டுன்னு கேளு.  தருவாங்க.  அதுலயே எப்டி யூஸ் பண்றதுன்னு போட்ருப்பான்.   அதை கன்ஃபர்ம் பண்ணிட்டு, நெக்ஸ்ட் ஸ்டெப் பத்தி யோசிக்கலாம். “

“அது எங்க கெடைக்கும்….“

“சொன்னேனே வெங்கட்.. எல்லா மெடிக்கல் ஷாப்புலயும் கிடைக்கும்.  கவலப் படாம போ.. “

வசந்தியிடம் போன் செய்து, அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி விட்டு, கிளம்பினேன்.   முதல் மெடிக்கல் ஷாப்பிலேயே கிடைத்தது.  எப்படி உபயோகப்படுத்துவது என்று விபரமாக உள்ளே விளக்கக் குறிப்பு இருக்கிறது என்று போட்டிருந்தது. 

அவள் ஹாஸ்டலை அடையும் முன்பாகவே வெளியே வா என்று மெசேஜ் அனுப்பினேன்.   சென்று இறங்கிய ஒரு நிமிடத்தில் வந்தாள். முகம் முழுவதும் பதற்றம் இருந்தது.  முகத்தில் அழுத தடயம் இருந்தது. 

“வசந்தி எப்படி யூஸ் பண்ணணும்னு டீட்டெயிலா உள்ளே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருக்கு.  போயி டெஸ்ட் பண்ணிட்டு, உடனே மெசேஜ் அனுப்பு.   நான் இங்கயே வெயிட் பண்றேன். 

அவள் சென்று அரை மணி நேரமாகியும் எந்தத் தகவலும் இல்லை.  போனில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. 

தொடரும்…
  Sunday, 23 September 2012

தீராக் காதல் 27
தித்திப்பான முத்தங்கள் அதன் சுவையை இழந்தன.   ‘ச்சே… என்ன இது இப்படி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டோமே…  என்னவாக இருக்கும்…’  உடனே சற்று நெரிசல் இல்லாத இடத்துக்கு வந்து எடிட்டரை அழைத்தேன்.  

“எங்கப்பா போயிட்ட வெங்கட்… ? போனை ஏன் ஆப் பண்ணி வைக்கிற…“

“சார் தண்ணில விழுந்துடுச்சு சார்…“ சட்டென்று பொய் வந்தது.  

“இப்போ எங்க இருக்க ? “

“ராயப்பேட்டா சார்…”

“ஆபீசுக்கு உடனே வா….“

இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இவளோடு செலவு செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.  இவளிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.  எப்போதும் இல்லாத நெருக்கம் தோன்றியது போல இருந்தது.  இந்த நேரத்தில் போய் ஏன் இப்படி… ?  ச்சை… சற்று நேரம் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே..  இனிப்பின் சுவை அடங்குவதற்குள் கசப்பு ஊறுகிறதே…

“வசந்தி… அர்ஜென்டா ஆபீஸ் போகணும்…   உன்னை..  உங்களை… எங்க ட்ராப் பண்ணணும் ?“

“சும்மா வா போன்னே பேசு…   இவ்ளோ ஆயிட்ட பிறகு மரியாதை குடுக்கற மாதிரி எதுக்கு இன்னும் சீன் போட்டுக்கிட்டு இருக்கற… ?“ என்று சொல்லி விட்டு கிண்டலாகப் பார்த்தாள்.

“இல்ல…  எங்க ட்ராப் பண்ணட்டும்.. ? “

“அர்ஜென்டுனா போயிட்டு வா…  எங்கயும் ட்ராப் பண்ண வேணாம். நான் பஸ் புடிச்சு போயிக்கறேன்..  இன்னும் நெறய்ய டைம் இருக்கு.. “ என்றாள்.

அவளை ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டு கிளம்பினேன். அலுவலகம் சென்றதும் நேராக எடிட்டர் அறைக்குச் சென்றேன்.

“எங்கப்பா போன… ஒரு அவசரத்துக்கு கான்டாக்ட் பண்ண முடியலையே…“ என்று எரிச்சலாகக் கேட்டார்.

“இல்ல சார்.. ஒரு சோர்ஸை பாக்க வேண்டியிருந்தது… அதான்…“

“சரி அத விடு… கமிஷன்ல என்ன நடந்துச்சு… ? “

நீதிபதி வேலாயுதம் கமிஷனில் ராஜராஜனோடு ஆஜராகியது முதல், அவரோடு நடந்த வாக்குவாதம், என் கண்ணீர் உட்பட அனைத்தையும் சொல்லி முடித்தேன்.

“என்னப்பா இப்படிப் பண்ணியிருக்க… ?  ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல ?“

“சார் .. நீங்க போன வாரம் பூரா டெல்லியில இருந்தீங்க சார்....“
“ஏம்ப்பா… ஒரு போன் பண்ணிருக்கலாம்ல….  போன் சேஃப் இல்லன்னா மெயில் போட்டுருக்கலமே…“

மெயில் அனுப்பியிருக்கலாம்தான்.   வசந்திக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதில்தானே என் கவனம் முழுக்க இருந்தது..  இவரிடம் நடந்தவற்றை உடனடியாக சொல்லாமல் விட்டது எனக்கே எரிச்சலாக இருந்தது.

“என்ன சார் பண்ணச் சொல்றீங்க என்ன ?  என்னை ஹ்யுமிலியேட் பண்ணணும்னே வரச்சொல்லி இந்த மாதிரி கேள்வி கேட்டாங்க சார்.. நான் அமைதியா பதில் சொல்லியிருந்தா மட்டும் விட்டுடுவாங்களா சார் ?  என் மேல தப்பு இல்லன்னா சார் சொல்லப் போறாங்க… ?“

“எனக்குப் புரியுது வெங்கட்.  பட். இப்போ நமக்குத்தானே தொந்தரவு அதிகமாகுது… ?   உன் மேல சிபிஐ போட்ட கேஸை அவனுங்க அல்மோஸ்ட் மறந்திருந்தாங்க.   வர்ற வாரம் சார்ஜ் ஷீட் போட்றதா சொல்றாங்க.  சார்ஜ் ஷீட் போட்டுட்டா அடிக்கடி கோர்டுக்கு போக வேண்டி வரும்.  உன் வேலை கெட்டுப் போயிடும் வெங்கட்.   நீ வேலாயுதம் கிட்ட சண்டை போடாம இருந்துருந்தா இவ்ளோ சீக்கிரம் சார்ஜ் ஷீட் போட்ருப்பாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு..“

“சார்.   அவங்க பவர்ஃபுல்லான ஆளுங்க.   சண்டை போட்டாலும் போடாட்டாலும், அவனுங்க பண்றத பண்ணிக்கிட்டுத்தான் இருக்கப்போறாங்க.    அவங்க மெரட்டலுக்கு நான் பயந்து பணிஞ்சு போயிட்றதனால ஒண்ணும் நடக்கப் போறதில்ல.   இன்னைக்கு இல்லன்னா ஆறு மாசம் கழிச்சு சார்ஜ் ஷீட் போட்ருப்பாங்க சார். அவங்க இந்த விஷயத்தை விட்டுடுவாங்கன்னு நான் நெனைக்கல சார். “

“நீ சொல்றதும் கரெக்ட்தாம்பா…  பட் ஐ யம் வொர்ரீட் வெங்கட்.   நல்ல ஜர்னலிஸ்டா நீ வரணும்.  அதான் என் ஆசை.   நல்ல ஜர்னலிஸ்டை பாக்கறது இப்போல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.  ஜர்னலிஸ்ட்ன்ற பேர்ல காலேஜ்ல சீட் வாங்கறது, ஹவுசிங் போர்ட் அலாட்மென்ட் வாங்கறது, பொலிட்டிக்கல் ப்ரோக்கர் வேலை பண்றஷதுன்னு பத்திரிக்கைத் துறையில நல்ல ஆளுங்கள விட புல்லுருவிகள் அதிகமாயிட்டாங்க வெங்கட்.  நான் உன்ன நல்லா ட்ரெயின் பண்ணி, நல்ல ஜர்னலிஸ்டா உருவாக்கணும்னு ஆசைப்பட்றேன்.  பட் உன்னை நாசம் பண்ணிடுவாங்களோன்னு கவலையா இருக்கு.  யு ஹேவ் டு வின்.“
“சார். துணிஞ்சு இறங்கியாச்சு சார்.  சமாளிக்கலாம்.  எனக்கு கஷ்டமா இருக்கு.  பட் கவலையா இல்ல.  சமாளிச்சு ஜெயிச்சு வருவேன்னு நம்பிக்கை இருக்கு சார். “

“ஆல்ரைட் வெங்கட். நீயே இவ்ளோ தைரியமா இருக்கும்போது, நான் எதுக்கு பயப்படனும்.   சமாளிக்கலாம் விடு.  ராஜராஜன் ட்ரையல் நடத்த மாட்டாரு.   பட் அவரைப் போயிப் பாரு.  யாரையாவது ரெஃபர் பண்ணுவாரு.  ட்ரையல் நடத்தறதுக்கு நல்ல லாயரா என்கேஜ் பண்ணிடலாம்.   எதைப் பத்தியும் கவலைப்படாத வெங்கட். “

“கண்டிப்பா சார்…  நாம ஜெயிச்சு காட்டணும் சார். பின்வாங்கக் கூடாது.  பயப்படக் கூடாது.  சிங்காரவேலு 1200 கோடி ரூபா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சவன் சார். இன்னும் பல நூறு கோடியை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கறவன்.    அவனுக்கு தன் பதவியைக் காப்பாத்தணும், பணத்தைக் காப்பாத்தணும், அரசியல் வாழ்க்கையை காப்பாத்தணும், அவன் குடும்பத்தைக் காப்பாத்தணும்.  அதனால அவன் எந்த எல்லைக்கும் போவான் சார்.    ஆனா நம்ப கண்ணு முன்னாடி நடக்கற அநியாயத்தப் பாத்து மனசு பொறுக்க முடியாமதானே சார் இந்த வேலையே செய்யறோம்..  நாம சோந்து போனாலோ, பயந்தாலோ, சிங்காரவேலு ஜெயிச்சுடுவான்.  அதுக்கு நாம இடம் குடுக்கக் கூடாது சார்.. “

“யூ ஆர் ரைட் வெங்கட்… சம் டைம்ஸ் யு இன்ஸ்பையர் மி யங் மேன்..  நீ போயி வேலையப் பாரு.. பாத்துக்கலாம். “

எடிட்டரிடம் வீர வசனம் பேசி விட்டு வந்தாலும் மனசுக்குள் கவலையும் மலைப்பும் இருக்கத்தான் செய்தது.   எப்படி சமாளிப்பது எப்போது இந்தத் தொல்லைகள் ஓயும் என்ற மலைப்பு.   வசந்தியைப் பார்ப்பது தடை படுமோ என்ற கவலையும் இருந்தது.   வழக்கில் தண்டனை கிடைத்தால் ஜெயிலுக்குப் போய் விடுவோம் என்ற கவலையை விட, வசந்தியைப் பார்க்க முடியாதே என்ற கவலையே பெரிதாக இருந்தது.  இரண்டு மாதங்களுக்கு முன் இதைப் பற்றி யோசித்திருந்தால் எந்தக் கவலையும் இல்லாமல் நான் ஜெயிலுக்குப் போயிருப்பேனோ.. 

டிட்டர் சொன்னது போலவே இரண்டு நாட்களில் கோர்ட்டிலிருந்து சம்மன் வந்தது. சம்மன் வந்ததும் எடுத்துக் கொண்டு ராஜராஜனை சந்திக்கச் சென்றேன்.  அவர் முருகவேல் என்ற வழக்கறிஞரிடம் அனுப்பி வைத்தார்.  அவர் வழக்கை முழுவதுமாக நடத்துவதற்கு ஒரு லட்ச ரூபாய் கேட்டார்.  

‘ஒரு லட்ச ரூபாய்க்கு எங்கே போவது…’ எடிட்டரிடம் விபரத்தைச் சொன்னேன். 

“நான் ராஜராஜன் கிட்ட பேசி ஏதாவது குறைக்க முடியுமான்னு பாக்கறேன்.   நீ உன்னால எவ்வளோ அரேன்ஞ் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணு.   நான் மீதியை ஏற்பாடு பண்றேன்“ என்றார்.

எனது வங்கியில் 10 ஆயிரம் இருந்தது.  அம்மாவிடம் என்ன ஏது என்ற விபரம் சொல்லாமல், பணம் கேட்டேன்.  அவள் தன்னிடம் 50 ஆயிரம் இருப்பதாக மறுநாள் வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். 

அதற்குள் எடிட்டர் போன் செய்து, முருகவேலை மீண்டும் சென்று பார்க்கச் சொன்னார். முருகவேல் அவர் ஃபீசை 50 ஆயிரமாக குறைத்துக் கொண்டார்.

“உங்களைப் பத்தி ராஜராஜன் இப்போதான் விளக்கமா சொன்னார்.  நான் எல்லா க்ளையன்டும் மாதிரின்னு நெனச்சு  ரெகுலர் ஃபீஸ் சொல்லிட்டேன்.“

“பரவாயில்லை சார்.  நாளைக்கு குடுத்துட்றேன் சார்.“

“தட்ஸ்* ஓ.கே…  நாளைக்கே குடுங்க..   நாளைக்கு ஃபர்ஸ்ட் சம்மன்.  உங்களுக்கு சார்ஜ் ஷீட் காப்பி குடுப்பாங்க.  அதை வாங்கிட்டு ஆபீஸ்ல குடுத்துடுங்க.  நான் சார்ஜ் ஷீட் படிச்சுப் பாத்துட்டு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்றேன்.  டோன்ட் ஒர்ரி.  ராஜராஜன் சார் உங்களைப் பத்தி நெறைய்ய சொல்லியிருக்காரு.   தைரியமா இருங்க.“

“தேங்ஸ் சார்.. “

“நாளைக்கு கோர்ட்ல ஒண்ணும் மேஜரா இருக்காது.  ஜுனியரை அனுப்பறேன். போயிட்டு வாங்க.“

றுநாள் எழும்பூர் நீதிமன்றம்.  பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. எங்கே பார்த்தாலும் கருப்புக் கோட்டணிந்த வழக்கறிஞர்கள் பரபரபப்பாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்.  என்னுடைய நீதிமன்றம் எங்கே இருக்கிறது என்பதை விசாரித்து சென்றேன்.  சிறிது நேரத்தில் முருகவேலின் ஜுனியர் அழைத்தார். எங்கே இருக்கிறேன் என்பதைக் கேட்டுக் கொண்டு நேரடியாக வந்தார்.

“இந்த இடத்திலயே இருங்க.  உங்க பேரக் கூப்புடுவாங்க.  அப்ப வந்து நிக்கணும். அப்பாப் பேரைக் கேப்பாங்க.  வக்கீல் வச்சுக்க வசதி இருக்கான்னு கேப்பாங்க.  இருக்குன்னு சொல்லுங்க.   உங்க கேசை சிபிஐ கோர்டுக்கு மாத்தறேன்னு சொல்லுவாங்க.  அடுத்து என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க.   எங்கயும் போயிடாதீங்க.  கூப்புடும்போது இங்கயே இருங்க. “ என்றார்.

அவர் இருக்கச் சொன்ன இடத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள்.  என்னைப் போலவே வழக்குக்காக வந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு பெண் கவலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பெரும்பாலும் சாதாரண விளிம்பு நிலை மனிதர்களாக இருந்தார்கள்.  தங்களுக்குள் அரட்டை அடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.   

சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி வந்து அமர்ந்தார்.  பெண் நீதிபதி.   வெளியில் இருந்த கூட்டத்தால், என் பெயரை அழைப்பது கேட்குமா கேட்காதா என்று சந்தேகமாக இருந்தது.   அதனால் இன்னும் நெருக்கமாக சென்று நின்று கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து “சிபிஐ கேசஸ்.. வெங்கட்.. “ என்று என் பெயர் உரக்க அழைக்கப்பட்டது.

ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் சென்று நின்ற கைதிகளுக்கான கூண்டில் சென்று நின்றேன்.  

“பேரச் சொல்லுங்க. அப்பாப் பேரச் சொல்லுங்க..  வக்கீல் வச்சுக்க வசதி இருக்கா..  உங்க கேஸை செசன்ஸ் கோர்டுக்கு மாத்திருக்கு.  அடுத்த மாசம் பத்தாம் தேதி ஆஜராகணும்.   காப்பி வாங்கிட்டு கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க“ என்று பதிவு செய்திருந்த ஒலிநாடாப் போல பேசினார் நீதிபதி.

இருநூறு பக்கங்கள் கொண்ட ஸ்பைரல் பைண்டிங் செய்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள்.  கையெழுத்துப் போட்டு விட்டு, அதை வாங்கி வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டு, அலுவலகம் சென்றேன். சிஸ்டத்தை உயிரூட்டி மெயில்களைப் பார்த்தேன்.  ஃபேஸ் புக்கை லாக் செய்தேன்.  வசந்தி ஆன்லைனில் இருந்தாள்..

“ஹாய்“ என்று மெசேஜ் அனுப்பினேன்.

“நான் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..“ என்றாள். 

“நானும்“ என்று பதில் அனுப்பினேன்.

நான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும் என்றாலும், அவளும் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றதும் சந்தோஷமாக இருந்தது.

“ஈவ்னிங் ஷாப்பிங் போலாமா ?“

‘வேறு என்ன பதில் சொல்வேன் சரி என்பதைத் தவிர ?’

எங்கே போகலாம் என்றதும் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்றாள். ‘இவளுக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூவைத் தவிர வேறு எதுவுமே தெரியாதா ?‘ என்று யோசித்துக் கொண்டே போகலாம் என்றேன்.

எக்ஸ்பிரஸ் அவென்யூ தாண்டி சென்று கொண்டிருந்ததும்  கே

“எங்க போற வெங்கட்… “ என்றாள்.    போன வாட்டி சினிமா பாத்துட்டு வரும்போது பார்க்கிங் 100 ரூபா ஆச்சு.   இன்னைக்கு நெறய்ய டைம் இருக்கு.  வண்டியை அங்க நிறுத்திட்டு நடந்து வரலாம் என்றேன்.

“என் மாமா சமத்து…“ என்றாள்.

மாமா என்று அழைத்தது வித்தியாசமாக இருந்தது.  குதூகலத்தை ஏற்படுத்தியது.  வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.  

எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த லேன்ட்மார்க் சென்றோம்.  நேராக நான் புத்தகப் பகுதிக்கு சென்றேன்.  

“எங்க போற.. நான் ஃப்ரென்டுக்கு கிப்ட் வாங்கணும்“ என்றாள். 

“புக் கிப்ட் குடுக்கலாமே… ? “

“அவ புக்கெல்லாம் படிக்க மாட்டா…“ என்பதை ஏதோ பெருமையான தகுதி 
போல சொன்னாள். 

“சரி என்ன வாங்கலாம்… சொல்லு.. “

“டெட்டி பேர் வாங்கலாம்… அவளுக்கு ரொம்ப புடிக்கும்.  எனக்கும் புடிக்கும். வா அங்க போலாம்“ என்று பொம்மைகள் வைத்திருந்த பகுதியை நோக்கி துள்ளிக் கொண்டு ஓடினாள்…  

குழந்தைகளாக இருக்கும் ஆண் பிள்ளைகள், ஒரு வயதுக்குப் பிறகு பொம்மைகளை வைத்து விளையாடுவதில்லை.  அப்படி பொம்மைகளை வைத்து விளையாடும் வளர்ந்த பிள்ளைகளுக்கு அறிவு வளர்ச்சி குறைவோ என்ற சந்தேகத்தோடே பார்க்கப்படுகிறார்கள்.  ஆனால் பெண்கள் எத்தனை வயதானாலும் டெட்டி பேர் வைத்துக் கொள்வது ஏன் ஒரு முரணாகத் தோன்றுவதில்லை ?

300 ரூபாய் விலையில் ஒரு டெட்டி பேர் பொம்மையை எடுத்து இது நல்லா இருக்கா என்று கேட்டாள்.   எல்லா பொம்மைகளும் அழகாகத்தான் இருந்தன.  அவள் எடுத்ததை விட, ரோஸ் நிறத்தில் ஒரு பொம்மை இன்னும் அழகாக இருந்தது.  

நான் அந்த ரோஸ் நிற பொம்மையைக் கையில் எடுத்தேன்.  

“இதான் நல்லா இருக்குன்னு சொன்னியே… அப்புறம் அது எதுக்கு ?“

“இது உனக்கு“

கண்கள் விரியச் சந்தோஷப்பட்டாள்.   ‘பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்… ?’

காதருகே வந்து, ”தனியா இருந்துருந்தா உனக்கு ஆயிரம் முத்தம் குடுத்துருப்பேன் மாமா…. யு ஆர் சோ ஸ்வீட்.. ” என்றாள்.

”இன்னொரு டெட்டி பேர் எடுத்துட்டு வரவா ?”

”டெட்டி பேரே வேணாம் மாமா… உனக்கு எவ்வளவு முத்தம் வேணாலும் தர்றேன்…”

‘அந்த கணத்தில் அவளுக்காக உயிரை விடலாம் என்று தோன்றியது.’

இரண்டு பொம்மைகளுக்கும் சேர்த்து, க்ரெடிட் கார்டில் பணம் கொடுத்து விட்டு கிளம்பினோம். 

ஹாஸ்டலில் சென்று இறக்கி விட்டதும், அவள் டெட்டி பேரை எடுத்த ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.   முத்தம் கொடுத்தாள்.

”பொம்மைக்கு மட்டும்தானா ?…”

”உனக்கும் தர்றேன்டா… இந்த வாரம் சினிமாவுக்குப் போலாமா ?”

”சனிக்கிழமை வேலை இருக்குமா இல்லையான்னு தெரியலையே.. ”

”காலையில ஒம்போது மணிக்கேவா உனக்கு வேலை வந்துடும்..  காலையில ஒம்போது மணி ஷோவுக்கு பண்ணு..”

”ஒம்போது மணிக்கு எங்க படம் போட்றாங்க….”

”இடியட்… எல்லா சாட்டர்டே சண்டேவும் எல்லா மல்டிப்ளெக்ஸ்லயும் ஒம்போது மணிக்கு ஷோ இருக்கு.  பதினோரு மணிக்கெல்லாம் முடிஞ்சுடும். அப்புறம் போயி நீ உன் வேலையைப் பாரு”  

ஏதோ ஒரு தெலுங்குப் படம் காலை ஒன்பது மணிக்கு இருந்தது. அவளைக் கேட்காமலேயே ரிசர்வ் செய்தேன்.   

னிக்கிழமை படம் முடிந்து வெளியே வரும்போது மறுநாள் ஞாயிற்றுக் கிழமைக்கும் டிக்கட் புக் செய்யச் சொன்னாள்.

நான்கு வாரங்கள் கடந்திருந்தன.  அந்த நான்கு வாரங்களில் அவள் என் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப்போயிருந்தாள். தினந்தோறும் காபி ஷாப்.  ஒரு நாளைக்கு கணக்கில்லாத எஸ்எம்எஸ்கள். ஒரு நாள் கூட சந்திக்காமல் இருந்தால், காற்றில் ஆக்சிஜன் குறைந்தது போல இருந்தது.
அந்த ஞாயிற்றுக் கிழமையும் அப்படித்தான் காலை ஒன்பது மணிக்கு இந்தி படத்தில் உட்கார்ந்திருந்தோம். படம் இன்னும் தொடங்கவில்லை.

”இப்படியே எவ்வளவு நாள் படம் பாத்துட்டு ஊரை சுத்தறது வெங்கட்… வீட்ல வேற மதுரைக்கு கௌம்பி வா வான்னு தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீனியர் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்றாருன்னு சொன்னேன்.  உங்க சீனியர் கிட்ட நான் பேசறேன்றாரு எங்க அப்பா.. ”

”நம்ப மேட்டரைப் பத்தி சொல்லு உங்க வீட்ல…..”

”பயமா இருக்கு வெங்கட்.. உன் மேல கேஸ் பென்டிங்ன்றது தெரிஞ்சா ஒத்துக்க மாட்டாங்க வெங்கட். ”

”உங்க அப்பாவும் வக்கீல்தானே… கேஸ் இருக்கறவன்லாம் கெட்டவன்னா உங்க அப்பா எதுக்கு கெட்டவனுக்கு கேஸ் நடத்தறாரு… ? உனக்குத் தெரியாதா என் மேல இருக்கற கேஸ்  பத்தி ? எக்ஸ்ப்ளெயின் பண்ணு..”

”என்னை மட்டும் கேள்வி கேக்கறியே…  நீ சொல்லிட்டியா உங்க அம்மாக்கிட்ட… ?”

”ஒரு நாள் உன்னை நேரா கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். ஐ திங்க் ஷி வில் லைக் யு.. ”

”உங்க அம்மாவப் பாக்கறதுக்கு இந்த ட்ரெஸ் ஓகேவா.. இல்ல சுடிதார் போட்டு, பூவெல்லாம் வச்சுக்கிட்டு வரவா ? ”

”ஏன் இந்த ட்ரெஸ்ஸூக்கு என்ன… நல்லாத்தானே இருக்கு.. யு லுக் செக்ஸி.. ”

”ச்சே… அம்மாவை மொத மொதப் பாக்கும்போது இப்டியா போறது.. என்ன நெனைப்பாங்க…”

”இன்னைக்கா போகப்போறோம்.. அம்மா ஊருக்குப் போயிருக்காங்க.  புதன் கிழமைதான் வர்றாங்க..  சோ இன்னொரு நாள்.. ”

”இங்கேர்ந்து உங்க வீடு எவ்ளோ தூரம்…” ரொம்ப இயல்பாக கேட்டாள்.

”இங்கேர்ந்து ஒரு பத்து கிலோ மீட்டர் இருக்கும். ”

”போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்…”
”ட்ராஃபிக் இல்லன்னா ஹாஃப் அன் அவர் ஆகும். ட்ராஃபிக்னா ஒன் அவர் ஆகும்.”

”மாமாங்கற செல்லப் பேரை விட ட்யூப் லைட்தான் உனக்கு சரியான  பேர் ”

ட்யூப் லைட்தான் நான்..  அவள் எதற்காக இவ்வளவு கேள்விகள் கேட்கிறாள் உறைக்கவேயில்லையே என்று யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே டக்கென்று ஐடியா பல்ப் உள்ளே எரிந்தது. இதுக்கு தான் இவ்வளவு கேள்விகளா ? சற்றும் யோசிக்காமல் அவளிடம் கேட்டு விட்டேன்..

”வீட்டுக்கு வேணா போயி…….. சும்மா…… பேசிக்கிட்டு இருக்கலாமா… ?” கேட்டு முடித்தவுடன் என் இதயத்துடிப்பு தாறுமாறாக அடிப்பதை உணர முடிந்தது. 

தொடரும்..