Monday, 29 October 2012

தீராக் காதல் 33
வள் ஃபேஸ் புக் பக்கத்தில் வசந்தி என்கேஜ்ட் டு சங்கர நாராயணன் என்று அவன் புகைப்படம் இருந்தது.  சிரித்துக் கொண்டிருந்தான்.

திர்ச்சி, ஏமாற்றம், ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஒரு சேர வந்தன. என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.   என்னையறியாமல் கண்ணில் கண்ணீர் வழியத் தொடங்கியது.   எப்படி…..  நெஞ்சு வலிப்பது போல இருந்தது.   மூச்சு விட சிரமமாக இருப்பது போல உணர்ந்தேன். மீண்டும் ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன். இது பொய்யாக இருக்க வேண்டும் என்று மனம் அரற்றியது.    ஆனால் பொய் இல்லை நிஜம்.   என்கேஜ்ட் என்ற செய்தியை அவள்தானே ஏற்றியிருப்பாள்.  அவளுடைய அக்கவுன்டில் புகுந்து வேறு யாராவது ஏற்றுவார்களா என்ன.. ?

சங்கர நாராயணனின் ஃபேஸ் புக் பேஜை பார்த்தேன்.  பிரேசில் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான். 

வாழ்த்துச் செய்திகள் குவிந்து கொண்டு இருந்தன. 

அவன் பேஜில் “என்ன சங்கர்….  வாட் ய சர்ப்ரைஸ்… சொல்லவேயில்லை. வாட்ஸ் யுவர் ஸ்டோரி” என்று போட்டிருந்தான்.

அவன் அதற்கு பதில் சொல்லியிருந்தான்.  

”இருவருக்கும் கொஞ்ச நாளாகவே நட்பு இருந்தது.  அடிக்கடி பேசிக்கொள்வோம்.   நாளடைவில் நட்பு வளர்ந்தது.  திடீரென்று ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இருவரின் எண்ணங்களும் ஒத்துப் போனது.  நேரில் சந்தித்து விட்டு கல்யாணம் செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம் என்று இருந்தோம்.  நேரில் சந்தித்தோம்.  ரெண்டு பேருக்கும் பிடித்துப்போய் விட்டது. வீட்டில் சொன்னோம்.  இரு வீட்டிலும் ஒத்துக் கொண்டார்கள்.  கடந்த ஜுலை 27தான் சந்தித்தோம்” என்று அவர்கள் காதல் கதையை சொல்லியிருந்தான்.
ஜுலை 27 என்றால்… ஜுலை 26தானே  வீட்டுக்கு வந்தாள்.  அன்றுதானே ஒன்றாக ஊர் சுற்றினோம்.    அன்றைக்கத்தானே அம்மாவோடு எப்படிப் பேசிக்கொண்டிருந்தாள்..? என்னைப் பார்த்து என்னோடு ஊர் சுற்றி, மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி, கொஞ்சிக் குலாவிவிட்டு, மறு நாள் இவனைப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திக்கிறாளே…  என்ன பெண் இவள்… எப்படி இவளால் முடிந்தது… என்னைப் பைத்தியக்காரனாக்கி விட்டாளே…. இவன் என்னைப் பார்ப்பதற்காக சென்னை வரவில்லை அவனோடு திருமணம் நிச்சயம் செய்வதற்காக சென்னை வந்திருக்கிறாள்.. ஹாஸ்டலை என்னிடம் சொல்லாமல் முன்பே காலி செய்திருக்கிறாள்..  எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கடைசியாக என்னோடு ஒரு முறை ஊர் சுற்றலாம் என்று வந்திருக்கிறாள். மறுநாள் கல்யாணம் செய்யப்போகிறவனை பார்க்க திட்டமிட்டு விட்டு, என்னோடு எப்படி இவளால் படுக்கையில் புரள முடிந்தது….  படுக்கையில் ஒன்றாகக் கிடந்தபோது சிறு உறுத்தலும் தோன்றவில்லையா…  என்னால் இப்படி ஒரு துரோகத்தைச் செய்திருக்க முடியுமா ?  எப்படி முடிந்தது அவளால்..  கொஞ்சம் கூட கூசாமல் நடித்திருக்கிறாளே…  இப்போது மட்டும் நடித்திருக்கிறாளா.. இல்லை ஆரம்பம் முதலே நடித்திருக்கிறாளா..  உண்மையில் என்னைக் காதலித்தாளா இல்லை ஊர் சுற்றவும், நேரம் போக்கவும் என்னைப் பயன்படுத்தினாளா…  புதுத்துணிமணிகள் வாங்கிக் கொடுத்து, சினிமாவுக்கு அழைத்துச் சென்று, வித விதமான ஹோட்டல்களில் உணவருந்தி உல்லாசமாக நேரத்தைச் செலவழிக்க ஒரு இளிச்சவாயன் கிடைத்திருக்கிறான் என்று இத்தனை நாளும் என்னைப்  பயன்படுத்தினாளா ?  இப்படி ஒரு இடியைத் தூக்கிக் போட எப்படி மனது வந்தது இவளுக்கு…

27 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த லேப்டாப்பை நினைத்தால் அவளை கொலை செய்தால் என்ன என்ற ஆத்திரம் வந்தது. அந்த லேப்டாப்பை வாங்கும்போதாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே…  எப்படி ஏமாந்திருக்கிறேன்…  எவ்வளவு இளிச்சவாய்த்தனமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் அவமானமாக இருந்தது.  எத்தனை பேரின் ஊழல்களை அம்பலப்படுத்தியிருப்பேன்… எத்தனை மிரட்டல்களை தைரியமாக எதிர் கொண்டிருப்பேன்.  எத்தனை பேருக்கு சவால் விட்டு அவர்களின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தியிருப்பேன்.. ஒரு சாதாரண பெண்ணிடம் இப்படி ஏமாந்து விட்டேனே …  பெரிய பத்திரிக்கையாளன் என்று பெயர் வேறு.. ஒரு சாதாரண அடிப்படைகளைத் தெரியாமல் குருடனாக இருந்திருக்கிறேன்..  எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றி விட்டாள்..  எதற்குமே லாயக்கில்லாதவனாக ஆகி விட்டேனே…  இத்தனை நாள் நான் ஒரு அறிவாளி என்ற என் எண்ணத்தை ஒரே நாளில் தவிடுபொடியாக்கி விட்டாளே…  அறிவாளியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு அடி முட்டாளாக்கிவிட்டாளே…  இப்படியா ஏமாறுவேன்…  ப்ளடி பிட்ச்…

முதல் அத்தியாயத்திலிருந்து..

அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். அம்மாவுக்காக வாங்கிய மாத்திரைகள்.  இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ?   ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை.  உயிர்பிழைத்து விட்டால் அதன் பிறகு எதிர்கொள்ளும் கேள்விகள்…. அவமானங்கள்…..  ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே…  உயிர் போய்விட்டால் எவ்வளவு நிம்மதி… ?  இந்த வலியோடு வாழ வேண்டாமே…

உயிரை அறுத்தது போலிருக்கிறதே… நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே… எப்படி இது நடக்கும் ?  தாங்க முடிய வில்லையே…  இனி எதற்காக வாழ வேண்டும் ?   என்ன இருக்கிறது இனி   வாழ்வதற்கு ?  துரோகத்தின் வலி என்பது இதுதானா ?   எப்படி முடிந்தது அவளால் ? ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா ? பேஸ்புக்கைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

இனி எப்படி இந்த உலகத்தில் அவள் இல்லாமல் வாழ முடியும்.   எதற்காக வாழ வேண்டும் ? 

இறந்து விட்டால் இந்த வேதனையாவது மிஞ்சுமே.   அவளை நினைத்து தினம் தினம் சாவதை விட, ஒரேயடியாகச் சாவது மேல். அவள் இல்லாமல் வாழ்வதை விட, அவள் துரோகத்தை தாங்க முடியவில்லையே…

தண்ணீர் எடுப்பதற்காக ஃப்ரிட்ஜை திறக்கச் சென்றேன். அம்மா உறங்கிக் 
கொண்டிருந்தாள்.   அவளைப் பார்த்ததும் இறப்பதற்கு முன் அவளருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு சாகலாம் என்று தோன்றியது.  அவள் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தேன்.  அவன் வந்தது தெரியாமலே, நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.  முதுமையின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன.   அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  சிறிது நேரத்தில் இறக்கப்போகிறோம் என்று முடிவெடுத்த பிறகு எதற்கு   தாய்ப்பாசம் ?   ஆனால், அவளை நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று தோன்றியது.

இந்த அத்தியாயம் தொடர்கிறது

செல்போனை அடித்துக் கொண்டே இருந்தது.  எந்தக் காலையும் ஏற்க பிடிக்கவில்லை.   எடுத்து சைலென்டில் போட்டேன்.  வீட்டுக்குள்ளேயே நடந்தேன்.    சுவற்றில் தலையை வேகமாக மோத வேண்டும் போல இருந்தது.   எதையாவது எடுத்து கையைக் கிழித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.  மூச்சு விட சிரமமாக இருப்பது போலிருந்தது.  மூச்சை நன்றாக இழுத்து விட்டேன்.  நெஞ்சு அடைப்பது போலிருந்தது. மீண்டும் அவள் ஃபேஸ் புக் பக்கத்துக்கு சென்று பார்த்தேன்..  அது பொய்யாக இருக்குமோ என்று தேடினேன்… ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.  அத்தனை வாழ்த்துக்களுக்கும் அடுத்த நொடியே தேங்க் யூ என்று பதிலளித்துக் கொண்டிருந்தாள்.   என்ன வசந்தி சொல்லவேயில்லை என்று போட்டவர்களுக்கு…. எங்கள் இருவருக்குமே இது சர்ப்ரைஸ் என்று பதிலளித்திருந்தாள். ஃபேஸ் புக்கைப் பார்க்க பார்க்க என் கோபமும், ஆற்றாமையும், சோகமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது போலிருந்தது. 

செல்போன் வேறு சைலென்டில் டர்ர்ர்ர் என்று அதிர்ந்து கொண்டே இருந்தது.  எடுத்து சுவிட்ச் ஆப் செய்து விடலாம் என்று எடுத்தேன்.   14 மெசேஜ்கள் வந்திருந்தன. சாரி என்று அவள் ஏதாவது மெசேஜ் அனுப்பியிருப்பாள் என்று எதிர்ப்பார்த்து எடுத்துப்பார்த்தேன்.  எல்லா செய்திகளும் வாழ்த்துக்களாகவே இருந்தன… “கங்க்ராஜுலேஷன்ஸ்… ஃபென்டாஸ்டிக் வொர்க்..”. இன்று என்ன தினம் என்பது அப்போதுதான் உறைத்தது.   டி.வியைப் போட்டேன்.  எல்லா சேனல்களிலும் கதிரொளியில் நான் எழுதிய ஸ்டோரி பற்றித்தான் விவாதம் நடந்து கொண்டிருந்தது.  

அனைத்துச் சேனல்களிலும் சிங்காரவேலு மற்றும் நீதிபதி வேலாயுதம் கடுமையாக விவாதிக்கப்பட்டார்கள்.   என்னுடைய உழைப்பால் வெளியான செய்திகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  சிங்காரவேலுவின் வரலாறு முழுக்க தோண்டியெடுத்து விலாவாரியாக விவாதித்தனர்.   சிங்காரவேலு, சுதந்திர இந்தியா சந்தித்திராத மோசமான எதிரி என்பதைப் போல சித்தரித்தனர். பல்வேறு ஊழல்களில் சிக்கியிருந்த சிங்காரவேலு, தொடர்ந்து தப்பித்துக் கொண்டே வந்திருக்கிறார்… ஆனால் இந்த முறை அவர் தப்புவது கடினம் என்று கூறினார்கள்.   

பிரதான எதிர்க்கட்சி ப்ரஸ் மீட் வைத்தார்கள்.  சிங்காரவேலு மீதான தாக்குதல் கடுமையாக இருந்தது.  சிங்காரவேலுவின் அயோக்கியத்தனங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக பிரதமர் பதவி விலக வேண்டுமென்றார்கள்.  சிங்காரவேலுவுக்கு அவர் கட்சித் தலைமையின் முழு ஆதரவு இருப்பதால்தான் அவர் இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார் என்றார்கள். எதிர்க்கட்சியினரின் ப்ரஸ் மீட் முடிந்த உடனேயே சிங்காரவேலுவின் கட்சி செய்தித் தொடர்பாளர் பேசினார்.   விபரங்கள் என்ன என்பது தெரியாமல் உடனே சிங்காரவேலுவைப் பதவி விலகச் சொல்வது தவறு என்றார்.  சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.   அவர் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொன்னதே சிங்காரவேலுவுக்கு பின்னடைவு என்று கூறின ஊடகங்கள். அர்நப் கோஸ்வாமி, பிரசவ வேதனையில் கத்தும் தாயைப்போலவே பேசினான்.  “தி மினிஸ்டர் ஹேஸ் மெனிப்யுலேட்டட் ஜுடிஷியரி… ஹவ் கேன் தி நேஷன் டாலரேட் திஸ்” என்றான்.  அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.  

ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றலாம் என்று எத்தனித்தபோது கையில் தூக்க மாத்திரை ஸ்ட்ரிப் தட்டுப்பட்டது.   ச்சை… ஒரு நொடியில் சாக இருந்தேனே…  எத்தனை பெரிய சாதனையைச் செய்திருக்கிறேன்… என் கட்டுரையை இந்தியாவே விவாதித்துக் கொண்டிருக்கிறது. எல்லா அதிகாரங்களும் உள்ள ஒரு மத்திய அமைச்சர் ஊடகங்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.  யாருமே அசைக்க முடியாது என்று கருதிய ஒரு அரசியல்வாதியின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.  இவையெல்லாம் நடப்பதற்கு காரணமான நான்,  எப்போது சாகலாம் என்று கையில் தூக்க மாத்திரையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்….

வெட்கமாக இருந்தது. அவமானமாக இருந்தது….  இப்படி ஒரு சாதனையைச் செய்து விட்டு நான் செத்திருந்தால் சிங்காரவேலு மிரட்டி செத்துவிட்டேன் என்றல்லவா கருதியிருப்பார்கள். இவள் செய்த துரோகம் யாருக்குத் தெரியும்.. எவ்வளவு கோழைத்தனமான முடிவெடுக்க இருந்தேன்…  

தூக்க மாத்திரையை மேசையில் விட்டெறிந்தேன்.  நான் ஏன் சாக வேண்டும்.. ?  ஏமாந்து விட்டேன்… உண்மைதான்.. அதற்காக நான் சாக வேண்டுமா…. தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்த விவாதங்கள் நான் வாழ்வதின் பொருளை உணர்த்தியது போலிருந்தது…  

டிவியைப் பார்த்துக் கொண்டே, அன்று முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.  மாலை ஆனது.  இரவு ஒரே ஒரு தூக்க மாத்திரையைப் போட்டேன்.  உறக்கம் வராததால் இன்னொன்றைப் போட்டேன்.   காலையில் எழுந்து பார்த்தால் 95 மிஸ்டு கால்கள் இருந்தன.   எந்தக் காலையும் திருப்பி அழைக்கவில்லை. உள் மனது “சாரி” என்று ஒரு மெசேஜாவது வசந்தி அனுப்பியிருப்பாளா என்று தேடியது.  எந்த மெசேஜும் இல்லை.

மறுநாள் செய்தித்தாள்கள் முழுக்க சிங்காரவேலு செய்திதான். நீதிபதி வேலாயுதம் நீதிபதியாக இருக்கும்போதே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பெயர் கூற விரும்பாத ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.  ஆளுங்கட்சித் தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி, “தி ஹீட் ஈஸ் டூ மச். ஹி ஹேஸ் பிகம் ய லய்யபிலிட்டி” என்று கருத்து தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.   அன்று மதியம் சிங்காரவேலு தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று அறிவிக்கப்பட்டது.  அன்று இரவு, ஒரு நபர் விசாரணை ஆணையத்திலிருந்து வேலாயுதம் ராஜினாமா செய்ததாக அறிவிப்பு வெளியானது.  எடிட்டர் ”கங்க்ராஜுலேஷன்ஸ். வி ஹேவ் நெயில்ட் ஹிம்” என்று செய்தி அனுப்பினார்.  அவருக்குப் பதில் அனுப்பக் கூட தோன்றவில்லை. 

மறுநாள் காலையில்தான் பதில் அனுப்பினேன். 

எப்படியாவது அவளை மறக்க வேண்டும் என்று முயன்றாலும் அவள் ஏற்படுத்தியிருந்த வலி தாங்க முடியாததாக இருந்தது.

வேறு ஏதோ வேலையாக தி.நகர் சென்றபோது கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்ண வருவாளா… என்று தேடினேன். உயர்நீதிமன்றம் சென்றபோது, அங்கே அவள் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வருவாளா என்று தேடினேன்.  எந்த வேலையும் இல்லாமல் எக்ஸ்ப்பிரஸ் அவென்யூ சென்று நாங்கள் சுற்றித் திரிந்த இடங்களில் அமர்ந்திருந்தேன்.   பெண்கள் ஆடை விற்கும் கடைகளில் உள்ள ட்ரையல் ரூம் வாசலில் அமர்ந்திருந்தேன்.   எனக்குப் சுத்தமாக பிடிக்காமல் இருந்தாலும் அவளுக்காக சென்ற கேஎப்சிக்கு சென்று சாப்பிட்டேன். அங்கே மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகள் என் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினார்கள். அவர்களின் மகிழ்ச்சியை நான் இனி என்றுமே அனுபவிக்கப் போவதில்லை என்பது உறுத்தி வேதனையை அதிகப்படுத்தியது.   யாராவது புதிதாக கல்யாணம் ஆன ஜோடியைப் பார்த்தால் அவள் நினைவு வந்து வேதனைப்படுத்தியது.   என் வாழ்க்கையே வெறுமையானது போல இருந்தது.

திருமணமாகி அவள் கல்யாண புகைப்படங்களையும் ரிசெப்ஷன் புகைப்படங்களையும் ஃபேஸ் புக்கில் ஏற்றியிருந்தாள்.  கல்யாண மாப்பிள்ளையை கட்டிப் பிடித்தபடியும், அவன் தோள் மீது கைபோட்ட படியும் அவள் ஏற்றியிருந்த புகைப்படங்கள் கோபத்தை விட கழிவிறக்கத்தையே ஏற்படுத்தின.    அவளுக்குத் திருமணமாகி விட்டது என்பது உறைக்கவே பல நாட்கள் ஆனது.   இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், சேர்ந்து கேட்ட பாடல்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் அவளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.   .

கதிரொளியில் எடிட்டர் எனக்கு சொன்னது போலவே சம்பளத்தை இரண்டு மடங்காக்கியிருந்தார்.  அடுத்த ஒரு மாதத்தில் அசோசியேட் எடிட்டராக பதவி உயர்த்தப்பட்டேன்.  புதிய வேலை எல்லா நேரத்தையும் எடுத்துக்கொண்டாலும், அவள் உறுத்திக் கொண்டே இருந்தாள்.   நான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும், இவள் அவள் இல்லை என்பதையே ஞாபகப்படுத்திக் கொண்ட இருந்தார்கள்.

அலுவலக வேலைகள் என் நேரத்தை முழுமையாக எடுத்துக் கொண்டது.  எடிட்டோரியல் மீட்டிங்கில் கதிரொளியை வாரமிருமுறை ஆக்கினால் என்ன என்ற ஆலோசனையை வைத்தேன்.  அனைவரும் செய்யலாம் என்றார்கள்.  ஆனால், எடிட்டர் மட்டும் தயங்கினார்.   தற்போது வாரம் ஒரு முறை வந்தாலும், இதழ் முழுமையும் படிக்கும் அளவுக்கு உருப்படியான செய்திகள் வருகின்றன… ஆனால் வாரமிருமுறை செய்து விட்டு, பக்கத்தை நிரப்புவதற்காகவென்று ஏதாவது செய்திகளை நிரப்புவது கதிரொளியின் பெயரைக் கெடுத்து விடும் என்றார்.   இரண்டு இதழ்களுக்கும் திருப்திகரமாக செய்திகளைத் தருகிறேன் என்று நம்பிக்கை அளித்தேன். அரை மனதோடு ஒப்புக் கொண்டார் எடிட்டர்.  இரண்டு மாதம் கழித்து, கதிரொளி வாரமிருமுறை இதழாகும் என்று திட்டமிட்டோம்.  முதல் இதழில், பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஏதாவது ஒரு செய்தி வேண்டும் என்றார்… 

என் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஒரு தலைவரை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஒருவரின் பேட்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.   கேள்விகளை அடித்து அவர் வழக்கறிஞர் மூலமாக சிறைக்கு கொடுத்து அனுப்பியிருந்தேன்.  அவர் வழக்கறிஞர் இன்று எப்படியும் பதில்களோடு அழைப்பதாகச் சொல்லியிருந்தார். மரண தண்டனையை எதிர்நோக்கி 12 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பதிவு செய்ய வேண்டும்… அந்த நபர் இது வரை பத்திரிக்கைகளுக்கு எந்தப் பேட்டியும் அளித்ததில்லை என்பதால், இந்தப் பேட்டி நிச்சயம் பரபரப்பைக் கிளப்பும்.  பேட்டியை தயார் செய்து, எடிட்டரிடம் காண்பித்து திருத்தி அதை சிறப்பாக உருவாக்க வேண்டும்.    
செல்போன் ஒலித்தது.     

வசந்தி காலிங்….

தொடரும்.

2 comments:

  1. I have been waiting to read each and every episode. Life of a journalist is so interesting when i compare my boring life!!! Great writing style

    ReplyDelete