Monday, 29 October 2012

தீராக் காதல் 33
வள் ஃபேஸ் புக் பக்கத்தில் வசந்தி என்கேஜ்ட் டு சங்கர நாராயணன் என்று அவன் புகைப்படம் இருந்தது.  சிரித்துக் கொண்டிருந்தான்.

திர்ச்சி, ஏமாற்றம், ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஒரு சேர வந்தன. என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.   என்னையறியாமல் கண்ணில் கண்ணீர் வழியத் தொடங்கியது.   எப்படி…..  நெஞ்சு வலிப்பது போல இருந்தது.   மூச்சு விட சிரமமாக இருப்பது போல உணர்ந்தேன். மீண்டும் ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன். இது பொய்யாக இருக்க வேண்டும் என்று மனம் அரற்றியது.    ஆனால் பொய் இல்லை நிஜம்.   என்கேஜ்ட் என்ற செய்தியை அவள்தானே ஏற்றியிருப்பாள்.  அவளுடைய அக்கவுன்டில் புகுந்து வேறு யாராவது ஏற்றுவார்களா என்ன.. ?

சங்கர நாராயணனின் ஃபேஸ் புக் பேஜை பார்த்தேன்.  பிரேசில் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான். 

வாழ்த்துச் செய்திகள் குவிந்து கொண்டு இருந்தன. 

அவன் பேஜில் “என்ன சங்கர்….  வாட் ய சர்ப்ரைஸ்… சொல்லவேயில்லை. வாட்ஸ் யுவர் ஸ்டோரி” என்று போட்டிருந்தான்.

அவன் அதற்கு பதில் சொல்லியிருந்தான்.  

”இருவருக்கும் கொஞ்ச நாளாகவே நட்பு இருந்தது.  அடிக்கடி பேசிக்கொள்வோம்.   நாளடைவில் நட்பு வளர்ந்தது.  திடீரென்று ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இருவரின் எண்ணங்களும் ஒத்துப் போனது.  நேரில் சந்தித்து விட்டு கல்யாணம் செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம் என்று இருந்தோம்.  நேரில் சந்தித்தோம்.  ரெண்டு பேருக்கும் பிடித்துப்போய் விட்டது. வீட்டில் சொன்னோம்.  இரு வீட்டிலும் ஒத்துக் கொண்டார்கள்.  கடந்த ஜுலை 27தான் சந்தித்தோம்” என்று அவர்கள் காதல் கதையை சொல்லியிருந்தான்.
ஜுலை 27 என்றால்… ஜுலை 26தானே  வீட்டுக்கு வந்தாள்.  அன்றுதானே ஒன்றாக ஊர் சுற்றினோம்.    அன்றைக்கத்தானே அம்மாவோடு எப்படிப் பேசிக்கொண்டிருந்தாள்..? என்னைப் பார்த்து என்னோடு ஊர் சுற்றி, மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி, கொஞ்சிக் குலாவிவிட்டு, மறு நாள் இவனைப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திக்கிறாளே…  என்ன பெண் இவள்… எப்படி இவளால் முடிந்தது… என்னைப் பைத்தியக்காரனாக்கி விட்டாளே…. இவன் என்னைப் பார்ப்பதற்காக சென்னை வரவில்லை அவனோடு திருமணம் நிச்சயம் செய்வதற்காக சென்னை வந்திருக்கிறாள்.. ஹாஸ்டலை என்னிடம் சொல்லாமல் முன்பே காலி செய்திருக்கிறாள்..  எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கடைசியாக என்னோடு ஒரு முறை ஊர் சுற்றலாம் என்று வந்திருக்கிறாள். மறுநாள் கல்யாணம் செய்யப்போகிறவனை பார்க்க திட்டமிட்டு விட்டு, என்னோடு எப்படி இவளால் படுக்கையில் புரள முடிந்தது….  படுக்கையில் ஒன்றாகக் கிடந்தபோது சிறு உறுத்தலும் தோன்றவில்லையா…  என்னால் இப்படி ஒரு துரோகத்தைச் செய்திருக்க முடியுமா ?  எப்படி முடிந்தது அவளால்..  கொஞ்சம் கூட கூசாமல் நடித்திருக்கிறாளே…  இப்போது மட்டும் நடித்திருக்கிறாளா.. இல்லை ஆரம்பம் முதலே நடித்திருக்கிறாளா..  உண்மையில் என்னைக் காதலித்தாளா இல்லை ஊர் சுற்றவும், நேரம் போக்கவும் என்னைப் பயன்படுத்தினாளா…  புதுத்துணிமணிகள் வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்கு அழைத்துச் சென்று, வித விதமான ஹோட்டல்களில் உணவருந்தி உல்லாசமாக நேரத்தைச் செலவழிக்க ஒரு இளிச்சவாயன் கிடைத்திருக்கிறான் என்று இத்தனை நாளும் என்னைப்  பயன்படுத்தினாளா ?  இப்படி ஒரு இடியைத் தூக்கிக் போட எப்படி மனது வந்தது இவளுக்கு…

27 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த லேப்டாப்பை நினைத்தால் அவளை கொலை செய்தால் என்ன என்ற ஆத்திரம் வந்தது. அந்த லேப்டாப்பை வாங்கும்போதாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே…  எப்படி ஏமாந்திருக்கிறேன்…  எவ்வளவு இளிச்சவாய்த்தனமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் அவமானமாக இருந்தது.  எத்தனை பேரின் ஊழல்களை அம்பலப்படுத்தியிருப்பேன்… எத்தனை மிரட்டல்களை தைரியமாக எதிர் கொண்டிருப்பேன்.  எத்தனை பேருக்கு சவால் விட்டு அவர்களின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தியிருப்பேன்.. ஒரு சாதாரண பெண்ணிடம் இப்படி ஏமாந்து விட்டேனே …  பெரிய பத்திரிக்கையாளன் என்று பெயர் வேறு.. ஒரு சாதாரண அடிப்படைகளைத் தெரியாமல் குருடனாக இருந்திருக்கிறேன்..  எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றி விட்டாள்..  எதற்குமே லாயக்கில்லாதவனாக ஆகி விட்டேனே…  இத்தனை நாள் நான் ஒரு அறிவாளி என்ற என் எண்ணத்தை ஒரே நாளில் தவிடுபொடியாக்கி விட்டாளே…  அறிவாளியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு அடி முட்டாளாக்கிவிட்டாளே…  இப்படியா ஏமாறுவேன்…  ப்ளடி பிட்ச்…

முதல் அத்தியாயத்திலிருந்து..

அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். அம்மாவுக்காக வாங்கிய மாத்திரைகள்.  இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ?   ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை.  உயிர்பிழைத்து விட்டால் அதன் பிறகு எதிர்கொள்ளும் கேள்விகள்…. அவமானங்கள்…..  ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே…  உயிர் போய்விட்டால் எவ்வளவு நிம்மதி… ?  இந்த வலியோடு வாழ வேண்டாமே…

உயிரை அறுத்தது போலிருக்கிறதே… நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே… எப்படி இது நடக்கும் ?  தாங்க முடிய வில்லையே…  இனி எதற்காக வாழ வேண்டும் ?   என்ன இருக்கிறது இனி   வாழ்வதற்கு ?  துரோகத்தின் வலி என்பது இதுதானா ?   எப்படி முடிந்தது அவளால் ? ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா ? பேஸ்புக்கைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

இனி எப்படி இந்த உலகத்தில் அவள் இல்லாமல் வாழ முடியும்.   எதற்காக வாழ வேண்டும் ? 

இறந்து விட்டால் இந்த வேதனையாவது மிஞ்சுமே.   அவளை நினைத்து தினம் தினம் சாவதை விட, ஒரேயடியாகச் சாவது மேல். அவள் இல்லாமல் வாழ்வதை விட, அவள் துரோகத்தை தாங்க முடியவில்லையே…

தண்ணீர் எடுப்பதற்காக ஃப்ரிட்ஜை திறக்கச் சென்றேன். அம்மா உறங்கிக் 
கொண்டிருந்தாள்.   அவளைப் பார்த்ததும் இறப்பதற்கு முன் அவளருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு சாகலாம் என்று தோன்றியது.  அவள் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தேன்.  அவன் வந்தது தெரியாமலே, நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.  முதுமையின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன.   அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  சிறிது நேரத்தில் இறக்கப்போகிறோம் என்று முடிவெடுத்த பிறகு எதற்கு   தாய்ப்பாசம் ?   ஆனால், அவளை நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று தோன்றியது.

இந்த அத்தியாயம் தொடர்கிறது

செல்போனை அடித்துக் கொண்டே இருந்தது.  எந்தக் காலையும் ஏற்க பிடிக்கவில்லை.   எடுத்து சைலென்டில் போட்டேன்.  வீட்டுக்குள்ளேயே நடந்தேன்.    சுவற்றில் தலையை வேகமாக மோத வேண்டும் போல இருந்தது.   எதையாவது எடுத்து கையைக் கிழித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.  மூச்சு விட சிரமமாக இருப்பது போலிருந்தது.  மூச்சை நன்றாக இழுத்து விட்டேன்.  நெஞ்சு அடைப்பது போலிருந்தது. மீண்டும் அவள் ஃபேஸ் புக் பக்கத்துக்கு சென்று பார்த்தேன்..  அது பொய்யாக இருக்குமோ என்று தேடினேன்… ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.  அத்தனை வாழ்த்துக்களுக்கும் அடுத்த நொடியே தேங்க் யூ என்று பதிலளித்துக் கொண்டிருந்தாள்.   என்ன வசந்தி சொல்லவேயில்லை என்று போட்டவர்களுக்கு…. எங்கள் இருவருக்குமே இது சர்ப்ரைஸ் என்று பதிலளித்திருந்தாள். ஃபேஸ் புக்கைப் பார்க்க பார்க்க என் கோபமும், ஆற்றாமையும், சோகமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது போலிருந்தது. 

செல்போன் வேறு சைலென்டில் டர்ர்ர்ர் என்று அதிர்ந்து கொண்டே இருந்தது.  எடுத்து சுவிட்ச் ஆப் செய்து விடலாம் என்று எடுத்தேன்.   14 மெசேஜ்கள் வந்திருந்தன. சாரி என்று அவள் ஏதாவது மெசேஜ் அனுப்பியிருப்பாள் என்று எதிர்ப்பார்த்து எடுத்துப்பார்த்தேன்.  எல்லா செய்திகளும் வாழ்த்துக்களாகவே இருந்தன… “கங்க்ராஜுலேஷன்ஸ்… ஃபென்டாஸ்டிக் வொர்க்..”. இன்று என்ன தினம் என்பது அப்போதுதான் உறைத்தது.   டி.வியைப் போட்டேன்.  எல்லா சேனல்களிலும் கதிரொளியில் நான் எழுதிய ஸ்டோரி பற்றித்தான் விவாதம் நடந்து கொண்டிருந்தது.  

அனைத்துச் சேனல்களிலும் சிங்காரவேலு மற்றும் நீதிபதி வேலாயுதம் கடுமையாக விவாதிக்கப்பட்டார்கள்.   என்னுடைய உழைப்பால் வெளியான செய்திகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  சிங்காரவேலுவின் வரலாறு முழுக்க தோண்டியெடுத்து விலாவாரியாக விவாதித்தனர்.   சிங்காரவேலு, சுதந்திர இந்தியா சந்தித்திராத மோசமான எதிரி என்பதைப் போல சித்தரித்தனர். பல்வேறு ஊழல்களில் சிக்கியிருந்த சிங்காரவேலு, தொடர்ந்து தப்பித்துக் கொண்டே வந்திருக்கிறார்… ஆனால் இந்த முறை அவர் தப்புவது கடினம் என்று கூறினார்கள்.   

பிரதான எதிர்க்கட்சி ப்ரஸ் மீட் வைத்தார்கள்.  சிங்காரவேலு மீதான தாக்குதல் கடுமையாக இருந்தது.  சிங்காரவேலுவின் அயோக்கியத்தனங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக பிரதமர் பதவி விலக வேண்டுமென்றார்கள்.  சிங்காரவேலுவுக்கு அவர் கட்சித் தலைமையின் முழு ஆதரவு இருப்பதால்தான் அவர் இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார் என்றார்கள். எதிர்க்கட்சியினரின் ப்ரஸ் மீட் முடிந்த உடனேயே சிங்காரவேலுவின் கட்சி செய்தித் தொடர்பாளர் பேசினார்.   விபரங்கள் என்ன என்பது தெரியாமல் உடனே சிங்காரவேலுவைப் பதவி விலகச் சொல்வது தவறு என்றார்.  சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.   அவர் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொன்னதே சிங்காரவேலுவுக்கு பின்னடைவு என்று கூறின ஊடகங்கள். அர்நப் கோஸ்வாமி, பிரசவ வேதனையில் கத்தும் தாயைப்போலவே பேசினான்.  “தி மினிஸ்டர் ஹேஸ் மெனிப்யுலேட்டட் ஜுடிஷியரி… ஹவ் கேன் தி நேஷன் டாலரேட் திஸ்” என்றான்.  அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.  

ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றலாம் என்று எத்தனித்தபோது கையில் தூக்க மாத்திரை ஸ்ட்ரிப் தட்டுப்பட்டது.   ச்சை… ஒரு நொடியில் சாக இருந்தேனே…  எத்தனை பெரிய சாதனையைச் செய்திருக்கிறேன்… என் கட்டுரையை இந்தியாவே விவாதித்துக் கொண்டிருக்கிறது. எல்லா அதிகாரங்களும் உள்ள ஒரு மத்திய அமைச்சர் ஊடகங்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.  யாருமே அசைக்க முடியாது என்று கருதிய ஒரு அரசியல்வாதியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.  இவையெல்லாம் நடப்பதற்கு காரணமான நான்,  எப்போது சாகலாம் என்று கையில் தூக்க மாத்திரையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்….

வெட்கமாக இருந்தது. அவமானமாக இருந்தது….  இப்படி ஒரு சாதனையைச் செய்து விட்டு நான் செத்திருந்தால் சிங்காரவேலு மிரட்டி செத்துவிட்டேன் என்றல்லவா கருதியிருப்பார்கள். இவள் செய்த துரோகம் யாருக்குத் தெரியும்.. எவ்வளவு கோழைத்தனமான முடிவெடுக்க இருந்தேன்…  

தூக்க மாத்திரையை மேசையில் விட்டெறிந்தேன்.  நான் ஏன் சாக வேண்டும்.. ?  ஏமாந்து விட்டேன்… உண்மைதான்.. அதற்காக நான் சாக வேண்டுமா…. தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்த விவாதங்கள் நான் வாழ்வதின் பொருளை உணர்த்தியது போலிருந்தது…  

டிவியைப் பார்த்துக் கொண்டே, அன்று முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.  மாலை ஆனது.  இரவு ஒரே ஒரு தூக்க மாத்திரையைப் போட்டேன்.  உறக்கம் வராததால் இன்னொன்றைப் போட்டேன்.   காலையில் எழுந்து பார்த்தால் 95 மிஸ்டு கால்கள் இருந்தன.   எந்தக் காலையும் திருப்பி அழைக்கவில்லை. உள் மனது “சாரி” என்று ஒரு மெசேஜாவது வசந்தி அனுப்பியிருப்பாளா என்று தேடியது.  எந்த மெசேஜும் இல்லை.

மறுநாள் செய்தித்தாள்கள் முழுக்க சிங்காரவேலு செய்திதான். நீதிபதி வேலாயுதம் நீதிபதியாக இருக்கும்போதே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பெயர் கூற விரும்பாத ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.  ஆளுங்கட்சித் தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி, “தி ஹீட் ஈஸ் டூ மச். ஹி ஹேஸ் பிகம் ய லய்யபிலிட்டி” என்று கருத்து தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.   அன்று மதியம் சிங்காரவேலு தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று அறிவிக்கப்பட்டது.  அன்று இரவு, ஒரு நபர் விசாரணை ஆணையத்திலிருந்து வேலாயுதம் ராஜினாமா செய்ததாக அறிவிப்பு வெளியானது.  எடிட்டர் ”கங்க்ராஜுலேஷன்ஸ். வி ஹேவ் நெயில்ட் ஹிம்” என்று செய்தி அனுப்பினார்.  அவருக்குப் பதில் அனுப்பக் கூட தோன்றவில்லை. 

மறுநாள் காலையில்தான் பதில் அனுப்பினேன். 

எப்படியாவது அவளை மறக்க வேண்டும் என்று முயன்றாலும் அவள் ஏற்படுத்தியிருந்த வலி தாங்க முடியாததாக இருந்தது.

வேறு ஏதோ வேலையாக தி.நகர் சென்றபோது கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்ண வருவாளா… என்று தேடினேன். உயர்நீதிமன்றம் சென்றபோது, அங்கே அவள் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வருவாளா என்று தேடினேன்.  எந்த வேலையும் இல்லாமல் எக்ஸ்ப்பிரஸ் அவென்யூ சென்று நாங்கள் சுற்றித் திரிந்த இடங்களில் அமர்ந்திருந்தேன்.   பெண்கள் ஆடை விற்கும் கடைகளில் உள்ள ட்ரையல் ரூம் வாசலில் அமர்ந்திருந்தேன்.   எனக்குப் சுத்தமாக பிடிக்காமல் இருந்தாலும் அவளுக்காக சென்ற கேஎப்சிக்கு சென்று சாப்பிட்டேன். அங்கே மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகள் என் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள். அவர்களின் மகிழ்ச்சியை நான் இனி என்றுமே அனுபவிக்கப் போவதில்லை என்பது உறுத்தி வேதனையை அதிகப்படுத்தியது.   யாராவது புதிதாக கல்யாணம் ஆன ஜோடியைப் பார்த்தால் அவள் நினைவு வந்து வேதனைப்படுத்தியது.   என் வாழ்க்கையே வெறுமையானது போல இருந்தது.

திருமணமாகி அவள் கல்யாண புகைப்படங்களையும் ரிசெப்ஷன் புகைப்படங்களையும் ஃபேஸ் புக்கில் ஏற்றியிருந்தாள்.  கல்யாண மாப்பிள்ளையை கட்டிப் பிடித்தபடியும், அவன் தோள் மீது கைபோட்ட படியும் அவள் ஏற்றியிருந்த புகைப்படங்கள் கோபத்தை விட கழிவிறக்கத்தையே ஏற்படுத்தின.    அவளுக்குத் திருமணமாகி விட்டது என்பது உறைக்கவே பல நாட்கள் ஆனது.   இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், சேர்ந்து கேட்ட பாடல்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் அவளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.   .

கதிரொளியில் எடிட்டர் எனக்கு சொன்னது போலவே சம்பளத்தை இரண்டு மடங்காக்கியிருந்தார்.  அடுத்த ஒரு மாதத்தில் அசோசியேட் எடிட்டராக பதவி உயர்த்தப்பட்டேன்.  புதிய வேலை எல்லா நேரத்தையும் எடுத்துக்கொண்டாலும், அவள் உறுத்திக் கொண்டே இருந்தாள்.   நான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும், இவள் அவள் இல்லை என்பதையே ஞாபகப்படுத்திக் கொண்ட இருந்தார்கள்.

அலுவலக வேலைகள் என் நேரத்தை முழுமையாக எடுத்துக் கொண்டது.  எடிட்டோரியல் மீட்டிங்கில் கதிரொளியை வாரமிருமுறை ஆக்கினால் என்ன என்ற ஆலோசனையை வைத்தேன்.  அனைவரும் செய்யலாம் என்றார்கள்.  ஆனால், எடிட்டர் மட்டும் தயங்கினார்.   தற்போது வாரம் ஒரு முறை வந்தாலும், இதழ் முழுமையும் படிக்கும் அளவுக்கு உருப்படியான செய்திகள் வருகின்றன… ஆனால் வாரமிருமுறை செய்து விட்டு, பக்கத்தை நிரப்புவதற்காகவென்று ஏதாவது செய்திகளை நிரப்புவது கதிரொளியின் பெயரைக் கெடுத்து விடும் என்றார்.   இரண்டு இதழ்களுக்கும் திருப்திகரமாக செய்திகளைத் தருகிறேன் என்று நம்பிக்கை அளித்தேன். அரை மனதோடு ஒப்புக் கொண்டார் எடிட்டர்.  இரண்டு மாதம் கழித்து, கதிரொளி வாரமிருமுறை இதழாகும் என்று திட்டமிட்டோம்.  முதல் இதழில், பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஏதாவது ஒரு செய்தி வேண்டும் என்றார்… 

என் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஒரு தலைவரை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஒருவரின் பேட்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.   கேள்விகளை அடித்து அவர் வழக்கறிஞர் மூலமாக சிறைக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன்.  அவர் வழக்கறிஞர் இன்று எப்படியும் பதில்களோடு அழைப்பதாகச் சொல்லியிருந்தார். மரண தண்டனையை எதிர்நோக்கி 12 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பதிவு செய்ய வேண்டும்… அந்த நபர் இது வரை பத்திரிக்கைகளுக்கு எந்தப் பேட்டியும் அளித்ததில்லை என்பதால், இந்தப் பேட்டி நிச்சயம் பரபரப்பைக் கிளப்பும்.  பேட்டியை தயார் செய்து, எடிட்டரிடம் காண்பித்து திருத்தி அதை சிறப்பாக உருவாக்க வேண்டும்.    
செல்போன் ஒலித்தது.     

வசந்தி காலிங்….

தொடரும்.

Tuesday, 23 October 2012

தீராக் காதல் 32திர்ச்சி என்ற வார்த்தை என் உணர்வுகளை வர்ணிக்க முடியாது.  அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சி, ஆச்சர்யம், வியப்பு என்று எல்லாவற்றையும் சேர்த்தது போன்ற ஒரு உணர்வு. என்ன செய்வது என்று புரியவில்லை.  அவள் நம்பருக்கு போன் அடித்துப் பார்த்தேன்.  எடுக்கவேயில்லை. 

வசந்தி… ஐ யம் வொர்ரீட்.. வாட் ஹேப்பன்ட்… ப்ளீஸ் கான்டக்ட் இம்மீடியட்லீ என்று செய்தியனுப்பினேன். பதிலில்லை.

நேராக அலுவலகத்துக்குச் சென்று பேஸ் புக்கில் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்தேன்.  அதிலும் இல்லை.  யாஹூவிலும் இல்லை.   எஸ்.எம்.எஸ் வந்தது.  அவசரமாக எடுத்துப் பார்த்தேன். எடுத்துப் பார்த்தால் “கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ், ஜார்க்கண்ட்“ என்று மட்டும் இருந்தது.  இந்த நேரத்தில் என்ன இழவு இது என்று கோபம் வந்தது.  இருபது நாட்களுக்கு முன், இதே போல ஒரு மெயில் வந்திருந்தது.   அதில் வெறுமனே கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ் என்பது மட்டுமே இருந்தது.   ஏதோ ஸ்பாம் மெயில் என்று உடனே டெலிட் செய்து விட்டேன்.  ஏன் திருப்பி எனக்கு இதே விவகாரத்தை மெசேஜாக அனுப்ப வேண்டும்… ?    

எப்படி அவளைக் கான்டாக்ட் செய்வது.. சிவகாசியில் அவள் நெருங்கிய தோழியின் எண்ணுக்கு முயற்சி செய்தேன்.  அவள் எடுக்கவேயில்லை.  வீட்டின் லேன்ட் லைனுக்கு அடிக்க பயமாக இருந்தது.  தொடர்பு கொள்ள வேறு வழியே இல்லை என்பதால், லேண்ட் லைனுக்கு முயற்சி செய்தேன்.  அவள் அம்மா எடுத்து, “சொல்லுங்க… யாரு வேணும்..” என்றார்.  உடனே இணைப்பைத் துண்டித்தேன்.  எப்படித் தொடர்பு கொள்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டாலும் புரியவில்லை.

அவள் போய்விட்டாள் என்றதும் வீட்டில் யாருக்காவது மோசமாக உடல்நிலை சரியில்லாமல் போயிருக்குமோ என்றுதான் தோன்றியது..  ஆனால் அதற்கு ஹாஸ்டலை ஏன் காலி செய்ய வேண்டும் என்பது புரியவேயில்லை.  மூன்று வருடங்களாகத் தங்கியிருந்த அறையைக் காலி செய்வது என்றால் விளையாட்டா… எப்படி ஒரு ஆளாய்ச் செய்தாள்…  ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை…. 

எடிட்டர் வரச் சொன்னார்.  

எடிட்டர் அறைக்குள் நுழைந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் என்ன ஆகியிருக்கும் என்பதே ஓடிக்கொண்டிருந்தது.  “வெங்கட்.  இந்தா இது 2ஜி தொடர்பான டாக்குமென்ட்ஸ்… ஜெனெக்ஸ் எக்சிம் ஒரு கம்பெனி.  இது மத்திய டெலிகாம் மினிஸ்டரோட பினாமி கம்பெனின்னு சொல்றாங்க.   செக் பண்ணுங்க.. “

“நேரா ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனிஸ்க்கு போகவா சார்.. “

“அதெல்லாம் லேட்டாகும்பா…  நெட்ல ஆர்ஓசி சைட்டுக்குப் போனா எல்லா டாக்குமென்ட்ஸும் இருக்கப் போகுது..  என்ன டிஃப்பிகல்டி உனக்கு ?  க்விக்கா எடு… வர்ற இஷ்யூவுக்கு யூஸ் பண்ண முடியுமான்னு பாக்கலாம்…“

“சரி சார். “

‘எடிட்டர் ஆர்ஓசி வெப்சைட்டில் கம்பெனி விபரங்களை எடுக்கலாம் என்று சொன்னது எனக்கு இது வரை தெரியாமல் இருந்தது வெட்கமாக இருந்தது.  இந்நேரம் நான் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா…’

ஆர்.ஓ.சி வெப்சைட்டுக்குப் போனேன்.   படிப்படியாக ஏராளமான வழிமுறைகள் வைத்திருந்தார்கள். பதிவு செய்து விட்டு லாகின் செய்வதற்கே ஒரு மணி நேரம் ஆனது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ் புக்கில் சென்று, ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறாளா என்று பார்த்தேன்.  எந்த செய்தியும் இல்லை.

எடிட்டர் சொன்ன நிறுவனத்தின் ஆண்டு வருவாய், செலவு, நிகர லாபம், கம்பெனி நிர்வாகத்தின் போர்டு மீட்டிங் விபரங்கள், என்று ஒரு நிறுவனத்தின் அத்தனை ஆவணங்களும்  இருந்தன.   இப்படி ஒரு வரப்பிரசாதமான வெப்சைட்டை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேனே… அந்த வேலையில் ஏற்பட்ட ஆர்வத்தினால் வசந்தி கவனத்தை விட்டு தற்காலிகமாக அகன்றாள்.

ஜெனெக்ஸ் எக்சிம் நிறுவனத்தின் ஆவணங்களை பார்வைட்டு டவுன்லோட் செய்தேன்.

அந்நிறுவனத்தில் மொரீஷியசைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2008ம் ஆண்டில் 800 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது.  2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் முதல் ஆண்டில் நஷ்டக் கணக்கு காண்பித்திருந்தது.  ஒரே ஆண்டில் நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனம் எதற்காக 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் ?  அதுவும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்பட்ட அதே 2008ம் ஆண்டில் இந்த முதலீடு நடந்துள்ளது.   நிறுவனத்தின் பங்குதாரர் என்று ஒரு முஸ்லீம் பெயர் இருந்தது.  

‘தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் இந்து… இந்த நிறுவனத்தை நடத்துபவர் ஒரு முஸ்லீம்.. எப்படித் தொடர்புப் படுத்துவது…’

அனைத்து ஆவணங்களையும் ப்ரின்ட் எடுத்துக் கொண்டு எடிட்டரிடம் கொடுத்தேன். 

“சார்.. பல ட்ரான்ஸாக்ஷன்ஸ் சந்தேகமா இருக்கு சார்… பட் மினிஸ்டரை கனெக்ட் பண்ண முடியாது சார்.. ஓனர் ஒரு  முஸ்லீம். மினிஸ்டர் ஹிண்டுவாச்சே சார்…“

“ஏதாவது இருக்கும்யா…  நல்லாப் பாத்தியா…“ என்று மொத்த ஆவணங்களையும் வாங்கிப் பார்வையிடத் தொடங்கினார்.  

“இதோ பாரு வெங்கட்….  என்ன பாத்த நீ…  என்று ஒரு டாக்குமென்டை எடுத்து நீட்டினார். “

சேஞ்ச் ஆப் டைரக்டர் என்று கடிதம் இருந்தது.   அதில் பரமேஸ்வரி என்பவர் இயக்குநர் பதவியிலிருந்து 2009 தொடக்கத்தில் ராஜினாமா செய்திருந்த விபரம் இருந்தது.  சார் “நானும் இதைப் பாத்தேன் சார்..  இந்த அம்மாவும் ஹிண்டுதானே சார்…“

“என்ன வெங்கட் நீ… இந்த அம்மா மத்திய அமைச்சரோட வொய்ஃப்யா..  எப்படி இது தெரியாம இருக்க… வீ ஹேவ் ய ஸ்டோரி மேன்…  இந்தா இந்த டாக்குமென்ட்ஸை வச்சுக்க.. ஒரு ரஃப் ட்ராப்ட் போட்டு அனுப்பு.. இன்னைக்கு நைட்டுக்குள்ள அனுப்பனும்.  இந்த இஷ்யூவிலயே ப்ரேக் பண்ணிடலாம்…“

பேஸ் புக்கில் மீண்டும் லாகின் செய்து பார்த்தால் அவளிடமிருந்து எந்த செய்தியும் இல்லை.  அவசர அவசரமாக அந்த மிகப்பெரிய ஊழலின் தொடக்கப்புள்ளியிலிருந்து தொடங்கி மத்திய அமைச்சர் எப்படி தொடக்கம் முதலே இந்த ஊழலை மறைப்பதற்கு முயற்சி செய்தார் என்பதை விபரமாக கட்டுரையில் எழுதினேன்.   எடிட்டர் போனில் அழைத்தார்.

“வெங்கட்… முடிச்சுட்டியா….“

“இல்ல சார்.  பாதி முடிச்சுட்டேன்…“

“கொஞ்சம் வந்துட்டுப் போ…“

அவர் அறையில் நுழைந்ததும், “இன்னும் ஒன் அவர்ல முடிச்சுட்றேன் சார் என்றேன்.. அதுக்குக் கூப்பிடலய்யா…  ஒரு முஸ்லீம்னு சொன்னியே… அவன் வேற யாரும் இல்ல. மினிஸ்டரோட பினாமியேதான்..   தே போத் பிலாங் டு சேம் ஹோம் டவுன்.  இப்போதான் டீட்டெயில்ஸ் வந்துச்சு.. 
நீ பெரம்பலூர் போக வேண்டியிருக்கும். நெக்ஸ்ட் வீக் இந்த ஸ்டோரிய வச்சுக்கலாம். வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணாத..  இந்த வாரம் கவருக்கு வேற பண்ணலாம். “

“எப்போ சார் பெரம்பலூருக்குப் போகணும் ? “

“ஸ்டார்ட்  டுநைட்..“   

நேராக மதுரைக்குப் போய் அவளைப் பார்த்து விட்டு பிறகு பெரம்பலூர் போனால் என்ன என்று தோன்றியது.  மதுரைக்குப் போனாலும் அவள் வீட்டுக்கு எப்படிப் போவது…  எப்படியாவது போய்ப் பார்த்து விடலாம்.  இப்படியே எந்தத் தகவலும் இல்லாமல் எத்தனை நாள் இங்கே உட்கார்ந்திருப்பது.  வீட்டுக்குள் அடைத்துக் கூட வைத்திருக்கலாம்.
போனை எடுத்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.  கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ், ஜார்க்கண்ட் என்ற அந்த மெசேஜ் கண்ணில் பட்டது. 

எதற்காக இந்தப் பெயரை எனக்கு அனுப்புகிறார்கள்…  எடிட்டர் சொன்ன ஆர்.ஓ.சி இணையதளத்தில் அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா என்று தேடினேன்.   ஜார்கண்ட் மாநிலத்தில் கே.ஆர் இன்டஸ்ட்ரீஸ் என்று ஒரு நிறுவனம் இருந்தது.   ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி தோண்ட சுரங்கத்துக்கான லைசென்ஸ் பெற்றிருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனம் தொடங்கப்பட்டதே லைசென்ஸ் வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான்.   ‘ஜார்கண்டில் லைசென்ஸ் பெற்றதில் ஏதோ ஊழல் இருக்கிறது என்பது அப்பட்டாமாகத் தெரிகிறது… ஆனால் இதை கதிரொளியில் எப்படி ஸ்டோரியாகப் பண்ணுவது… ?  வட இந்திய ஊடகங்களில் வந்தால்தானே உரிய தாக்கம் ஏற்படும்… எதற்காக நமக்கு இத்தகவலை அனுப்பியிருக்கிறார்கள்…. புரியவில்லையே..’

யார் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று பார்த்தேன்… ஏன் எனக்கு இதை அனுப்பியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.   இரண்டு பங்குதாரர்கள்.   ஒருவர் கார்த்திக் சிங்காரவேலு.   மத்திய உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிங்காரவேலுவின் வாரிசு…  வாரிசு பெயரில் பினாமியாக சுரங்க ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் சிங்காரவேலு… அதிகார துஷ்பிரயோகம் என்று வழக்கு தொடர முடியாதென்றாலும் அரசியல் ரீதியாக ஏற்கனவே சிக்கலில் இருக்கும் சிங்காரவேலுவுக்கு புதிய சிக்கலை உருவாக்குவதற்கு இது தாராளமாகப் போதும்.  எதிர்க்கட்சிகள் அல்வாப் போல இதை எடுத்துக் கொள்ளும்.

சிங்காரவேலுவை தாக்குவதென்றால் எனக்கு இனம் புரியாத ஒரு இன்பம் ஏற்படுகிறது.   நம்பியார் போல சிரிக்க வேண்டும் போல இருந்தது.   மற்றொரு நபர் யார் என்று தெரியவில்லை.   சண்முகம் என்று பெயர் இருந்தது.  முகவரி சென்னை அண்ணா நகர் என்று இருந்தது.    யாராக இருக்கும் ?    

ஊருக்குப் புறப்படுவதற்கு நிறைய நேரம் இருந்தது.  அண்ணா நகர் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினேன்.  அண்ணா நகரின் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணித்து ஒரு வழியாக அந்த முகவரியை அடைந்தேன்.   அந்தத் தெரு முழுக்க பணக்காரர்கள் வாழும் தெரு என்பது தெருவில் நுழைந்ததுமே தெரிந்தது.  சாலைகள் சுத்தமாக இருந்தன.   சாலைகளில் குப்பைகள் குறைவாக இருந்தன.   சாலையோரம் நடப்பட்டிருந்த மரங்கள் சரியான பராமரிப்போடு இருந்தன.  
முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி இந்த அளவுக்குக் கூட இல்லாவிட்டால் எப்படி.. அங்கே இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் பெரியவரிடம் வீட்டு எண்ணைச் சொல்லி கேட்டேன்.  இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் வீடு என்று அடையாளம் சொன்னார்.   அந்த வீட்டு வாசலை அடைந்தவுடன் எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிக்கு அளவேயில்லை.   ஆ… என்று கத்தி குதிக்க வேண்டும் போலிருந்தது.    அந்த வீட்டின் வாசலில் சிகப்பு விளக்கு வைத்த ஸ்கார்ப்பியோ வண்டி நின்று கொண்டிருந்தது.   பெரிய மரத்திலான கதவு.  அந்தக் கதவின் அருகே காம்பவுன்டு சுவற்றில் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் வேலாயுதம் என்று இருந்தது… ஒழிந்தான் வேலாயுதம்…   என்னென்ன பேச்சு பேசினான் அவன்…. ?   இப்போது விளங்கியது சிங்காரவேலுவின் ஏஜென்ட் போல ஏன் நடந்து கொண்டான் என்று… அந்த சண்முகம் இந்த வேலாயுதத்தின் மகனா என்று திடீரென்று சந்தேகம் ஏற்பட்டது.  அந்த சண்முகத்தின் முழு விபரங்கள் வழங்கப்பட்டிருந்த இடத்தில் சன் ஆஃப் என்று இருந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.  இந்த வீட்டில் அந்த சண்முகம் வாடகைக்கு குடியிருந்தால்.. அத்தனையும் வீண்…

யோசிக்காமல் வண்டியை திருப்பி அலுவலகம் அடைந்தேன்.   அந்த ஆவணங்களை சேமித்து வைத்திருந்த கோப்பை மீண்டும் திறந்து பார்த்தேன்.   அட்சர சுத்தமாக சன் ஆஃப் வேலாயுதம் என்று இருந்தது.   போதும்…  இது போதும்… இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கட்ட இது போதும்.  

‘அய்யோ எடிட்டரிடம் உடனே சொல்ல வேண்டுமே… அவர் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன்… 

“சார்.. ஸ்டாப் ப்ரெஸ் சொல்லுங்க சார்.. அர்ஜென்ட் சார்.. “

“அப்படி என்னப்பா அர்ஜென்ட்…..“

“சார் நேராப் பேசலாம் சார்… இப்போ எங்க இருக்கீங்க சார்….“
“நான் டி நகர்ல இருக்கேன்பா.. ஆபீஸ் வர மாட்டேனே… ரொம்ப அர்ஜென்டா…“

“ரொம்ப அர்ஜென்ட் சார்.. நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் வர்றேன்.. “

“நானே வர்றேம்பா… வெயிட் பண்ணு.. “

அவர் வருவது வரை எனக்குத் தலைகால் புரியவில்லை.   அனைத்து ஆவணங்களையும் இரண்டு காப்பிகள் ப்ரின்ட் அவுட் எடுத்தேன்.

அரை மணி நேரம் கழித்து வந்தார்.

“ஸ்டாப் ப்ரெஸ் குடுக்கற அளவுக்கு என்னப்பா அவசரம்….   என்ன விஷயம் சொல்லு….“

“சார்.. புதையலே கிடைச்சுருக்கு சார்.. “ என்று என் சந்தோஷத்தை விவரிக்க முடியாமல் திணறினேன்..

“சொல்லுப்பா என்ன கெடச்சுருக்கு“

ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன்.    “திஸ் ஈஸ் ய குட் ஸ்டோரி வெங்கட்.  பட் ஸ்டாப் ப்ரெஸ் எப்படி குடுக்கறது.. நெக்ஸ்ட் வீக் கேரி பண்ணலாம்“

“சார் அந்த சண்முகம்ன்ற இன்னொரு பார்ட்னர் யாரு தெரியுதா சார்… “
“யாருப்பா யாராவது பினாமியா இருப்பாங்க… அதையெல்லாம் ப்ரூவ் பண்றது கஷ்டம் வெங்கட். “

“சார்.. ஜட்ஜ் வேலாயுதத்தோட பையன் சார்…..“

“வாட்….“ என்று சொல்லி விட்டு, ஆவணங்களை மீண்டும் ஒரு முறை பார்த்தார்.

“ஃபென்டாஸ்டிக் வெங்கட்… ஃபேபுலஸ் ஜாப்..  திஸ் வில் ஃபினிஷ் வேலாயுதம்…“

“நீ அந்த வீட்டுக்குப் போய் பாத்தியா… வேற வேலாயுதம் அன்ட் வேற சண்முகமாகக் கூட இருக்கலாம். “

“சார் வீட்டு காம்பவுண்ட்ல ஜஸ்டிஸ் வேலாயுதம்னு க்ளீனா போர்டு இருக்கு சார்.  அது மட்டுமில்லாம நம்ப கமிஷனுக்குப் போனப்போ அங்க நின்னுக்கிட்டிருந்த வண்டி அந்த வீட்டு முன்னாடி நிக்குது சார்.. “

“இந்த இஷ்யூவுக்கே கொண்டு வரலாம்..   ஒரு நாள் டிலே ஆகும். பரவாயில்லை..

கட கடன்னு ஸ்டோரி ரெடி பண்ணிக் கொண்டு வா… ஆபீஸ் லேன்ட் லைன்லேர்ந்து வேலாயுதம் வீட்டுக்குப் போன் பண்ணி ரெண்டு நிமிஷம் ஏதாவது பேசு… இந்த விஷயம் பத்தி மட்டும் எதுவும் பேசிடாத.  அந்த ஆளுக்கிட்ட கருத்துக் கேட்காம போட்டோம்னா ஒன் சைடட் ஸ்டோரின்னு சொல்லிடுவாங்க.  பட் கருத்துக் கேட்டா இன்னைக்கு நைட்டே ஆபீஸுக்கு சீல் வச்சுடுவான்..  நாளைக்கு ரெக்கார்டுக்கு கேட்டா ரெண்டு நிமிஷம் பேசுனோம். அவர் பதில் சொல்ல மறுத்துட்டாருன்னு அந்த காலை வச்சு மேனேஜ் பண்ணிடலாம். கமான் க்விக். வி வில் நெயில் திஸ் பாஸ்டர்ட்“ என்றார்.

எடிட்டர் இப்படி எக்சைட் ஆகி நான் பார்த்ததேயில்லை.  என்னை விட அவர் பரபரபப்பாக இருந்தார். உடனே கட்டுரையை தயார் செய்ய ஆரம்பித்தேன். 

சிங்காரவேலு மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் வெளியானதை அறிமுகமாக வைத்துத் தொடங்கி உண்மையை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்க சிங்காரவேலு எப்படித் திட்டமிட்டுப் பணியாற்றினார், அந்த ஆணையத்திற்கு வேலாயுதத்தை எப்படி வசதியாக முன்னெச்சரிக்கையாகத் தேர்ந்தெடுத்தனர், ஆணைய விசாரணையின்போது, எடிட்டரை வேலாயுதம் எப்படி தேவையற்ற கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்தினார், என்னை எப்படி மிரட்டினார், உண்மையை மறைக்க என்னென்னவெல்லாம் செய்தார் என்று அத்தனை விவகாரங்களையும் கட்டுரையில் கொண்டு வந்தேன்.   இது குறித்து நீதிபதி வேலாயுதத்தின் கருத்து கேட்க கதிரொளியை தொடர்பு கொண்ட போது அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார் என்று குறிப்பிட்டேன்.

உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் ஒரு நீதிபதி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் வைத்தேன். கிருஷ்ணய்யர், பகவதி போன்ற நீதித்துறை மகான்கள் இந்திய நீதித்துறையை உலக அளவில் புகழ்பெறச் செய்தார்கள். அவர்கள் இந்திய நீதித்துறையின் மணிமகுடமென்றால் சிங்காரவேலுவின் மகனும், தன் மகனும் தொழில் ரீதியாக பங்குதாரர்களாக இருக்கையில் அந்த விஷயத்தை மறைத்து, சிங்காரவேலு மீதான ஊழல் புகாரை விசாரிக்க நடக்கும் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை தயக்கமில்லாமல் ஏற்று நடத்தி வரும், வேலாயுதம் போன்ற நீதிபதிகள், இந்திய நீதித்துறைக்கே களங்கம் என்று கட்டுரையை முடித்தேன்.

தலைப்பு எடிட்டர் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.  “நீதிதேவன் மயக்கம்“ என்று தலைப்பு வைத்தார் எடிட்டர்.  ஒரு சில மாற்றங்களைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.

அன்று இரவே லே அவுட் முடித்தோம்.   ஒரு பக்கம் சிங்காரவேலுவின் படமும் பக்கத்தில் நீதிபதி வேலாயுதம் படமும் வைத்து நடுவில் நீதி தேவதை தலை குனிந்து இருப்பதாக அட்டை தயார் செய்யப்பட்டது.   அட்டை மிக அழகாக வந்திருந்தது.

20 ஆயிரம் போஸ்டர்கள் அடிக்க உத்தரவிட்டார்.  மறு நாள் இரவு போஸ்டர்கள் அத்தனையும் ஒட்டி முடிக்க வேண்டும் என்று கூறினார் எடிட்டர்.  ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து, ப்ரின்டுக்கு அனுப்பி விட்டு, நானும் எடிட்டரும் விடியற்காலை 5 மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பினோம்.    கிளம்பும்போது, எடிட்டர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். 

“பின்னிட்டய்யா….   ரொம்பப் பெருமையா இருக்குய்யா…  ஐ யம் டபுளிங் யுவர் சாலரி..  கோ அன்ட் செலிப்ரேட்.. “

அவரிடம் குழந்தையைப் போன்ற உற்சாகம் காணப்பட்டது.  என்னதான் மூத்தப் பத்திரிக்கையாளர் அனுபவசாலி என்றெல்லாம் இருந்தாலும், தன்னை அவமானப்படுத்திய வேலாயுதத்தை பழிவாங்கிய மகிழ்ச்சியை எடிட்டரிடம் பார்க்க முடிந்தது.

“ஐ யம் டபுளிங் யுவர் சாலரி…“ ஏதோ சந்தோஷத்தில் சொல்லி விட்டு மறந்து விடுவாரா.. இல்லை உண்மையிலேயே சொல்கிறாரா… ச்சே… ஹி ஈஸ் ய மேன் ஆஃப் ஹிஸ் வேர்ட்.

எடிட்டர் பாராட்டியது ஒரு புறம், சம்பள உயர்வு ஒரு புறம்… எல்லாவற்றையும் தாண்டி, இந்த இதழைப் பார்க்கும்போது, சிங்காரவேலுவின் மன நிலையை நினைத்தால்…..   இதழ் வெளியே வருகையில் என்ன ஆகுமோ என்று பரபரவென்று இருந்தது. வீட்டுக்குச் செல்லும்போது விடிந்து வெளிச்சம் வந்து விட்டது.

ஏதாவது சாப்பிட்டு விட்டுப்படுக்கலாம் என்று தோன்றியது.   அம்மா எழுந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.  ஏதாவது டிபன் குடும்மா என்று சொல்லி விட்டு லேப்டாப்பை ஆன் செய்து ஃபேஸ் புக்கினுள் நுழைந்தேன்.   ஏதாவது செய்தி அனுப்பியிருப்பாளா என்று பார்த்தால் எந்த செய்தியும் இல்லை.  அவள் பேஜுக்குச் சென்றேன்.

“வசந்தி என்கேஜ்ட் டு சங்கர நாராயணன்” என்று அவன் புகைப்படத்தோடு இருந்தது. 

தொடரும்.

Saturday, 20 October 2012

தீராக் காதல் 31
ந்த இடத்தில் கூட்டம் சேரத் தொடங்கியது.  சிகப்பு நிற சான்ட்ரோ கார். நிறுத்துவது போல நிறுத்தி விட்டு அந்தக் கார் நிற்காமல் பறந்தது.    கூட்டத்தில் இருந்தவர்கள் ஏய் ஏய் என்று கத்தினார்கள்.  அவர்கள் கத்தியது காதில் விழுந்திருந்தால் கூட நிறுத்தியிருக்கவா போகிறான்... 

எழுந்து பார்த்தேன்.  கீழே விழுந்ததில் இடது கையில் முழங்கைக்குக் கீழே தேய்த்து தோல் பிய்த்துக் கொண்டு இருந்தது.  ரத்தம் வழியாமல் மெள்ள மெள்ள ஊறியது. 

ஆட்டோக் காரர் ஒருவர், காரில் சென்றவனை கெட்டவார்த்தையில் திட்டினார். “வாங்க சார் ஹாஸ்பிட்டல் போகலாம், பக்கத்துலதான் இருக்கு என்று அந்த ஆட்டோக்காரரே அழைத்தார்.  ரத்தம் ஊறுவதையும், சாலையில் இருந்த மண் கீழே விழுந்து தேய்த்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.  இதை க்ளீன் செய்து மருந்து போடாவிட்டால் சிக்கலை ஏற்படுத்தும் என்று தோன்றியது. 

“ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு சார்.. ? “ என்று கேட்டதும், அடுத்த தெருவிலேயே இருப்பதாக சொன்னார்.

ஆட்டோவில் வாருங்கள் என்று அவரின் அழைப்பை வேண்டாம் என்று மறுத்து, நானே மருத்துவமனைக்குச் சென்றேன்.  லேசான சிராய்ப்புதான் என்றாலும், தோல் முழுமையாக பிய்ந்திருந்தது.  வலியை விட எரிச்சல் அதிகமாக இருந்தது.  ஃபோர்செப்சில் பஞ்சைப் பிடித்து, பழுப்பு நிறத்தில் ஒரு திரவத்தை அந்தப் பஞ்சில் ஊற்றி தேய்த்தபோது வலி தலைக்கேறியது.  பல்லை இறுக்கக் கடித்துக் கொண்டேன்.   டாக்டர் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

வீட்டுக்கு வந்ததும், அம்மாவிடம் சொல்லாமல் தலை வலிக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் படுத்து விட்டேன்.  வலி விண் விண்ணென்றது. 
இடித்து விட்டு நிற்காமல் போன அந்தக் கார் மீண்டும் மீண்டும் உறுத்திக் கொண்டே இருந்தது.  எந்த முடிவுக்கும் வர முடியாமல் குழப்பமாக இருந்தது. இயல்பாக நடந்த விபத்தா இல்லை என் மரணத்தை நோக்கிய சதியா ?  கையில் வலி கூடிக்கொண்டே இருந்தது.  சாப்பிடும்போது அம்மா பார்த்து விடுவாளென்று சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி விட்டேன். அந்தக் குழப்பத்தோடே தூங்கிவிட்டேன். 

காலை எழுந்ததும் வலி விபத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியது.   பல் விளக்கும்போது அம்மா பார்த்து விட்டாள்…   “என்னடா இது.. “ என்று பதறினாள்.   நாய் குறுக்கே வந்து விட்டது என்றேன்.. கையை புரட்டிப் பார்த்து விட்டு, நான் மருத்துவமனை சென்று வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, இவனுக்கு நேரமே சரியில்ல என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டே சென்றாள்.  அந்தக் காரை என் எண்ணத்திலிருந்து அகற்ற முடியவில்லை.  பின்னால் வந்து இடித்தான்.. நான் சற்று எசகு பிசகாக விழுந்திருந்தால் இன்னும் பலமாக அடிபட்டிருக்கும்.  என்னைக் கொல்வது நோக்கமாக இருக்காதோ.. மிரட்டுவதுதான் நோக்கமாக இருக்குமோ.  கொல்வதாக இருந்தால் இன்னும் வேகமாக இடித்திருப்பானோ.. அவன் இடித்த நேரம் பார்த்து சாலை ட்ராஃபிக் இல்லாமல் இருந்தது..   ட்ராஃபிக் இருந்தால் சிக்கியிருப்பான்.. 

யாரிடமாவது இதைப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது.  நாளை வசந்தி வந்து விடுவாள்.   வசந்திக்குத் தெரிந்தால் பயந்து விடுவாள்.   இப்போது பேசலாமா… மணி 11 ஆகி விட்டது.  இந்நேரம் வந்து கொண்டிருப்பாள்.  தூங்கியிருப்பாள்.  காலையில் பேசிக் கொள்ளலாம்

றுநாள் ஹாஸ்டலுக்குப் போனேன்.   இரண்டு வாரங்கள் கழித்துப் பார்ப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.   கையைப் பிடித்துக் கொண்டேன்.

“காபி ஷாப் போலாமா…. ?“ என்றேன்.

“ம் வா.. “

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் தோளில் சாய்ந்து கொண்டாள்.   சட்டென்று இறுக்கிப் பிடித்தாள்.  

“ஏய்.. என்னடி ஆச்சு உனக்கு…“

“ம் பிடிக்கலன்னா சொல்லு.. “ என்று விலகினாள்

வண்டி ஓட்டிக் கொண்டே, சட்டென்று கையை இழுத்து இறுக்கிக் கொண்டேன்.  “பிடிக்கலன்னு சொன்னேனா….  இடியட்.. என்ன ஆச்சு.. அம்மிணி இவ்ளோ பாசத்தை பொழியறீங்களேன்னு கேட்டேன்…“

“ம் சும்மாதான்.. ரெண்டு வாரம் ஆச்சுல்ல பாத்து… நீ ஜாலியா இருந்துருப்ப.. நான் உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தேன். எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா…“

“ஏய் நானும்தான்டி கஷ்டப்பட்டேன்.  நீ வீட்ல இருக்கறதுனால போன் பண்றதுக்கும் பயமா இருந்துச்சு.. “

டக்கென்று தோளைக் கடித்தாள்..  வலித்தது.

“என்னடி பண்ற.. வலிக்குது…“

“ம் ஆசையா இருக்கு கடிச்சேன். வேணும்னா நீ திருப்பிக் கடிச்சுக்கோ“
“தனியா மாட்டுனேன்னா நீ அவ்ளோதாண்டி.. ரெண்டு நாளைக்கு எந்திரிக்கவே முடியாது.. “

“கிழிச்ச நீ.. சும்மா வாயிலே உதார் விடாத.. “

“நீ பாரு என்ன ஆகறன்னு.. “ 

“பாக்கலாம் டா…  நீயா நானான்னு பாத்துடலாம்.. “

காபி ஷாப் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு, காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம்.

“என்ன சொல்றாங்க வசந்தி… ? “

“யாரு என்ன சொல்றாங்க… ? “

“என்ன வசந்தி வெளையாட்ற… உங்க வீட்லதான்…“

“அதப் பத்தி அப்புறம் பேசிக்கலாம் வெங்கட்…. “

“என்னப்பா.. என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்கனும்னுதானே கேக்கறேன்.. ? “

“இப்போ என்னடா… நாளைக்கேவா கல்யாணம் ஆகப்போகுது எனக்கு… ? இப்போ உன் முன்னாடி கல்லு மாதிரி உக்காந்துருக்கேன்ல .. “

“ம்.. “

“அப்புறம் என்ன… ? வேற ஏதாவது பேசு.. “

“நேத்து ஆக்சிடென்ட் ஆயிடுச்சு வசந்தி.. “

பதறினாள்.. “என்னடா சொல்ற.. எங்க அடிபட்டுச்சு… ?“

“பெருசா ஒண்ணும் இல்ல. “ என்று கையைக் காண்பித்தேன்.  தோல் உரிந்த இடத்தைச் சுற்றி வீங்கியிருந்தது.   

“நல்ல வேளை ப்ராக்சர் எதுவும் ஆகலை.. இப்படியேவா வண்டி ஓட்டிக்கிட்டு வந்த… வலிக்கல ?“

“ரொம்ப ஒண்ணும் வலி இல்ல…  பட் இது ஆக்சிடென்ட்டா இல்ல… யாராவது வேணும்னே பண்ணாங்களான்னு டவுட்டாவே இருக்கு   வசந்தி.. “

“ரொம்ப கற்பனை பண்ணாத வெங்கட்…  நீ தேவையில்லாம பயப்பட்ற…  ஒரு நாளைக்கு ஆயிரம் ஆக்சிடென்ட் நடக்குது.. இதப்போயி பெரிய கான்ஸ்பிரசி மாதிரி சொல்றியே… ஃபர்கெட்   இட்.“

“இல்ல வசந்தி..  எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு வசந்தி..“

“தேவையில்லாம மனசக் கொழப்பிக்காத வெங்கட்.  அம்மா எப்படி இருக்காங்க..  கால் வலின்னு சொன்னியே. இப்போ பரவாயில்லையா.. “

“ம். பரவாயில்லை..
எனக்குத் தோன்றியது போல இவளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.  இவள் சொன்னது மாதிரி நாம்தான் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ….

“என்னடா யோசிச்சுக்கிட்டே இருக்க..  சியர் அப் டார்லிங்.. எத்தனை நாள் கழிச்சு வந்துருக்கேன்.. என்னப் பாத்தது ஒனக்கு கொஞ்சம் கூட சந்தோஷமாவே இல்ல.. “ என்று சிணுங்கினாள். 

“அய்யோ இல்ல வசந்தி..  என்ன பேசற.. சந்தோஷம் இல்லாமையா பாக்க வந்துருக்கேன்.. “

“உண்மையிலேயே சந்தோஷமா… இல்ல நான் போனதும் இதான் சாக்குன்னு வேற எவ பின்னாடியாவது போயிட்டியா.. “

“போனா சும்மா விட்ருவியா நீ… ஆஞ்சுற மாட்ட.. “

“அந்த பயம் இருக்கட்டும்..  அப்ப திட்டுவேன்னு பயத்துலதான் கம்முனு இருக்க..  இல்லன்னா போயிடுவ… அப்படித்தானே…“

“என்ன மேடம் புல் ஃபார்ம்ல இருக்கீங்க போல இருக்கு….“

“எஸ்.. அப்ஸல்யூட்லி.  இல்லன்னா உன்ன மாதிரி ஆளை சமாளிக்க முடியுமா ?   நான் இருக்கும்போதே உன் கண்ணு மேயுது…“

“ச்சீ. சத்தியமா நான் உன்னைத் தவிர யாரையுமே பாக்கறது கூட இல்லை தெரியுமா..  அதோ அந்த கார்னர்ல டக்கரா ஒரு ஃபிகர் உக்காந்துருக்கரத நான் பாக்கவேயில்ல தெரியுமா….“

“டேய் பொறுக்கி..  தெரியும்டா உன்னப் பத்தி…  என்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்பவே முழுங்கற மாதிரி பாத்தியே..“

“நீ தானேடி சாட்ல வந்த…  நானா உன்கிட்ட வந்து பேசுனேன்.   என்ன சொல்ற.. நீ சரியான ஜொள்ளு.. “

“நான் சின்னப்பொண்ணு.. ஏதோ ஆர்ட்டிக்கிள் நல்லா எழுதுறியேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சேட் பண்ணா.. எப்போ எப்போன்னு அலைஞ்சுக்கிட்டு என் பின்னாடியே வர்ற.. ?  பெரிய மனுசன் மாதிரியாடா நடந்துக்கிட்ட நீ… ? “

“நீ அவ்ளோ அழகா இருந்தடா கண்ணு…  உன் பின்னாடி எப்படி அலையாம இருக்க முடியும் ?  அலையாம இருந்தா எனக்கு கண்ணு குருடுன்னு அர்த்தம்.. “

“அய்யோ..  ஸோ ஸ்வீட் மாமா….  நாளைக்கு என்னை எங்க கூட்டிட்டுப் போற மாமா… “

”எங்க வேணாலும்.. ”

”வேண்டா வெறுப்பால்லாம் கூட்டிட்டுப் போக வேணாம்பா.. ” பொய்யாகக் கோபித்தாள். 

”ஏய் என்னடி.. வேண்டா வெறுப்பான்னு சொன்னேனா… ”

”அப்புறம்.. சலிச்சுக்கிட்டே போகலாம்னு சொன்ன மாதிரி இருக்கு..? ”

”அய்யோ.. இல்லடி…  எங்க வேணாலும் போலாம்..  ஐ யம் அட் யுவர் டிஸ்போசல் டுமாரோ… டுமாரோ ஈஸ் எக்ஸ்க்ளுஸிவ்லி ஃபார் யு.. என் லைஃபையே உனக்காக தந்துட்டேன்.. நாளைக்கு ஒரு நாளை உனக்காக ஸ்பென்ட் பண்ண மாட்டேனா…”

டக்கென்று எழுந்து உதட்டில் முத்தமிட்டாள்.   யாராவது வருகிறார்களா என்று அவசரமாக பார்த்தேன்…

“யாரும் வரலடா.. பாத்துட்டுத்தான் குடுத்தேன். “

சொன்னபடி மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் ஹாஸ்டல் சென்று காத்திருந்தேன்.  வழக்கம் போலவே அன்றும் அரை மணி நேரம் கழித்தே வந்தாள்.  அவள் வந்த உடனேயே லேட்டானதற்கு சமாதானம் அவள் எப்படிச் சொல்லுவாள் என்பதை கிண்டலாக நடித்துக் காட்டினேன்.

“சாரி.. வெங்கட்… லேட்டாயிடுச்சு… இதத்தானே சொல்லப்போற… உக்காருடி வண்டில.. “ என்றேன்..

“என்னை எப்போப்பாத்தாலும் திட்டிட்டே இருக்க….“ என்று செல்லமாக மூஞ்சை சுருக்கிக் கொண்டாள்.  

“அத விடு.. எங்கப் போலாம்னு சொல்லு…“

“எங்கயாவது போ.. சினிமாவுக்குப் போலாமா… ?  இல்ல ஷாப்பிங் போலாமா ? “

“எதுனாலும் ஓ.கேடி.. “

“ஷாப்பிங் போலாம்.. எனக்கு ட்ரெஸ் வாங்கணும்.. “

“எதுக்குடி ட்ரெஸ்.. ஊருக்குப் போறதுக்கு முன்னாடிதானே வாங்குன.. ? “
“ம்.. அடுத்த வாரம் என் பர்த்டே.. அதுக்கு வாங்கிக்க சொல்லி எங்க அப்பா பணம் போட்ருக்காரு…“

ச்சை…  நான் அவள் பிறந்தநாளை எப்படி மறந்தேன்..  பல தடவைகள் சொல்லியிருக்கிறாள்..  ச்சை..  உறுத்தலாக இருந்தது.  ஊருக்கு முன் நான் அல்லவா ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.. 

“சாரி வசந்தி….  மறந்துட்டேன்…“

“உங்களுக்கு இதெல்லாம் எப்படி சார் ஞாபகம் இருக்கும். எவன் எங்க மாட்டுவான்..  எவனை சிக்க வைக்கலாம்னு அதுலதான் உன் கவனம்.. “

“உனக்கு என்னடி வேணும்.. சொல்லு.. வாங்கித் தர்றேன்…“

“எனக்கு ஒண்ணும் வேணாம்பா…. எங்க அப்பா ட்ரெஸ் வாங்கிக்க பணம் குடுத்துருக்காரு.. நீங்க கூட்டிட்டு வந்து விடுங்க போதும்..“ 

அவள் நான் பிறந்தநாளை மறந்ததை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை…  என்ன செய்து சமாதானப்படுத்துவது….

அண்ணா நகர் வழியாக சென்று கொண்டிருந்தோம்..  ஒரு லேப்டாப் விற்பனை செய்யும் கடை வந்தது.  டக்கென்று வண்டியை நிறுத்தினேன்.

“எறங்கு…“

“இங்க எதுக்குடா நிறுத்தற.. ? “

“எறங்கு சொல்றேன்.. “

நேராக லேப்டாப் கடைக்குள் சென்றேன்.   அவளிடம் எதுவுமே பேசவில்லை.   டிஸ்ப்ளேயில் வைத்திருந்த பல லேப்டாப்கள் பிசினெஸ் லேப்டாப்களாக முரட்டுத்தனமாக இருந்தன.   சோனியில் மட்டும் பெண்களுக்கென்றே செய்தது போல நளினமாக, அழகான வண்ணத்தில் வைத்திருந்தார்கள்.  சோனி லேப்டாப்பைப் பார்த்து இதை எடுத்துக கொள்கிறேன் என்றேன்.

“உன்கிட்டதான் லேப்டாப் இருக்குல்லடா… எதுக்கு இன்னொன்னு  வாங்கற.. “

“அது ரிப்பேர் ஆயிடுச்சு…. சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க… அதான்.. “

“ஓ.கே.. ஓ.கே…“

பில்லுக்கு பணத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தோம்.  வந்ததும் ஹேப்பி பர்த்டே என்று சொல்லியபடி அவள் கையில் கொடுத்தேன்.

சட்டென்று அவள் கண்கள் கலங்கின…  என்ன வெங்கட் இப்படிப் பண்ற… நான் உன்ன சும்மாதான்டா கிண்டல் பண்ணேன்..  ஏன்டா இவ்ளோ வெலை கொடுத்து வாங்குன.. எனக்கு எதுக்குடா இப்போ லேப்டாப்.. “

“எனக்குப் புடிச்சுருக்கு வாங்கித் தர்றேன்.. வச்சுக்கடி…  எனிதிங் ஃபார் யு…“
சட்டென்று எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள்.  “யேய் ரோடுடி…“

“இருக்கட்டும் போடா…“

”வெங்கட்…  உங்க வீட்டுக்குப் போலாம்டா… உங்க அம்மாவைப் பாக்கணும்.. ஃபோன்லதான பேசிருக்கேன்.. சினிமாவுக்கு இன்னொரு நாள் போலாம்.. ”

”ஓ எஸ்.. ஷி வில் பி வெரி ஹேப்பி.. போலாம் வா.. ”

நேராக ஹாஸ்டலில் சென்று லேப்டாப்பை வைத்து விட்டு, வீட்டுக்குச் சென்றோம்.

வீட்டுக்கள் நுழைந்ததும் அம்மா ஆச்சர்யமாகப் பார்த்தாள்… அவளே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.. ”அம்மா நான்தான் வசந்தி.. உங்கக் கூட போன்ல பேசியிருக்கேன்.. ஞாபகம் இல்லையா… ? ”

”இருக்கும்மா…   வக்கீல்தானே நீ…”

”ஆமாம்மா.. வக்கீல் வசந்திதான்.  எப்படி இருக்கீங்க.. உடம்பு நல்லா இருக்கா…?”

”நல்லா இருக்கும்மா..  உக்காரும்மா. காபி போட்றேன்.. ”

”நான் லன்ச் சாப்டலாம்னு வந்தா காபி மட்டும்தானா.. ? ”

”லன்ச் பண்றேம்மா.. மொதல்ல காபி சாப்புடு…  என்னம்மா பொட்டு கூட வைக்காம வந்துருக்க..”

”இல்லம்மா வச்சேன்.. கீழ விழுந்துருச்சு. ”  கூசாமல் புளுகினாள். அன்று அவள் வரும்போதே பொட்டு வைத்திருக்கவில்லை.

அம்மா சட்டென்று குங்குமச் சிமிழை எடுத்து பொட்டு வைத்து விட்டாள்.  பொட்டு வைத்ததும் வசந்தியை முத்தமிட்டாள்.  இவளும் பதிலுக்கு முத்தமிட்டாள். சட்டென்று அந்த இடம் நெகிழ்ச்சியால் நிறைந்தது போலிருந்தது.  பேசிக்கிட்ரும்மா வந்துட்றேன் என்று சொல்லி விட்டு அம்மா காபி போட கிச்சனுக்குள் சென்றாள்.   இவள் என்னோடு உட்காராமல், டக்கென்று கிச்சனுக்குள் சென்றாள்.   இருவரும் ரகசியமாக காதில் விழாதவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.  நான் ஒன்றும் கண்டுகொள்ளாமல் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் காப்பியோடு ஹாலுக்கு வந்தார்கள்.   ”என்னம்மா பேசிக்கிட்டிருந்த இவக்கிட்ட…”

”கல்யாணம் பண்ணிக்க, பண்ணக்கன்னு சொல்றேன்.. இவன் முடியாதுன்னு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டுருக்கான்னு நீ பண்றததானே சொன்னேன்..”  

என்னமோ தெரியவில்லை.  வசந்தியை பார்த்துமே பிடித்து விட்டது அம்மாவுக்கு.  கல்யாணம் வேண்டாம் என்று நான் பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருந்து விட்டு, திடீரென்று வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்ததும் அம்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.   வசந்தி ரொம்ப இயல்பாக அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள்.  வெளிநாட்டிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மகளோடு அன்னியோன்யமாக உரையாடும் ஒரு தாயும் மகளும் போல பேசிக் கொண்டிருந்தார்கள்.  என்னை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாளே என்று கூடத் தோன்றியது.  ஒரே நாளில் அவ்வளவு நெருக்கமாகி விட்டார்கள்.  

ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இருக்கிறதா என்று கேட்டு விட்டு வாரா வாரம் வீட்டுக்கு வந்து சாப்பிடு என்று இயல்பாக வசந்தியை அழைத்தாள் அம்மா.   அவளும் மகிழ்ச்சியாக வர்றேன் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள்.   உங்க வீட்ல எத்தனை பேர், அப்பா என்ன பண்றாரு…  அம்மா என்னப் பண்றாங்க என்று அவள் வரலாறையே முழுமையாக தெரிந்து கொண்டாள்.

பேசிக் கொண்டிருக்கும்போதே அம்மா போன் ஒலித்தது.   ””அய்யய்யோ… அப்படியாங்க… கொஞ்சம் இருங்க.  நான் பத்து நிமிஷத்துல வர்றேன்.. ” என்று அம்மா பதற்றமாக பதில் சொன்னாள்.

”என்னம்மா ஆச்சு…”

”கார்த்திக் அம்மா இருக்காங்கள்ல.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்களாம்டா.. அவங்க பையன் ஆபிஸ்லேர்ந்து வர லேட்டாகும். ஹாஸ்பிட்டல் போகணும்னு வரச் சொல்றாங்க..  நான் போயிட்டு வந்துட்றேன்.. நீ இரும்மா… ஒன் அவர்ல வந்துட்றேன்.. என்னை வந்து அவங்க வீட்ல எறக்கி விட்டுட்றா.. ”

அம்மா வெளியே போகிறாள் என்றதும் என்னையறியாமல் குதூகலம் ஏற்பட்டது.  வசந்தியோடு தனிமை என்ற எண்ணமே உடலில் சூட்டை ஏற்படுத்தியது.   பதற்றத்தை காண்பித்துக் கொள்ளக் கூடாது என்று கஷ்டப்பட்டு நிதானமா இருப்பது போல இருக்க முயற்சித்தேன்.   அவள் எனக்கு மேல் பரபரப்பானாள்.    என் கண்களை சந்திப்பதைத் தவிர்த்தாள்.   மேஜையில் இருந்த கதிரொளியை எடுத்து ஏதோ ஆழமாக படிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.

”வாடா போலாம்” என்று அம்மா அழைத்ததும் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.   இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தது அந்த கார்த்திக் அம்மாவின் வீடு.   நேராகச் சென்று அம்மாவிடம் சீக்கிரம் வந்து விடு என்று சொல்லி விட்டு, திரும்பியபோது பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.  எங்கே கீழே விழுந்து விடுவேனோ என்று பயமாக இருந்தது.   ஒரு வழியாக வீட்டை வந்து அடைந்தேன்.  சத்தம் வராமல் கதவை தாழிட்டேன்.

ஹாலில் இல்லாமல் பெட்ரூமில் என் லேப்டாப்பில் பேஸ் புக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.     சத்தமில்லாமல் சென்று கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன்.

‘ஆண்டவா... எவ்வளவு வாசனையாக இருக்கிறாள்….’

”ஏய் கம்முனு இருடா.. அம்மா வந்துடப்போறாங்க…” வரமாட்டாங்கடி என்று சொல்லியவாறே இறுக்க அணைத்தேன்.     வெங்கட் வேணாம் வெங்கட் என்ற முனகியபடியே தளர்ந்தாள்.    முத்தங்களால் அவளை நனைக்கத் தொடங்கினேன்.  காமம் வெறியூட்டியது. அவள் வெறி இரட்டிப்பானது. ஆணாக மாறினாள்.  புலியாக என்னை வேட்டையாடியாள்.  வேட்டையாடி, வேட்டையாடப்பட்டு, காமக்கடலில் நீந்த முயன்று அலைகளால் ஒதுக்கப்பட்ட சருகு போல களைத்தோம்.

மாலை அம்மா வந்ததும் சொல்லி விட்டுக் கிளம்பினோம்.  அவளை ஹாஸ்டலில் இறக்கி விட்டேன்.  நாளை முழுவதும் அவளுக்கு வேலை இருப்பதாகச் சொன்னாள்.

அடுத்த இரண்டு நாட்களும் அவளைப் பார்க்க முடியவில்லை.   எனக்கும் அடுத்த இதழுக்கான கட்டுரை வேலைகள் சரியாக இருந்ததால் ஒன்றிரண்டு மெசேஜ் அனுப்பி விட்டு வேலைகளில் மூழ்கி விட்டேன்.   
மூன்றாவது நாளும் அவளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.  தொடர்ந்து கால் செய்தால் எந்த அழைப்புக்கும் பதில் இல்லை.  மெசேஜுக்கும் பதில் இல்லை.   உடம்பு சரியில்லாமல் போயிருக்குமா..  இல்லை போனை தொலைத்து விட்டாளா.. ?  

ஒன்றும் புரியாமல் நேரே ஹாஸ்டலுக்குப் போய் பார்ப்போம் என்று வாசலில் காத்திருந்தேன்.   மீண்டும் போன் அடித்தால் எடுக்கவேயில்லை.   என்ன இப்படிப் பண்ணுகிறாளே என்று எரிச்சலாக இருந்தது.

அவள் ரூம் மேட்டின் நம்பர் இருந்தது. 

“ஹலோ… நான் வசந்தி ஃப்ரெண்ட் வெங்கட் பேசறேன்.. வசந்தி ஃபோன் பண்ணா எடுக்க மாட்றாங்க. உடம்பு இது சரியில்லையா…? எங்க இருக்காங்க.. ? “

“உங்ககிட்ட சொல்லலயா…… ?  அவங்க முந்தாநாளே ஹாஸ்டலை காலி பண்ணிக்கிட்டு மதுரை போயிட்டாங்களே… உங்ககிட்ட சொல்லிட்டதா சொன்னாங்களே… ?

அதற்குப் பிறகு அவள் பேசியது கேட்கவில்லை.

தொடரும்.