Friday, 5 October 2012

தீராக் காதல் 30கால் வந்ததும், ஸ்பீக்கர் போனைப் போடு என்று அவளிடம் சொன்னேன்.  அவள் கண்களில் ஏராளமான பயம். ரொம்ப நேரம் ரிங் அடிக்க விட்டாள்.  “பேசு வசந்தி…“  பச்சை பட்டனை அமுக்கி ஸ்பீக்கரில் போட்டாள்.

“என்ன வசந்தி…  என்ன நடக்குது…“ உச்ச ஸ்தாயியில் கத்தினார் அவள் அம்மா.

தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போலக் கேட்டாள். 

“என்னம்மா… என்ன ஆச்சு.. “ அந்தக் கேள்வியில் பலவீனம் இருந்தது.  ஆனால் அவள் அம்மா அது எதையும் கவனிக்கும் மன நிலையில் இல்லை.

“கண்ட நாயையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த… … இப்ப என்ன ஆச்சு பாத்தியா… ? அப்பவே சொன்னேனேடி… உங்க அப்பன்கிட்ட. மெட்றாசுக்கு அனுப்பாதீங்க அனுப்பாதீங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னேனேடி..  கேட்டானா அந்த ஆளு… மெட்றாசுக்குப் போயி வேலை செய்யற திமிருடி உனக்கு… அதான் இந்த வேலையெல்லாம் பாக்கச் சொல்லுது..“

ஸ்பீக்கர் போனை அணைக்கச் சென்றாள்… நான் கண்ணாலேயே மிரட்டினேன்.  

“என்னம்மா சொல்ற … எனக்குப் புரியலம்மா.. “

“என்னடி புரியாத மாதிரி நடிக்கற… உனக்குத் தெரியாமலயாடி அவன் அப்படி கேப்பான்…. ? “

“என்னம்மா ...  யாரைப் பத்திம்மா சொல்ற… “

“அதான்டி… வீட்டுக்கு போன வாரம் ஒருத்தன  கூட்டிட்டு வந்தியே… கோட்டைச்சாமியோ என்ன எழவோ.. அவன் பேரும் ஆளும்….“

“என்னம்மா அவருக்கு… “

“அவரு என்னடி அவரு…. இதெல்லாம் ஒண்ணும் சரிப்பட்டு வராது.. நீ கௌம்பி ஊருக்கு வா… இப்பவே வண்டியப் புடி.. “

“அம்மா என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா… “

“தைரியமா உங்க அப்பாக்கிட்ட போன் பண்ணி பொண்ணு கேக்கறான்டி உன்னை…  என்ன தைரியம் அவனுக்கு.. அவனுக்கு என்ன வயசு. உனக்கு என்ன வயசு…. என்னா திமிருடி அவனுக்கு…“

“அம்மா அவரு கேட்டா நான் என்னம்மா பண்றது… என்னை எதுக்கும்மா திட்ற….“

“நீ எடம் குடுக்காம அவன் எப்படிடி கேப்பான்.. அவனுக்கு அந்த தைரியம் எங்க இருந்து வந்துச்சு… எல்லாம் நீ குடுக்கற எடம்… அவன் எந்த ஊரோ…..“ டக்கென்று ஸ்பீக்கரை ஆஃப் செய்தாள்.   நானும் எதுவும் கேட்கவில்லை.
அவள் அம்மா பேசியது அவமானமாக உணரச் செய்தது.  ஏதோ செய்யக்கூடாது பஞ்சமாபாதகத்தைச் செய்தது போல என்னை இப்படி திட்ட வேண்டிய அவசியம் என்ன ?  ஊர் உலகத்தில் இல்லாத ஒரு பெண்ணை பெற்று வைத்திருப்பது போல இப்படிப் பேசுகிறாரே… நான் உங்கள் பெண்ணை விரும்புகிறேன்.  அவளைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்வது அப்படி ஒரு தவறா.. ‘மன்னிக்கவும் எங்களுக்கு விருப்பமில்லை என்று நாகரீகமாக சொல்லியிருக்கலாமே…’

அவள் அம்மா பேசியதை திருட்டுத்தனமாக கேட்டது என் தவறு… அவர் அவளிடம்தானே அப்படிப் பேசினார்.  அவருக்குத் தெரியாமல் அதை கேட்டு விட்டு அவரிடம் கோபிப்பதில் என்ன நியாயம்…

நான் நிற்கும் இடத்திலிருந்து தள்ளிச் சென்று ஒரு பதினைந்து நிமிடங்கள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.  முடித்து விட்டு திரும்பினாள்.  கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. 

என்னவோ தெரியவில்லை.  என் மனது இதை எதிர்ப்பார்த்தது போல அமைதியாக இருந்தது.  சலனமற்று இருந்தது போல உணர்ந்தேன்.  வா போகலாம் என்று கூறி விட்டு, வண்டியில் அமர்ந்தவுடன் பைக்கை கிளப்பினேன்.   “என்னை நேரா ஹாஸ்டல்ல விட்டுடு வெங்கட்“ என்றாள்.      நான் எதுவும் பேசாமல் நேராக காபி ஷாப்புக்கு வண்டியை விட்டேன்.  எப்போதும் போகும் காபி ஷாப்புக்குப் போகாமல், வேறு காபி ஷாப்புக்குச் சென்றேன்.

இறங்கியதும் அவள் அழுகை நிற்கவேயில்லை.  விசும்பாமல் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.  ‘நான் என்ன சொல்லி சமாதானப்படுத்த முடியும்… ? ’ மூடை மாற்றுகிறேன் என்று என்ன பேசினாலும், அபத்தமாக இருக்கும்.

“கேக் சாப்ட்றியா.. ? “

அவன் பதிலேதும் சொல்லாமல் வேறு உலகத்தில் இருந்தாள்.  அவளைக் கேட்காமல் நானே கேக் ஆர்டர் செய்தேன்.  அழுது கொண்டே இருந்தாள்.  
“வசந்தி…  எதுக்கு இப்படி அழுவுற…“

கர்சீப்பை எடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.  ஆண்களை விட அதிகம் அழுவது பெண்கள்தான்.  ஆனால் அவர்கள் ஏன் கையகலத்திற்கு கர்சீஃப்பை வைத்துள்ளார்கள்.. ஒரு கண்ணின் கண்ணீரைத் துடைப்பதற்கே பத்தாதே… ச்சை… அழுது கொண்டிருக்கிறாள்.. இந்த நேரத்தில் இது என்ன ஆராய்ச்சி…

“வசந்தி… இங்க பாரு… அழுறத நிறுத்து.   அம்மா அப்டி பேசனத நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்கல.  அவங்க அப்படித்தான் பேசுவாங்க.  லவ் பண்றோம்னு சொன்னதும் எந்த பேரன்ட்ஸ் உடனே ஒத்துக்குவாங்க… நாமதான் பேசி கன்வின்ஸ் பண்ணணும். “

“இல்ல வெங்கட்… அவங்கள கன்வின்ஸ் பண்ணவே முடியாது.  வேலைக்கெல்லாம் போக வேணாம். நாளைக்கே ஊருக்கு வான்றாங்க.  டிக்கெட் கிடைக்காதும்மான்னா எப்படியாச்சும் வான்றாங்க. “

“அம்மா வேற என்ன சொன்னாங்க…“

“அதேதான் வெங்கட்… உனக்குத் தெரிஞ்சு கேட்டானா தெரியாம கேட்டானா… அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் வர்ற மாதிரி நீ ஏன் நடந்துக்கிட்ட.   இதே மாதிரிதான் திட்டிட்டு இருந்தாங்க வெங்கட்.. “

“அப்பா எதும் சொன்னாரா…“

“அப்பா என்ன தனியா சொல்லணும்.. அம்மா திட்டும்போது பக்கத்துலதானே இருக்கார். “

“சரி விடுப்பா… வேற ஏதாவது பேசலாம்…“

“நாளைக்கு ஊருக்குப் போகணும் வெங்கட்.  திருப்பி அனுப்புவாங்களான்னு பயமா இருக்கு.   அப்பிடியே தங்க வச்சுடுவாங்க. “
“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது.  எப்படியும் அனுப்பிடுவாங்க.  போயிட்டு வா… பாத்துக்கலாம். “

டட்கலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை.  ஆம்னி பேருந்தில் டிக்கட் புக் செய்து கோயம்பேட்டில் ஏற்றி விட்டேன்.  பஸ் கிளம்பிய அடுத்த வினாடி, ஐ மிஸ் யூ என்று எஸ்எம்எஸ் அனுப்பினாள்.

அவளுக்கு ஏதோ சமாதானம் சொன்னாலும், என் மனதிலும் அவளை அனுப்ப மாட்டார்களோ என்ற பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. 
ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது.  தொலைபேசியிலும் ஃபேஸ் புக்கிலும் மட்டுமே தொடர்பு.   நேரில் பார்க்க முடியாமல் சிரமமாகத்தான் இருந்தது. 
இரவு 11 மணிக்கு மேல் போன் செய்தாள்.   ”வெங்கட்.. எப்படியிருக்க… ?

”நான் நல்லா இருக்கேம்பா… நீ எப்படி இருக்க.. ? ”

”ஏதோ இருக்கேன் வெங்கட்…   உன்னைப் பத்தி விலாவரியா விசாரிச்சுருக்காங்க வெங்கட்.  உன் மேல இருக்கற கேஸ்.. நீ ஜெயிலுக்குப் போனது.  வேலையிலேர்ந்து டிஸ்மிஸ் ஆனது எல்லாத்தையும் விசாரிச்சுருக்காங்க.. ”

”விசாரிக்கட்டும் வசந்தி.. இது எதையுமே நான் மறைக்க விரும்பலையே..  நான் எதுக்காக இவ்வளவு வேலையையும் பண்ணேன்னு உனக்குத்  தெரியும்ல… நீதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்.  வாயை மூடிக்கிட்டு, நடந்த தப்பை கண்டுக்காம இருந்துருந்தேன்னா இந்நேரம் நான் மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிருப்பேன் வசந்தி…  நேர்மையா இருக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்றேன்னு சொல்லு.. ”

”எல்லாத்தையும் சொல்லிட்டேன் வெங்கட்…  அவங்க கன்வின்ஸ் ஆகவேயில்லை.   ரெண்டு பேரும் மருந்து குடிச்சுட்டு செத்துடுவேன்றாங்க.. நான் வந்ததும் அம்மாக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.   ஷுகர் திடீர்னு அதிகமாயிடுச்சு. பாதி உடம்பா ஆயிட்டாங்க வெங்கட். திடீர்னு வயசான மாதிரி தெரியறாங்க..

அப்பா எங்கிட்ட பேசவே மாட்றாரு..  நானா போயி பேசுனாக் கூட அவாய்ட் பண்றாரு…” என்று அழத் தொடங்கினாள்.  

”அழாத வசந்தி.. இப்போதைக்கு நம்ப பேச்சை எடுக்காத.  அவங்க என்ன சொன்னாலும் சரின்னு சொல்லிடு.   தைரியமா இருக்கச் சொல்லு.”

சத்தம் வராமல் விசும்பிக் கொண்டேயிருந்தாள்.   ஒரே பெண்.  வேறு குழந்தைகள் இல்லை. இவளுக்கு அவர்கள்தான் உலகம்.  அவர்களுக்கும் இவள்தான் உலகம்.   அழத்தான் செய்வார்கள்.  இவளும் என்ன செய்வாள்… என்ன சொல்லி சமாதானப்படுத்துவாள் ?

பெரிய யோக்கியன் மாதிரி பேசிய அவள் அப்பாதான் அனைத்துக்கும் தடையாக இருக்கிறான்.  கம்யூனிஸ்ட் கட்சியில் பல வருஷம் இருந்தேன் என்று பெருமை பட்டுக்கொள்கிறான்… ஆனா பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லையே…  அவள் பிடிவாதம் பிடித்தால், என் மீது உள்ள ஆத்திரத்தில் சென்னையில் உள்ள அவன் நண்பர்கள் யாரையாவது வைத்து மிரட்டுவானோ… ஆள் வைத்து அடிப்பானோ… ச்சே… என்ன இது கற்பனை…  என்னை ஏன் மிரட்ட வேண்டும்… அவன் பெண்ணை மிரட்டினால் போதாதா ?

வள் சென்று பத்து நாட்களுக்கு மேலே ஆனது. மாலை வேளையில், காபி ஷாப்புக்கு போகும் வழக்கம் இல்லாது போனதால், நெடு நேரம் சும்மா இருப்பது போலத் தோன்றியது.  ஒரு நாள் என் வழக்கை நடத்தி வரும் வடிவேலு போன் செய்தார்.

“வெங்கட் எங்க இருக்கீங்க… ? “

“சார் கதிரொளி ஆபீஸ்லதான் சார் இருக்கேன். “

“கொஞ்சம் ஆபீசுக்கு வந்துட்டுப் போக முடியுமா ? “

உடனே கிளம்பிச் சென்றேன்.

“உங்க ட்ரையல திருச்சிக்கு மாத்தச் சொல்லி சிபிஐல ஹைகோர்ட்ல பெட்டிஷன் போட்ருக்காங்க.  நாளைக்கு விசாரணைக்கு வருது. “

“என்ன சார் இது…..  திடீர்னு ஏன் சார்…  திருச்சிக்குப் போயி எப்படி சார் ட்ரையல் அட்டென்ட் பண்ண முடியும் ? “

“நீங்க முக்கியமான பத்திரிக்கையாளராம்.  ரொம்ப பவர்ஃபுல்லான ஆளாம். சாட்சிகளை கலைச்சுடுவீங்களாம்.   அதனால, ட்ரையலை மாத்தணும்னு சொல்றாங்க. “

“சார்.. நாம இதை தடுக்க முடியாதா சார் ?  திருச்சிக்குப் போனா வேலை பாக்க முடியாது சார்…“

இவள் ஊரில் இல்லாவிட்டாலும், சென்னை வந்து விட்டால், இவளைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்று தோன்றியது.  அது மட்டுமல்லாமல் கதிரொளி வேலை போய் விடுமே.. தற்போது பிழைப்புக்கென்று இருக்கும் ஒரே வேலை அதுதான். 

“மாத்தக் கூடாதுன்னு ஆர்க்யூ பண்ணலாம் வெங்கட்.  நமக்கு நோட்டீஸ் வந்துருக்கு.  நம்ப சைடை ஹியர் பண்ணாம மாத்த முடியாது.   உங்களுக்குத் தகவல் சொல்றதுக்காகத்தான் கூப்பிட்டேன். நான் ஆர்க்யூ பண்ணிக்கறேன்.  பட் நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா கோர்டுக்கு வாங்க.. “

“கோர்ட்டுக்கு வர்றேன் சார். “

இதை விட வேறு என்ன முக்கியமான வேலை.

நான் தான் இதை மறந்து விட்டேன்.  காதல் மோகத்தில் அனைத்தையும் மறந்து வேறு உலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  சிங்காரவேலு எதையுமே மறக்கவில்லை.   என்னை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறான்.   ஏராளமான பணமும், வானளாவிய அதிகாரமும் அவனிடம் இருக்கும்போது, என்னைப் போல சாதாரண ஆளை சும்மா எப்படி விடுவான்… நான் வழக்கை கவனமாக பார்த்திருக்க வேண்டும்.  சிங்காரவேலு போன்ற ஒரு எதிரியை சம்பாதித்துக் கொண்டு இப்படி அசட்டையாக இருந்திருக்கக் கூடாது.  

மறுநாள் 12.30 மணிக்கு எனது வழக்கு அழைக்கப்பட்டது. முதலில் பேசிய சிபிஐ வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரி, நல்ல தொடர்புகள் உள்ளவர்..  முக்கியமான பத்திரிக்கையாளர்.   அவரால் சாட்சிகளை எளிதில் கலைக்க முடியும். சென்னை நகரில் வழக்கு நடைபெற்றால் எதிரி, சாட்சிகளை கலைத்து விடுவார். அதனால் உடனடியாக திருச்சிக்கு வழக்கை மாற்ற வேண்டும் “ என்றார்.

முருகவேல் பதிலுக்கு நான் சாட்சியைக் கலைத்து விடுவேன் என்பதற்கு எந்த ஆதாரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.   ஒரு வேளை கலைத்து விடுவாரோ என்ற உத்தேசக் காரணங்களை வைத்து, ஒருவரை அலைக்கழிக்க முடியாது என்றார்.

சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்ற உறுதியான தகவல்கள் சிபிஐக்கு வந்திருப்பதாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வழக்கு பாரபட்சமற்ற முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மனுதாரருக்கு திருச்சியில் வழக்கை சந்திப்பதில் சிரமம் இருக்கும் என்றால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை இந்த நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றதுமே கலவரமானேன். 

‘எப்படிப்பட்ட வெறியோடு இருக்கிறார்கள்…. நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒரு நபரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார்கள் ?’

ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றதும் நீதிபதி முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது… அவர் சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து. “மிஸ்டர் கவுன்செல்… நீங்கள் சொல்வது ஒரு சீரியசான குற்றச்சாட்டு.  அந்தக் குற்றச் சாட்டுக்காக நீங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீனையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்கள். ஒரு மனிதனின் சுதந்திரத்தை முடக்குவதற்கு போதுமான காரணங்கள் வேண்டும்.. உங்களிடம் இது தொடர்பாக என்ன ஆதாரங்கள் உள்ளது ? “

“இன்னும் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் மை லார்ட்…“

உடனே நீதிபதி, “இந்த மனுவை நீங்கள்தான்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளீர்கள்.  தாக்கல் செய்து விட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் நீதிமன்றம் உங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.     இவ்வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன்.   சிபிஐ உரிய ஆதாரங்களை தாக்கல் செய்து பின்னால், அடுத்த நடவடிக்கை குறித்து இந்நீதிமன்றம் முடிவெடுக்கும்“ என்றார்.

சிபிஐ வழக்கறிஞர் முகத்தில் அதிர்ச்சி….. இதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பது தெரிந்தது.  “மை லார்ட்.. ஸ்டே வேண்டாம்.  வழக்கு நடக்கட்டும்.  ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கிறோம் “ என்றார்.   ஆனால் நீதிபதி அவர் சொல்வதைக் காதிலேயே வாங்கவில்லை.   உதவியாளரைப் பார்த்து அடுத்த வழக்கை அழைக்குமாறு “நெக்ஸ்ட்“ என்றதும், உதவியாளர் ஐடெம் நம்பர் 89 என்று கத்தினார்.

சிபிஐ வழக்கறிஞர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறினார்.

“இந்த ஜட்ஜ் முன்னாடி இந்தக் கேஸ் வந்தது பெரிய லக் வெங்கட்.  இந்த கோர்ட்ல ரெகுலரா உக்கார்ர ஜட்ஜ் இன்னைக்கு லீவு.  அவங்களே இவரு முன்னாடி இந்தக் கேஸ் வரும்னு எதிர்ப்பாத்துருக்க மாட்டாங்க.    வேற ஜட்ஜ் இருந்துருந்தா உங்க கேசை ட்ரான்ஸ்பர் பண்ணியிருந்தாலும் பண்ணியிருப்பார்.  சொல்ல முடியாது.  இந்த ஜட்ஜ் பர்சனல் லிபர்ட்டி விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். “

“அடுத்து எப்ப சார் இந்த கேஸ் ஹியரிங்குக்கு வரும்.. ? “ 

“எப்ப வரும்னே சொல்ல முடியாது.  விட்னஸை டேம்ப்பர்  பண்ணிங்கன்னு அவங்க என்ன எவிடென்ஸ் போட முடியும்…?  ஸ்டே வெக்கேட் ஆகற வரைக்கும் நீங்க இந்தக் கேசைப் பத்தி கவலையே பட வேண்டாம்.  போயி நிம்மதியா உங்க வேலையப் பாருங்க.. “

பெரிய நிம்மதி ஏற்பட்டது.  ஒரு பெரிய தலைவலி, தற்காலிகமாக ஓய்ந்தது போலிருந்தது.   அவர் சொன்ன விஷயங்கள் பெரிய அதிர்ச்சியையும் தந்தது.  வேறு ஒரு நீதிபதி இருந்திருந்து இந்த வழக்கை திருச்சிக்கு மாற்றியிருந்தால் என்ன செய்வது  ?   நீதிமன்றங்களுக்கு வந்தால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கையில் ஜட்ஜைப் பொறுத்துதான் நீதி என்பதே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   ஒரு ஜட்ஜ் என்றால் ஒரு மாதிரி தீர்ப்பு…. இன்னொரு ஜட்ஜ் என்றால் இன்னொரு மாதிரி தீர்ப்பு என்றால் என்ன நீதிமன்றம் இது…. ஒரே சட்டத்தின் அடிப்படையில்தானே தீர்ப்பு வழங்குகிறார்கள்…   நீதிபதிகளும் மனிதர்கள்தானே… அவர்களும் இந்த உலகத்தில்தானே வாழ்கிறார்கள்.  எல்லா மனிதர்களிடமும் இருக்கும் விருப்பு, வெறுப்பு,  பொறாமை, பேராசை, அகம்பாவம், முட்டாள்த்தனம், போன்ற குணங்கள் நீதிபதிகளிடம் மட்டும் எப்படி இல்லாமல் போகும்… இதே சமுதாயத்திலிருந்துதானே நீதிபதிகளும் வருகிறார்கள்… ?

நேராக கதிரொளி அலுவலகம் சென்றேன்.  எடிட்டரை சந்தித்து எல்லா விபரங்களையும் சொல்ல வேண்டும் என்று போனதும் எடிட்டர் அறைக்குச் சென்றேன்.

நீதிமன்றத்தில் நடந்தவை அனைத்தையும் சொன்னேன்.   எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். 

“என் காதுக்கும் சில தகவல்கள் வந்துச்சு வெங்கட்.  சிங்காரவேலு உன் மேல கடுமையான ஆத்திரத்துல இருக்கான்னு தகவல் வந்துச்சு.   இப்ப அவன் ஹோம் மினிஸ்டர் வேற.   லாட் ஆஃப் ஃபோர்சஸ் ஆர் அட் ஹிஸ் டிஸ்போசல்.   நம்ப அவனை குறைச்சு மதிப்பிட்டுடக் கூடாது.  இன்னைக்கு கோர்ட்ல உன் கேஸ் திருச்சிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருந்துச்சுன்னா அவன் சந்தோஷப்பட்ருப்பான்.  ஆனா அவன் எதிர்ப்பாத்த மாதிரி நடக்காதது மட்டுமில்ல..  உனக்கு சாதகமாவும் ஸ்டே ஆர்டர் கெடச்சுடுச்சு. அவன் இப்போ அடிபட்ட புலி மாதிரி.  உனக்கு அடுத்து என்ன தொந்தரவு குடுக்கறதுன்னு யோசிச்சிட்டே இருப்பான். 

நைட் லேட்டா சுத்திட்டு இருக்காத.  லீகல்லா என்ன பண்ணாலும் சமாளிச்சுடலாம். இல்லீகலா ஏதாவது பண்ணா நம்பளால ஒண்ணும் பண்ண முடியாது.  இன்னும் நாம சாதிக்க வேண்டியது நெறய்ய இருக்கு.  அதுக்காகவாவது சேஃபா இருக்கணும்.  பி கேர்ஃபுல். சீக்கிரமா நேரத்துல வீட்டுக்குப் போயிடு.“ என்றார்.

ஒரு தந்தையின் உபதேசத்தைக் கேட்டது போல இருந்தது.  இவருக்குத்தான் என் மீது எத்தனை அக்கறை… ?

ண்டியை எடுத்ததும் வழக்கு, கதிரொளி, சிங்காரவேலு எல்லாம் மறைந்து வசந்திதான் ஞாபத்துக்கு வந்தாள்.   இன்று அனுப்பிய இரண்டு எஸ்.எம்.எஸ்களுக்கும் பதிலே வரவில்லை.  ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டாளா… ? அவள் அப்பன் மிரட்டியிருப்பானா… ?  அடித்திருப்பானோ…  பாவம் தனியாளாக எப்படி சமாளிப்பாள். என்னால்தான் எதுவுமே செய்யமுடியவில்லை.

பாக்கெட்டிலிருந்து ஒரு முறை செல்போனை எடுத்து மெசேஜ் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்து…….

திடீரென்று பின்னாலிருந்து ஏதோ என் பைக்கில் இடித்தது.  ஒற்றைக் கையில் பைக்கை பிடித்திருந்ததால் நிலை தடுமாறி தூக்கியடிக்கப்பட்டு முன்னே விழுந்தேன்.  வண்டி தனியாகவும் நான் தனியாகவும் விழுந்தேன்.   சட சடவென்று அருகிலிருந்தவர்கள் வந்து தூக்கினார்கள்.  கூட்டம் கூடியது.   படபடப்பில் என்ன நடந்தது என்று புரியவில்லை.  ஒருவர் கீழே கிடந்த செல்போனை எடுத்துத்தந்தார்.     “சார் எங்கயாவது அடி பட்ருக்கா…. ?  உக்காருங்க மொதல்ல“ என்று என்னை ப்ளாட்பாரத்தில் அமர வைத்தார்கள்.  கீழே விழுந்து கிடந்த என் வண்டியை ஒருவர் நகர்த்தி நிறுத்தினார்.

“எறங்குடா கார்லேர்ந்து.. இடிச்சுட்டு மயிரு மாதிரி காரை விட்டு எறங்காம உக்காந்துருக்கான் பாரு…“ என்று அவர்கள் சொன்னபோதுதான் எந்த வண்டி இடித்தது என்று பார்த்தேன்.   வேகமாக நகர முடியாமல் முன்னால் வாகனங்கள் இருந்ததால் கார் மாட்டிக்கொண்டது. வண்டியின் பதிவு எண்ணைப் பார்த்தேன்.

TN 59 மதுரை பதிவு எண்.

தொடரும்.

No comments:

Post a Comment